Sri Kailasanathar Temple – Srivaikuntam

ஸ்ரீ கைலாசநாதர் கோயில் – ஸ்ரீவைகுண்டம்

Sri Kailasanathar temple - Srivaikuntam

இறைவன் : கைலாசநாதர்

இறைவி : சிவகாமி அம்மையார்

தலவிருச்சம் : இலுப்பை  மரம்

தல தீர்த்தம் :  தாமிரபரணி

ஊர் : ஸ்ரீவைகுண்டம்

மாவட்டம் : தூத்துக்குடி , தமிழ்நாடு

நவகிரகங்களில் சனி கிரகத்தின் ஆட்சி பெற்ற இத்திருத்தலம் நவகைலாயத்தில் ஆறாவது திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் மரத்தினால் செய்யப்பட்ட பூதநாதர் சிலை விசேஷமானதாகும்.பூலோக வைகுண்டமாகவும் பூலோக கையிலாயமாகவும் இவ்வூர் விளங்குகிறது. இவ் வூரில் தான் குமரகுரு ஸ்வாமிகள் பிறந்தார் .

கோயில் அமைப்பு :

மிக பிரமாண்டமான பழமையான மொட்டை கோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது அதன் வழியே உள்ளே சென்றால் நந்தவனம் வருகிறது , பின்பு நாம் உள் நுழைந்தால் மண்டபம் உள்ளது அவ் மண்டபத்தில் முகப்பில் இரண்டு யாழி மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது . பின்பு உள் சென்றால் தூண்களில் மிக அதிக வேலைப்பாடுகளுடன் கூடிய வீரபாத்திரர் சிற்பம் உள்ளது . இவைகளை காண நம் கண்கோடி வேண்டும் . இவ் மனப்பதில் பலிபீடம் , கொடிமரம் , நந்தி ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் .கொடிமரமானது கன்னியாகுமரி பகவதி அம்மன் திருத்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும் . பின்பு சந்தன சபாபதி மண்டபம் உள்ளது , அதில் நடராஜர் உள்ளார் . இம்மண்டபத்தில் எட்டு யாழி தூண்களும் யாழிகளின் கீழே சிங்கமும் யானையும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. யாழிகளின் வாயினுள் கைகளை விட்டுப் பார்த்தால் அங்கே உருளும் உருளைக்கற்கள் இருக்கின்றன. இது அன்றைய சிற்பிகளின் கைவண்ணத்தை பறைசாற்றுகிறது .

இறைவன் கைலாசநாதர் :

பின்பு உள்ளே சென்றால் இறைவன் கைலாசநாதர் சற்று பெரிய லிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் . நவ கைலாய தலங்களிலேயே இவரே சற்று பெரிய திருமேனியாக உள்ளார் . இவரை உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார் . அவரை வலம் வந்தால் தெற்கு நோக்கி சிவகாமி அம்மையார் காட்சிதருகிறார் . அவர் ஒரு கையில் மலரையும் , மறு கையை கீழே தொங்கவிட்டபடியும் காட்சி தருகிறார் .

பூதநாதர் :

தாயார் சன்னதி அருகே பூதநாதர் மிக பெரிய திருமேனியுடன் காட்சிதருகிறார் .இவர் மரத்தினால் செய்யப்பட்டவர் ஆவார் .பூதநாதருக்கு வடைமாலை சாற்றி விசேஷ வழிபாடுகள் நடைபெறும். சித்திரை மாதம் நடைபெறும் இந்தக் கோவிலின் திருவிழாவில் பூதநாதருக்கே முதல் மரியாதை  செய்யப்படும். இந்த விழாவின் மூன்றாம் நாள் அன்று சுவாமி கைலாசநாதர், பூத நாதர் வாகனத்தில் எழுந்தருளிச் சேவை  சாதிப்பார். இந்தப் பூத வாகனம் திருநெல்வேலி அருகே உள்ள செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமானது  என்றும், முன்னர் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கினால், செப்பறை பழைய கோவில் சிதிலமடைந்து அங்கிருந்த பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்படி அங்கிருந்து ஆற்றில்  அடித்துக் கொண்டுவரப்பட்ட பூத வாகனமே இங்குள்ள பூதநாதர் என்று செப்பறை மஹாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூத நாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலிபூதத்தாரின் அம்சமாக இங்கு வணங்கப்படுகிறார்.

 உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக முறையே அதிகார நந்தி, சூரியன், நால்வர், சுரதேவர், சப்தமாதர்கள், அறுபத்து மூவர், தக்ஷிணாமூர்த்தி, கன்னிமூலை கணபதி, பஞ்ச லிங்கங்கள், வள்ளி  தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், மஹாலக்ஷ்மி, துர்கை, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சந்திரன், பைரவர், பூதநாதர், சிவகாமி அம்மை உடனுறை சபாபதி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

இத்திருக்கோயில் நந்தவனத்திற்கு செல்லும் முன் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் உரோமச முனிவரின் சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

வரலாறு :

அகத்திய மாமுனிவரின் சீடரான உரோமச முனிவர் பிறவா வரத்துடன் சிவ முக்தி அடைய வேண்டி பொதிகை மலையில் கடுந்தவம் புரிந்தார். அவரது கடுந்தவத்தைக் கண்ட அகத்திய மாமுனிவர், சிவபெருமானை தியானித்து ஒன்பது மலர்ளை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட சொன்னார் . அவரின் ஆணை படி முனிவர் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார்.அம்மலர்கள்  தாமிரபரணி தீர்த்த தலங்களில் ஒதுங்கிய இடங்களில்  சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறு கூறினார், அதன்படி மலர்கள் தங்கிய இடமான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், சங்காணி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, இராஜபதி, சேர்ந்தமங்கலம் ஆகிய இடங்களில் சிவவழிபாடு செய்தார், பின்னர் கிரகங்களின் பாதிப்பு தோஷம் நீங்கி சிவமுக்தி அடைந்தார். அத்தாமரை மலர்களில் ஆறாம் மலர் ஒதுங்கி உரோமச முனிவரால் திருக்கோயில் எழுப்பி வழிபடப்பட்ட திருத்தலம் இதுவாகும் . நவகைலாயங்களில் இத்திருத்தலம் சனி கிரக தோஷம் நிவர்த்தி தலமாகும்.

கோயில் திருப்பணி :

இங்குள்ள கல்வெட்டுகளில் இக்கோயிலின் விமானங்களையும், மண்டபங்களையும் மதுரை சந்திரகுல பாண்டியன் கட்டினார். பெரிய மொட்டை கோபுரத்தையும் கைலாயப்பதியையும் திருமலை நாயக்கர் கட்டினார், வேள்விச்சாலை, சந்தன சபாபதி மண்டபம் கொடி மரம் அதன் கீழ் அமைந்திருக்கும் பத்தி மண்டபம் ஆகியவற்றை வீரப்ப நயக்கர் கட்டினார் என்பதை கூறுகிறது .

சனி பரிகார தலம்:

சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து மூலவருக்கு பரிகார பூஜை செய்கிறார்கள் . எள் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் .

இங்கு நவதிருப்பதி தலங்களுள் ஒன்றான வைகுண்டநாதர் திருக்கோவிலும், நவகைலாய தலங்களுள் ஒன்றான கைலாசநாதர் திருக்கோவிலும் ஒரே ஊரில் அமையப்பெற்றுள்ளது.

விழாக்கள் :

சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி மாதம் சிவராத்திரி போன்ற வருடாந்திர விழாக்களும், பிரதோஷம், பௌர்ணமி பூஜை போன்ற மாதாந்திர வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறும்.

More Photos:

https://alayamtrails.blogspot.com/2023/01/sri-kailasanathar-temple-srivaikuntam.html

English :

Sri Kailasanathar Temple is dedicated to Lord Shiva. This is the 6th Nava Kailasam temple which is dedicated to Planet Saturn. The temple is originally believed to be built by the Pandiya king, Chandrakula Pandiya. He built the central shrine and vimana of the temple. Veerappa Nayak (1609-23 AD), a ruler of Madurai Nayak dynasty built the Yagasala, flag staff and Sandana Sababathy hall. This temple located in Srivaikuntam in Thoothakudi district .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 மணி முதல் 10 .30 மணி வரை . மாலை 5 .30 முதல் இரவு

 8 .30  மணி வரை .

செல்லும் வழி :

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 24 km தொலைவில் உள்ளது . இங்கிருந்து நாம் ஆட்டோவில் மற்ற அருகில் உள்ள நவ திருப்பதி கோயில்களுக்கும் செல்லலாம் .

Location:

– ஓம் நமசிவாய –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *