Sri Vaikuntanatha Perumal Temple – Srivaikuntam

ஸ்ரீ வைகுண்டநாதர் கோயில் – ஸ்ரீவைகுண்டம்

Sri Vaikuntanatha perumal temple- Srivaikuntam

மூலவர்:    வைகுந்தநாதன்

உற்சவர்:    கள்ளபிரான் ,ஸ்ரீசோரநாதர்

தாயார்:    வைகுண்டவல்லி, பூதேவி உற்சவர் தாயார்: ஸ்ரீசோரநாயகி

தீர்த்தம்:    பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி

தல விருச்சம் : பவள மல்லி

கோலம் : நின்றகோலம்

ஊர் : ஸ்ரீவைகுண்டம்

மாவட்டம் : தூத்துக்குடி , தமிழ்நாடு

மங்களாசனம் : நம்மாழ்வார்

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று

தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி

நளிந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

பனிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.

நம்மாழ்வார்

தென் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒன்பது வைணவ தலங்களை நவதிருப்பதி என்று அழைக்கிறார்கள் , இவை எல்லாம் மிக அருகருகே அமைந்துள்ளது . இக்கோயில்களை நவக்கிர பெயர்களால் வரிசைப்படுத்தியுள்ளார்கள்.

இதில் முதலாக வருவது சூரிய தலமான ஸ்ரீவைகுண்டத்தில் வீற்றியிருக்கும் வைகுண்டநாத பெருமாள் ஆவார் . இக்கோயிலானது 108 திவ்ய தலங்களில் 81 வது திவ்ய தலமாகும் . இவரை நம்மாழ்வார் மங்களாசனம் செய்துள்ளார்.

திருவைகுண்டம் என்ற இந்த ஊர் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு ஊர் ஆகும் ஏனினில்  வைகுண்டத்தில் உறையும் மஹாவிஷ்ணு இவ் ஊரில் வைகுண்டநாதராகவும் ,  கைலாயத்தில் வீற்றியூருக்கும் என்னப்பன் இத்தலத்தில் கைலாசநாதராக இங்கு இருப்பது ஆக கைலாயமும் , வைகுண்டமும் ஒரே இடத்தில இருக்கும் ஒரு அற்புத ஊர் .

கோயிலின் அமைப்பு :

அழகிய சிறு கிராமத்தில் ஒன்பது நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 110 அடி உயரத்துடன் நிறைய சுதை சிற்பங்களால் மிக பிரமாண்டமாக காட்சி தருகிறது .

கோயிலின் ராஜகோபுரத்திற்கு முன் மிக பிரமாண்டமான மண்டபம் உள்ளது , அதை தாண்டியே நாம் இராஜகோபுரத்தை அடையமுடியும் , இராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் மிக பெரிய விசாலமான மண்டபம் உள்ளது  அங்கே கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் . இடதுபுறத்தில் ஒரு அழகிய மண்டபமும், வலது புறத்தில் “திருவேங்கடமுடையான்” சன்னதி உள்ளது .

அடுத்த வயலின் வழியாக உள்ளே சென்றால் மிக அற்புதமான அதிக வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை தாங்கிய தூண்களை கொண்ட மாநடப்பதை காணலாம் . மிக அற்புதமாக செதுக்கப்பட்ட  யாளிகளை நாம் நம் கண்ணை சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் .

வைகுண்டநாதர்

இங்கு நடுநாயகமாக இறைவன் வைகுண்டநாதர் சன்னதி உள்ளது . பெருமாள்  இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். கையில் தண்டம் இருக்கிறது.எப்போதும் ஆதிசேஷன் மீது படுத்தபடி காட்சி தரும் வைகுண்டநாதர் இத்தலத்தில் வைகுண்டநாதருக்கு  தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். சுவாமியுடன் தாயார்கள் கிடையாது. சங்கு, சக்கரம், கதை ஆகியவை ஏந்தியபடி, அபயமுத்திரை காட்டி கிழக்கு முகமாக காட்சியளிக்கிறார். இவருக்கு தினமும் இங்கு பாலால் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.

பெருமாளின் வலது புறத்தில் வைகுந்தநாயகியும் தாயாரும்  , இடது புறத்தில் சோரநாதநாயகி தாயாரும் தனி தனி சன்னதியில் பக்தர்களுக்கு தன் அன்பை வாரி தருகிறார்கள் .

பெருமாள் சன்னதியின் முன்மண்டபத்தில் வடக்கு நோக்கியபடி  பழைய கருடவாகனம் உள்ளது. மிகவும் பழைமையான இக்கருடனுக்கு சந்தனம் பூசி காப்பு செய்துள்ளார்கள்.

கோவிலுக்குள் கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர், மணவாள மாமுனிகள், பன்னிரு ஆழ்வார்கள், ராமர் ஆகியோரின் சன்னதியும், வடக்கே பரமபதவாசலும் அமையப்பெற்றுள்ளது.

கள்ளனாக வந்த பெருமாள் :

வைகுண்டநாதர் பக்தனான காலதூஷகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோவில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான். ஒருசமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்றபோது, அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். காலதூஷகனைத் தேடி அரண்மனை சேவகர்கள் வந்தனர். இவ்வேளையில் இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார். மன்னன் முன் நின்றவர், “”மன்னா! நான் திருடியதாக குற்றம் சாட்டுகிறீர்களே! எதற்காக திருடினேன் என்று தெரியுமா? நாட்டில் ஒருவனுக்கு பணப்பற்றாக்குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். என்னிடம் பொருள் இல்லாததால்தான் நான் திருடினேன். ஆகவே, என்னை என குற்றப்படுத்த முடியாது,” என்றார். இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படி தைரியமாகப் பேச முடியாது எனப்புரிந்து கொண்டு, வந்திருப்பது யார் எனக்கேட்டார். சுவாமி தன் சுயரூபம் காட்டியருளினார். மன்னன் உண்மை அறிந்து மன்னிப்பு வேண்டினான். திருடன் வடிவில் வந்ததாலும், பக்தர்களின் உள்ளங்களை கவரும் அழகுடன் இருப்பதாலும் சுவாமிக்கு, “கள்ளபிரான்’ என்ற பெயர் ஏற்பட்டது.

