Sri Yelagirishwar And Sri Kalyana Venkataswamy Perumal Temple – Yelagiri

ஸ்ரீ ஏலகிரிஸ்வரர் மற்றும் கல்யாண வேங்கடசுவாமி பெருமாள் கோயில் – ஏலகிரி

சென்னைக்கு அருகில் உள்ள சுற்றுலா இடங்களில் ஏலகிரி மலை தனி சிறப்பை கொண்டது . இவ் மலையானது ஏழைகளின் ஊட்டி என்று சொல்லுவார்கள் .  அதிகம் செலவு வைக்காமல் குடும்பத்துடன் பட்ஜெட் சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற இடமாகும் .

ஏலகிரி மலை :

நான்கு மலைகளால் சூழப்பட்ட ஒரு சுற்றுலா தலமாகும் . கீழ் மட்டத்திலிருந்து 14 கொண்டைஊசி வளைவுகளை கடந்து இவ் மலைக்கு செல்லவேண்டும் .  இவ் கொண்டைஊசி வளைவுகளுக்கு பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், கபிலர், அவ்வையார், பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நல்லி, பேகன் ஆகிய தமிழ் பெயர்களை தாங்கி இருக்கின்றது .

இவ் ஏலகிரி மலையில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

1 . பூங்கானுர் ஏரி

2 . சிறுவர் பூங்கா

3 . சலகாம்பாறை அருவி

4 . அரசு மூலிகை பண்ணை

5 . சுவாமி மலை (மலையேற்றத்திற்கு உகந்த இடம் )

6 . தொலைநோக்கி இல்லம்

7 . நிலாவூர் ஏரி

8 . முருகன் கோயில்

9 . பெருமாள் கோயில்

10 . சிவன் கோயில்

சிவன் கோயில் :

நாம் எங்கு சுற்றுலா சென்றாலும் அவ் சுற்றுலா இடங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று பார்ப்பது என்பது தனி சுகம் . ஏனனில் கோயில்களே அவ்வூரின் பழமையையும் , கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கின்றன .

சிவன் கோயிலானது ஏலகிரி மார்க்கெட் பகுதியில் இருந்து சுமார் 3 km  தொலைவில் உள்ளது , கோயிலுக்கு போகும் வழியானது ஒரு கார் போகும் அளவே சாலையும் உள்ளது.

சிவன் கோயிலை தற்போதுதான் புதுப்பித்து கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள் . கோயிலுக்கு அருகில் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளை கடந்து மேலே சென்றால் கிழக்கு மற்றும் மேற்கை நோக்கி இரண்டு  பெரிய நந்தி உள்ளது . கிழக்கு பகுதியில் உள்ள மலையின் மீதே பழமையான சுயம்பு லிங்கம் உள்ளதாக கூறினார்கள் , அவரை தரிசிக்க நாம் மலையை நோக்கி மலையேற்றம் செய்யவேண்டும் . இவரை நோக்கியே ஒரு நந்தி உள்ளது .

கோயிலுக்கு முன் ஒரு பெரிய பாறையில் சிவன் மற்றும் பார்வதி தேவி அமர்ந்திருக்கும் சிலையை பிரமாண்டமாக அமைத்துள்ளார்கள். அவருக்கு அருகே உள்ள ஒரு பாறையின் மீது ரிஷிகளும் , மகரிஷிகளும் தவம் இருப்பது போல் சிலைகளை நிறுவியுள்ளார்கள், எல்லாவற்றையும் சேர்த்து நாம் பார்த்தால் ஒரு கைலாய காட்சியை போல் மிக அற்புதமாக அமைந்துள்ளார்கள் .

இப்பொது நாம் கோயிலுக்கு செல்வோம் , கோயில் உள் நுழைந்தால் கொடிமரம் நந்தி ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் , பின்பு இடது புறத்தில் வரசித்தி விநாயகர் தனி சன்னதியில் உள்ளார் . அவரை வணங்கிவிட்டு ஈசனின் சன்னதியில் சென்றால் , ஈசன் ஏலகிரீஸ்வரர் தனி சன்னதியில் உள்ளார் , அவர் அமைந்துள்ள சன்னதியானது ஒரு வித்தியாசமான அமைப்பை கொண்டதாக அமைத்துள்ளார்கள் . மலையை சார்த்த இடமாக இருப்பதால் என்னவோ கேரளா கட்டிட பாணியில்  அமைந்துள்ளது என்று நினைக்கிறன் . பார்ப்பதற்கு மிக அழகாக அமைந்துள்ளது , இறைவன் கருவறையில் லிங்கமாக உள்ளார் அவர் பின்புறத்தில் இறைவன் இறைவி சுதை சிற்பமும் உள்ளது , இறைவனை சுற்றி கற்களால் புதைத்து ஒரு வித்தியாசமான அமைப்பாக உள்ளது .

அவரை வணங்கிவிட்டு கோயிலை வலம் வந்தால் வள்ளி ,தெய்வானை சமேத சுப்ரமணியர் தனி சன்னதியில் உள்ளார்.

பெருமாள் கோயில் :

ஏலகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள இடத்தில இருந்து வலது புறம் திரும்பி சென்றால் பெருமாள் கோயிலை அடையலாம் . பெருமாள் கோயில் ஒரு பள்ளமான இடத்தில் இருக்கிறது . இறைவன் பெயர் – கல்யாண வேங்கடரமண பெருமாள் , தாயார் – ஏலகிரி தாயார் .

கோயிலுக்கு முன் கோசாலை உள்ளது , படிக்கட்டு அருகில் தும்பிக்கை ஆழ்வார் உள்ளார் . கோயிலுக்கு உள் நுழைந்தால் மிகப்பெரிய முன்மண்டபத்தை காணலாம், இடதுபுறத்தில் ஒரு தொட்டி அமைத்து அதில் நீரை நிரப்பி அதில் கிருஷ்ணர் நாகத்தின் மீது காளிங்க நடனம் ஆடுவது போல் சிலையை அமைத்துள்ளார்கள்  , நேரே பெருமாள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு சேவை தருகிறார் . அவர் பார்பதெற்க்கு திருப்பதி பெருமாளை போல் மிக பிரமாண்டமாக இருக்கிறார் .

அவரின் வலது புறத்தில் தாயார் ஏலகிரி தாயார் தனி சன்னதியில் உள்ளார். பெருமாளின் இடது புறத்தில் ஆண்டாள் நாச்சியார் தனி சன்னதியில் உள்ளார் . இவ் சன்னதிக்கு அருகில் ஒரு படிக்கட்டு உள்ளது அதன் வழியாக மேலே சென்றால் ஆழ்வார்கள் சன்னதி ,ஆஞ்சநேயர் சன்னதி ,சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் ஆதிமூல பெருமாள் சன்னதி உள்ளது .

ஏலகியில் உள்ள இந்த இரண்டு கோயில்களும் மிக அழகாக உள்ளது மற்றும் இவ்வூரில்  இது போன்று முருகன் கோயில் மற்றும் நிறைய கோயில்கள் உள்ளன அவைகளையும் நாம் சென்று வணங்கி இறைவனின் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/11/yelagirishwar-and-sri-kalyana.html

திறந்திருக்கு நேரம் :

காலை 7 .30 முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 4 .00 முதல் இரவு 8 .00 வரை .

 contact  details – 9444163542 , 8939080307

செல்லும் வழி :

திருப்பத்தூரில் 30 கி.மீ தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 கி.மீ தூரத்திலும், பெங்கலூரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும், ஏலகிரி மலை உள்ளது. சென்னையில் இருந்து ரயிலில் செல்ல கோவை செல்லும் ரயிலில் சென்று ஜோலார்பேட்டை நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து அல்லது காரில் செல்லலாம் .

Location :

Sivan Temple –

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *