ஸ்ரீ ஊன்றீஸ்வரர் கோயில் – பூண்டி , திருவெண்பாக்கம்
இறைவன் : ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர்
இறைவி :மின்னொளி அம்பாள், தடித்கௌரி
தல விருட்சம்:இலந்தை
தீர்த்தம்:குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்
புராண பெயர்: திருவெண்பாக்கம்
ஊர்:பூண்டி
மாவட்டம்:திருவள்ளூர்,தமிழ்நாடு
பாடியவர்கள்:
சுந்தரர்
தேவார பதிகம் :
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
பாடல் : சேக்கிழார்
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்தருளும்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரை
கொண்ட வெந்துயர் களைஎனப் பரவிக்
குறித்தகாதலின் வண்டு கண்ட காயும்
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தேவார தலங்களில் 17 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 250 வது தலமாகும் .
கோயில் அமைப்பு :
இக்கோயிலானது பூண்டி செல்லும் வழியில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு கிழக்கு மற்றும் தெற்கு பார்த்த இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன . அதிகமாக மக்கள் தெற்கு வாயிலேயே பயன்படுத்துகிறார்கள் . தெற்கு வாயில் முகப்பில் அன்னையின் சுதை சிற்பம் உள்ளது , உள்ளே நுழைந்தவுடன் இடது புறத்தில் தற்போதைய காலத்தில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் உள்ளது , இப்போது நாம் தெற்கு நோக்கிய அம்பாளின் வாசலை காணலாம் , நாம் வலது புறமாக சென்றால் கிழக்கு நோக்கிய வாசல் உள்ளது , அதன் முன் பலிபீடம் ,கொடிக்கம்பம் மற்றும் நந்தி மண்டபத்தை தரிசிக்கலாம் , ஒரு நிலை கோபுர வாசல் வழியாக நாம் உள் நுழைந்தால் நேராக இறைவன் சன்னதியை காணலாம் .
இறைவனின் கருவறை உள்ள முன் மண்டபத்தில் இடது புறம் பாலா விநாயகர் உள்ளார் , கருவறை முன்பு துவாரகபாலகர்கள் உள்ளார்கள் . கருவறை முன் உள்ள நந்தி ஒரு கொம்பு உடைந்து காணப்படுகிறது இது சுந்தரரால் வீசப்பட்ட ஊன்றுகோலால் உடைத்துபோனதாக வரலாறு கூறுகிறது . நந்தி அருகே சுந்தரர் சிலை கண்பார்வை அற்று ஊன்றுகோல் ஊணியபடி இருக்கிறார் .
இறைவன் சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். இறைவனுக்கு பின்னால் ஸ்வாமி ,அம்பாள் பஞ்சலோக சிலைகள் உள்ளன .
உள் பிரகாரத்தை வளம் வந்தால் விநாயகர் ,வள்ளி தெய்வானை சமேத முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி சன்னதிகள் உள்ளன . கருவறை கோஷ்டத்தில் கணபதி ,தட்சணாமுர்த்தி ,லிங்கோத்பவர் ,பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளார்கள் .
அப்படியே வளம் வந்தால் தாயார் மின்னொளியம்மை சன்னதியை அடையலாம் . கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாக தோன்றி வழிகாட்டியதால் இவருக்கு மின்னொளியம்மை என்ற பெயர் ஏற்பட்டது .
முன்மண்டபத்தில் நவகிரஹ சன்னதி 63 நாயன்மார்கள் சிலைகள் ஆகியவைகள் உள்ளன . கொடிக்கம்பத்தின் வலது புறத்தில் காலா பைரவர் தனி சன்னதியில் உள்ளார்.
கோயில் வரலாறு :
சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் , திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை இறைவன் முன்பு தான் இவ்வூரை விட்டும் உன்னை விட்டும் எங்கும் செல்லமாட்டேன் என்று இறைவன் முன்பு வாக்குறுதி கொடுத்து திருமணம் செய்துகொண்டார் .
வாக்குறுதி தவறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூர் புறப்பட தயாரானார் அவர் ஊர் எல்லையை கடக்கும்போது இறைவன் அவர் கண்களை பறித்தார் , சுந்தரர் தன் தவறை உணர்ந்து திருமுள்ளவயலில் உள்ள கோயிலில் வணங்கிவிட்டு திருவெண்பாக்கம் கோயிலுக்கு வரும்போது உமையவள் அவருக்கு மின்னலாக ஒளிஅமைத்து வழிகாட்டினால் , இதனலாலேயே இவருக்கு மின்னொளியம்மனை என்ற பெயர் ஏற்பட்டது .