இதற்கு ஏற்றாற்போல் இங்குள்ள உற்சவர் கள்ளபிரான் சாமுத்திரிகா லட்சணப்படி செல்வ செழுமை கொண்டவர்கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். அதுபோலவே இங்கு கள்ளர்பிரானின் கன்னத்தில் குழி விழுந்து காணப்படுகிறார் .

தலபுராணம் :

பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் .

வைகுண்ட நாதருக்கு பால்பாண்டி என்ற பெயர் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் வழிபாடு இன்றி மறைந்து போனது. மேலும் சுவாமி விக்கிரகமும் ஆற்றங்கரையில் புதைந்திருந்தது. அதே சமயம் மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தினமும் ஓரிடத்தில் இருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்த பாண்டிய மன்னர், அவ்விடத்தை ஆராய்ந்து சுவாமி விக்கிரகம் இருந்ததை உணர்ந்து, கோயில் எழுப்பினார். தினமும் திருமஞ்சனத்துக்கு பால் அளித்தார் பாண்டிய மன்னர். இதன் காரணமாக பெருமாளுக்கு பால் பாண்டி என்ற பெயர் கிட்டியது.

திருவேங்கடமுடையான் சன்னதி :

முன்மண்டபத்தின் வடக்கே தென்திசை நோக்கியபடி அமைந்துள்ளது இந்த சன்னதி . மிக அற்புதமான வேலைப்பாடுகள் தன்னுள் தாங்கி நிற்கிறது . வரிசையாக யாளி உள்ள தூண்கள் , ஒவ்வொரு தூண்களிலும் விதவிதமான அழகிய சிற்பங்கள் ,மண்டபத்தின் மேல் பகுதியில் சுற்றிலும் பெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களின் பெருமாள் வடிவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. .

 குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம், மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும் உலகளந்த பெருமாள் சிற்பம், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம், கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபமாக அமையப்பெற்றுள்ளது. இவை அனைத்தும் நாயக்கர் காலத்தை சார்ந்ததாகும் . இந்தமண்டபத்தில் நம்மாழ்வார் ஆண்டுதோறும் சித்திரை ப்ரம்மோத்சவத்தின் 5 ம் திருவிழா அன்று இங்கு எழுந்தருளி சேவை சாதிப்பார் .

மணித்துளி தரிசனம் :

வைகுண்ட ஏகாதசி தினத்தில் உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்துக்குள் கொண்டு செல்வர். அப்போது சந்நிதி அடைக்கப்பட்டிருக்கும். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே நடை சாத்தப்படும். இந்த ஒரு சில மணித்துளிகளே இந்த வைபவம் நடைபெறும். இந்த தரிசனம் கண்டால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக ஐதீகம்.

இங்கு சித்திரை மாதம் ஆறாம் நாளிலும், ஐப்பசி மாதம் ஆறாம் நாளிலும், கருவறையிலுள்ள வைகுண்டநாதர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பம்சம்.ஆக நவதிருப்பதிகளுள் சூரியன் தலமாக விளங்கும் இங்கு பெருமாளை, சூரியனை வழிபடுவது கூடுதல் சிறப்பு.

கி.பி.1801ம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட போது இத்திருக்கோயிலை கோட்டையாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கல்வெட்டுகள் :

இங்கு பல கல்வெட்டுகள் உள்ளன . அவற்றில் ஒரு கல்வெட்டில் திருவரங்கப்பெருமான் பல்லவராயர் என்பவர் தான் இங்கு வைகுந்தநாயகி தாயாரை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறது. மேலும் இக்கல்வெட்டுப்படி இங்குள்ள பெருமாளின் திருநாமம்., “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளபிரான்” என்று சிறப்பித்து கூறுகிறது.

திருவிழாக்கள் :

இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும்.இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.தை முதல் நாளில் உற்சவருக்கு 108 போர்வைகள் அணிவிக்கப்படும்.

More Photos:

https://alayamtrails.blogspot.com/2023/01/sri-vaikuntanatha-perumal-temple.html

English:

Srivaikuntam Sri Vaikuntanathan Perumal Temple, also called ‘Kallapiran Swamy Temple’ is one of the ‘108 Divya Desam Temples’ dedicated to God Vishnu .furthermore one of the ‘Nava Tirupathi Temples .Srivaikuntanathan Perumal Temple is a notable sacrosanct place of the planet Sun (Suryan). This temple is located in the Srivaikuntam village, in Thoothukudi district of Tamil Nadu. This temple is believed to be a Pandyan construction. Many rulers of that dynasty and also the Vijayanagar and Nayak kings have contributed to its expansion and improvement, subsequently.

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு

8 .30  மணி வரை

Contact Number:  9865628681 , 99521 62359

செல்லும் வழி :

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 24 km தொலைவில் உள்ளது . இங்கிருந்து நாம் ஆட்டோவில் மற்ற எல்லா கோயில்களுக்கும் செல்லலாம் .

Location :

– ஓம் நமோ நாராயண –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *