Sri Mahadevar Temple – Vaikom

ஸ்ரீ மஹாதேவர் கோயில்  – வைக்கம்

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற மற்றும் பழமையான கோயில்களில் முக்கிய இடத்தில் உள்ள கோயிலாகும் இந்த வைக்கம் மஹாதேவர் கோயில் .

இக்கோயில் கிட்டத்தட்ட 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கோயில் வளாகத்தினுள் முக மண்டபம் மற்றும் கர்பகிரஹம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இங்கே கோயில் வளாகத்தில் இருந்து நேரடியாக சிவபெருமானை வழிபட முடியாது. காமம், குரோதம், மோகம் போன்றவற்றை குறிக்கும் ஆறு படிகளை கடந்த பிறகே வைக்கம் மகாதேவரை வழிபட முடியும் படி இக்கோயில் அமைப்பு உள்ளது.

இக்கோயிலின் மூலவராக இருக்கும் சிவபெருமான் வைக்கத்தப்பன் என்றழைக்கப்படுகிறார். கோயில் கருவறையில் உள்ள ஈசன் இரண்டு அடி பீடத்தில் நான்கு அடி உயரத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

வியாக்ரபாதர் மேடை

இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை “வியாக்ரபாதர் மேடை” என்று அழைக்கிறார்கள்.

வன துர்க்கை :

கோயிலின் தெற்கு பகுதியில் வனதுர்க்கை சன்னதி உள்ளது .  வியாக்ரபாதர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் போது ஒரு அரக்கி அவரை தொந்தரவு செய்துகொண்டே இருந்தாள், அவளுக்கு பாவ விமோசனம் வேண்டி கணபதியை வேண்டினார் , விநாயகரும் திரிசூலத்தை அனுப்பி அவரை மூன்று துண்டுகளாக ஆக்கினார் , அவளின் உடல் விழுந்த இடத்தில் வனதுர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . விநாயகர் அருகிலேயே இருக்கிறார் .

தல புராணம் :

சிவபெருமானின் பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டிக் கடுந்தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, ‘இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவனைப் பின் தொடர்ந்து செல்லும்படி புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் அனுப்பி வைத்தார்.

ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயிலும் எடுத்துக் கொண்டு சென்ற அசுரன், பயணக் களைப்பால் சிறிது ஓய்வு பெறுவதற்காக வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு கீழே வைத்த சிவலிங்கத்தை அவன் எடுக்க முயன்றான். ஆனால், அது முடியாமல் போனது.

அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கிக் கொண்டார். அவர் அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏற்ற மானூர் என்னும் இடத்தில் சென்ற போது இடது கையில் இருந்த சிவலிங்கத்தை அங்கே மேற்கு நோக்கி நிறுவி வழிபாடு செய்தான். பின்னர் வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை கடித்துருத்தி என்ற இடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டான். இதன் மூலமாக அவனுக்கு முக்தி கிடைத்தது.

பிற்காலத்தில் பரசுராமர் வான்வழியில் வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கீழே இறங்கி வந்த பரசுராமர், அந்தச் சிவலிங்கத்திற்காக பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினார். இவ்வரலாற்று செய்தியானது பார்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வைகத்தஷ்டமி:

வைக்கம் கோயிலில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ‘வைகத்தஷ்டமி’ என்ற விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பன்னிரண்டு நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் அதிகாலை 4 .00 மணி முதல் 8 .00 மணி வரை வழிபடவேண்டும் . இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தார் .இந்நாளில் லிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள் பட்டு சூரியபூஜை நடத்தப்படும் .

சூரபத்மன் , தாரகாசூரனை வாதம் செய்து முருகன் வெற்றி பெற , வைக்கத்தஷ்டமி அன்று சிவனே இங்கு வந்து அன்னதானம் செய்தார் . இங்கு அன்னதானம் செய்தால் நினைத்தது நிறைவேறும் , அன்னதானத்தில் சிவன் ,பார்வதி பங்கேற்பதாக ஐதீகம் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 4 .00  மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 8 .30 மணி வரை .

English :

The Sree Vaikom Mahadeva Temple is a temple dedicated to the God shiva in kolam, Kerala. In Vaikom, Shiva is fondly called as Vaikkathappan, the lord of Vaikom. he temple architecture is also striking. Though the Sreekovil . appears circular externally, this is the only temple in Kerala with an oval-shaped Sreekovil. The first chamber of the shrine is built in stone and a single piece of wood. The sanctum sanctorum is built in stone, including the roof.

செல்லும் வழி :

எர்ணாகுளத்தில் இருந்து 34 km  தொலைவில் உள்ளது . ஊரின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது . எர்ணாகுளத்தில் இருந்து ரயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :

1 . கடித்துருத்தி மஹாதேவர் கோயில் ( 17 KM )

2 .  ஏற்றமானூர் மஹாதேவர் கோயில் (29 KM )

திருச்சிற்றம்பலம்

Leave a Reply