திருவெண்பாக்கம் அடைந்து இறைவனிடம் அழுது புலம்பி முறையிட்டு புலம்பி “நீ கோயிலில் உளாயோ ?” என மிகவும் மனம் நொந்து வினவினார் . அதற்கு இறைவன் “உளோம் போகீர்” அதாவது இருக்கிறேன் போய்வாருங்கள் என அயலார் போல் கூறி கண்ணொளி இழந்த சுந்தரருக்கு ஊன்றுகோல் ஒன்றை வீசியருளினார் . இதனாலேயே இவருக்கு ஊன்றீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது .
கண் வேண்டிய சுந்தரருக்கு இறைவன் கண்ணை அளிக்காமல் ஊன்றுகோலை அளித்ததால் , சுந்தரர் கோபித்துக்கொண்டு அக்கோலை வீசியெறிய அது இறைவன் முன் படுத்திருந்த நந்தியின் கொலம்பில்பட்டது , இதனால் கொம்பு ஒடிந்த பாலநந்தி இன்றும் ஒற்றை கொம்புடன் இத்தலத்தில் உள்ளார் .
அம்பாள் சுந்தரரிடம், “மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள்.தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும் என்று கனிவாக கூறினாள்.
பின்னர் இத்தலத்தை விட்டு சென்று சுந்தரர் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரை பாடி இடக்கண்ணையும் , திருவாரூர் தியாகராசரை பாடி வலது கண்ணையும் பெற்றதாக வரலாறு உண்டு .
பழைய கோயில் ‘திருவிளம்பூதூரில் ‘ இருந்தது, இவ்வூர் குசஸ்தலையாற்றின் கரையில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப் பத்திகாரண்யம் என்றும் பெயருண்டு. (இலந்தை மரக்காட்டுப் பகுதி). சென்னையின் குடிநீர்த்தேவையைப் போக்க, குசஸ்தலையாற்றில் அணையைக்கட்ட 1942-ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டு, அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக்கொண்டபோது அப்பகுதியில் திருவிளம்பூதூரும் அடங்கிற்று. அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு. எம். பக்தவச்சலம் அவர்கள் மற்றும் அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு உத்தண்டராமப் பிள்ளை ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு, 05-07-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லிற்பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுகள் :
திருவிளம்புதூர் கோயிலில் இருந்த கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு இக்கோயிலில் பதிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும் . இக்கல்வெட்டுக்கள் முதலாம் இராசராசன் காலத்தியவை. கல்வெட்டில் இறைவன் பெயர் “‘ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஈக்காட்டுக் கோட்டத்துப் பெருமூர் நாட்டு உடையார், திருவுளோம் போகி உடைய நாயனார் ” என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தி விளக்கு வைத்த நிபந்தம், பூஜைக்கு நிலம் வைத்த நிபந்தம், சுவாமி அமுதுக்கு நிலம் விடப்பட்ட நிபந்தம் முதலியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பரிகாரம் :
வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள் , வாழ்க்கையின் மீது வெறுப்பு உள்ளவர்கள் ,மன உளைச்சலில் உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள இறைவனை தரிசித்தால் அவர்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது . மற்றும் தன் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இத்தல இறைவன் அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி அவர்களை இருண்ட வாழ்க்கையில் இருந்து மீட்பாள் என்ற நம்பிக்கை உள்ளது .
Photos :
https://alayamtrails.blogspot.com/2022/08/sri-oondreeswarar-temple-poondi.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 06 .00 முதல் 11 .00 மணி வரை , மாலை 05 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை .
Contact நம்பர் : 044 -27693559 , 27639725
செல்லும் வழி :
இக்கோயிலானது திருவள்ளூரில் இருந்து சுமார் 12 km தொலைவில் ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது . நெய்வேலி என்ற கிராமத்தின் சந்திப்பில் இருந்து இவ்வூர் செல்லும் வழி இருக்கிறது .திருவள்ளூரில் இருந்து தடம் எண் T20 , T52 ,52 ,T41 ,111P ,115 ஆகிய பேருந்துகள் செல்கின்றன .
அருகில் உள்ள தலம்:
1 . ஆதி அகத்தீஸ்வரர் கோயில் – நெய்வேலி
2 . வாசீஸ்வரர் கோயில் – திருப்பாசூர்
Location :
திருச்சிற்றம்பலம்