Sri Mandheeswarar Temple – Nambakkam

ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மாந்தீஸ்வரர் கோயில் – நம்பாக்கம் ,பூண்டி

இறைவன் : மாந்தீஸ்வரர்

இறைவி : மரகதாம்பிகை

ஊர் : நம்பாக்கம் , பூண்டி

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

நான் பூண்டி தேவார பாடல் பெற்ற தலமான  ஊன்றீஸ்வரர் கோயிலை தரிசிக்க சென்றபோது , அக்கோயிலில் தொண்டு புரிந்துகொண்டிருந்த ஒரு அம்மையாரிடம் வேறு எதாவது அருகில் கோயில் உள்ளதா ? என்று வினவினேன் , அதற்கு அவ் அம்மையார் இக்கோயிலை பற்றி சொன்னார்கள் நானும் இக்கோயிலை நோக்கி எனது பயணத்தை தொடங்கினேன் .

பூண்டி ஊரின் பேருந்து நிலையத்தை தாண்டி வலது புறம் ஒரு சாலை சென்றது அதன் வழியாக சுமார் ஒரு 8 km  தொலைவில் பயணித்தால் இவ்வூரை அடையலாம் . வழியெங்கும் வயல்களும் மரங்களும் சூழ்ந்த சிறிய பாதையாக உள்ளது . கண்களுக்கு மிக குளிர்ச்சியாக உடல் மீது குளிர்ந்த காற்று பட்டு என்னை பரவசப்படுத்தியது .

ஊரின் அருகே சென்று அங்கு உள்ளவர்களிடம் விசாரித்து  கோயில் உள்ள இடத்தை நோக்கி சென்றேன் . கோயில் அமைந்துள்ள இடம் இடுகாட்டுக்கு அருகில் உள்ளதால் போகும் வழியே மிக சிறிய பாதையாக இருந்தது .

ஒரு சிறிய  மண்மேட்டின் மீது ஈசனின் மனம் போல் வெள்ளை நிறத்தில் இக்கோயில் தனியாக சுற்றி இயற்கை சூழ்ந்து இருந்தது .

தெற்கு  நோக்கி நுழைவு வாயில் உள்ளது . நுழைவவு வாயிலின் மேல் பகுதியில் ஈசன் ,தாயார் மற்றும் விநாயகர், முருகர் ஆகியோர்களுக்கு சிலை உள்ளது . கோயிலின் உள் பகுதியில் மண்டபம் உள்ளது . அதன் உள் பகுதியில் சென்றால் முன்மண்டபத்தில் கருவறையின் இரண்டு பக்கமும் விநாயகர் உள்ளார். விமானதோடு கூடிய கருவறை , கருவறையில் இறைவன் மாந்தீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . இவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும் . இவர் தலையில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது . இவர் சிறிது வடக்கு புறமாக சாய்ந்த நிலையில் உள்ளார் . இவரை சனீஸ்வர பகவானின் புதல்வன்  மாந்தி வந்து பூஜை செய்ததாகவும் அதனாலேயே இவருக்கு மாந்தீசவரர் என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர் .

இக்கோயிலானது மாந்தி தோஷ பரிகார தலமாக விளங்குகிறது . மாந்தி கிரகம் என்பது சனி கிரகத்துடன் தொடர்புடையதாகவும். சனி பகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இக்கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் காலை 6 .00 மணி முதல் 7 .00 மணி வரை குளிக்கையில் மாந்தி தோஷ பரிகாரமாக 27 நட்சத்திர விளக்கு ஏற்றி வணங்கினால் தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது . தயார் மரகதாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார் .

பழமையான இக்கோயிலில் எந்த காலத்தை சார்ந்தது என்று அறிய கல்வெட்டுகள் இல்லை.  கோயிலை வலம் வரும்போது கருவறை விமானம் இந்து நிலைகளை கொண்ட விமானமாக உள்ளது , விமானத்தில் சரஸ்வதி சிலையை வைத்துள்ளார்கள். கோஷ்டத்தில் இறைவனின் சிலைகள் இல்லை . அப்படியே வலம் வந்தால் பலிபீடம் உள்ளது அதன் முன் நந்தி மண்டபத்தில் உள்ளார் .

கோயிலில் உள்ள தூண்களில் ராமாயண சிற்பங்கள் உள்ளன மற்றும் ஆஞ்சநேயர் ,நரசிம்மர் ஆகியோர் சிற்பங்களும் அத் தூண்களில் உள்ளன .

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/11/sri-mandheeswarar-temple-nambakkam.html

திறந்திருக்கும் நேரம் :

இக்கோயிலானது ஊரின் வெளியே சிறுகிராமத்தில் உள்ளதாலும் அரசின் ஒரு கால பூஜையின் கீழ் வருவதாலும் நீங்கள் இங்கு கொடுக்க பட்ட தொடர்பு என்னை தொடபு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

தொடர்பு எண்: 9080505542 , 044 – 27693559

செல்லும் வழி :

திருவள்ளூரில் இருந்து ஊத்துகோட்டை செல்லும் பாதையில் நெய்வேலி சந்திப்பு வரும் அதில் இருந்து இடதுபுறம் சென்றால் பூண்டி வரும் அங்கிருந்து சுமார் 8 km தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம் .

அருகில் உள்ள கோயில்கள் :

1 . வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் – திருவள்ளூர்

2 . அக்னீஸ்வரர் கோயில்  – நெய்வேலி கிராமம்

3 . ஊன்றீஸ்வரர் கோயில்  – பூண்டி

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply