ஸ்ரீ ராமநாதர் கோயில் -ராமேஸ்வரம்
இறைவன் : ராமநாதசுவாமி ,ராமலிங்கேஸ்வரர்
இறைவி : பர்வதவர்த்தினி
தீர்த்தம் : கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள்
ஊர் : ராமேஸ்வரம்
மாவட்டம் : ராமநாதபுரம் ,தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது 8 வது தலம்.தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 198 வது தேவார தலம் .
- அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடமாகும் .இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களில் இவ் லிங்கமும் ஒன்றாகும் .
- 1212 தூண்களும் 690 அடி நீளம் ,435 அடி அகலம் ,22 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் மிகவும் பிரசித்துபெற்றதாகும்.உலகிலேயே நீளமான பிரகாரங்களை கொண்டுள்ள இக்கோயிலின் ,கிழக்கு மற்றும் மேற்கு வெளி பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் என அமைத்துள்ளது .கிழக்கு மற்றும் தெற்கு உட்பிரகாரங்கள் நீளம் 224 அடிகள் மற்றும் வடக்கு ,தெற்கு உட்பிரகாரங்களில் முறையே 352 அடிகளாலும் மொத பிரகாரங்களின் நீளம் 3850 அடி என அமைக்கப்பட்டுள்ளது .வெளி பிரகாரத்தில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன .
- இக் கோயில் பல காலகட்டங்களில் பல அரசர்களாலும் ,செல்வந்தர்களாலும் கட்டப்பட்டதாகும் .ஆதியில் ஒரு கூரை கொட்டகையில் இருந்த இக்கோயில் ஒரு துறவியின் பாதுகாப்பில் இருந்தது .ராமநாத உடையான் சேதுபதி 78 அடி உயரமுள்ள மேற்கு கோபுரத்தையும் நாகுறை சேர்ந்த வைசியர் ஒருவர் மதிற்சுவரையும் ,மதுரையை சேர்ந்த ஒரு செல்வந்தர் அம்பாள் கோயில் பிரகாரத்தையும் ,திருமலை சேதுபதி என்பவர் தெற்கு இரண்டாம் பிரகாரத்தையும் ,சின்ன உடையார் சேதுபதி கட்டத் தேவர் நந்தி மண்டபத்தையும் ,தளவாய் சேதுபதி என்பவர் கிழக்கு கோபுரத்தின் ஒரு பகுதியையும் விஜய ரகுநாத சேதுபதி என்பவர் பள்ளியறையையும் ,அம்பாள் சன்னதி முன் மண்டபத்தையையும் காட்டியுள்ளார்கள் .
- ஆஞ்சநேயர் தாமதமாக காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு ‘விஸ்வநாதர் “ என்று பெயர் இட்டு ராமநாதர் சன்னதியின் இடதுபுறத்தில் உள்ள சன்னதியில் இருக்கிறார் ,இவருக்கே இங்கு முதல் பூஜைகள் நடைபெறும் .
- அம்பாளின் தீவிர பக்தரான பாஸ்கரராயர் என்பவர் எளிதில் கரைய கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து தண்ணீரில் அபிஷேகம் செய்து வணங்கினார் . அந்த உப்பு லிங்கம் ராமேஸ்வரர் சன்னதில் அவருக்கு பின்புறம் உள்ளது . உப்பின் சொர சொரப்பை அந்த லிங்கத்தை பார்த்தாலே உணர முடியும் .
- வாலியை அழிக்க காரணமாக இருந்ததால் அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க சுக்ரீவன் இங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார் .இக்கோயில் 2 km தொலைவில் உள்ளது.
- மேற்கு பிரகாரத்தின் தெற்கு மூலையில் சௌபாக்கிய கணபதியும் ,சந்தான கணபதியும் எழுந்தருளியுள்ளார்கள். இவர்களுக்கு எப்போதும் காவி உடையே அணிவிக்கிறார்கள் .அதே பிரகாரத்தில் சப்த மாதர்கள் இருக்கிறார்கள் .
- பதஞ்சலி முனிவர் பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் நடராஜர் அருள்பாலிக்கிறார் .இவருக்கு பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது .இதற்கும் பூஜைகள் தினமும் நடக்கும் .யோக கலைகள் தேர்ச்சி பெற்றவராக பதஞ்சலி முனிவர் முக்தி அடைந்த இடம் இது .
- அம்பாள் சன்னதியின் பிரகாரத்தில் விபீஷணன் பிரதிஷ்டை செய்த பள்ளிகொண்ட பெருமாள் உள்ளார் .இவர் கையில் தந்ததுடன் காட்சியளிக்கின்றார் .
- தல புராணம் : ராமா ராவண யுத்தம் முடிந்து சீதா தேவியுடன் தமிழ்நாட்டின் எல்லைக்கு வந்த ராமபிரானிடம் எதிர்ப்பட்ட ரிஷிகள் பிரமபுத்திரனான புலஸ்தியரின் பேரன் ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட லிங்க பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டும் என்று கூறினார்கள் அதன் காரணமாக காசியிலிருந்து லிங்கத்தை கொண்டுவரும்படி அனுமனிடம் கூறினார் .அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் சீதா தேவி உருவாக்கிய மணல் லிங்கத்திற்கு பூஜைகள் நடத்தினார்.அப்போது அங்கு வந்த ஹனுமான் மனம் வருந்தினார் .இதனால் ராமபிரான் அனுமனிடம் நீ கொண்டு வந்த லிங்கத்திற்கே முதலில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும் என்றும் இரண்டாவதாகத்தான் மணல் லிங்கத்திற்கு பூஜைகள் நடக்கும் என்றும் கூறினார் .அதுபோலவே இன்றும் நடைமுறையில் உள்ளது.
- கோதண்டராமர் கோயில் : தனக்கு உதவிய இராவணன் தம்பி விபீஷணனுக்கு இலங்கையை வெற்றி கொள்ளும் முன்பே இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில் கோதண்டராமர் கோயில் உள்ளது .இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார் .இக்கோயில் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 km தொலைவில் வங்காள விரிகுடா ,மன்னார் வளைகுடா ஆகிய கடல்களுக்கு மத்தியில் தீவில் இக்கோயில் அமைந்துள்ளது .
- அது மட்டும் இல்லாமல் வால் இல்லாத ஆஞ்சநேயர் கோயில் 2 km தொலைவிலும் ,ராமர் பாதம் அமைந்துள்ள இடம் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .
- கோடிதீர்த்தம் : ராமர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது .இதற்காக தன் அம்பின் நுனியை ஓரிடத்தில் வைத்து அழுத்தியதும் அந்த இடத்தில் நீர் பிளந்து வந்தது இதுவே கோடிதீர்த்தம் ஆகும் . இந்த நீரை அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்திகிறார்கள் ,இதில் நீராட அனுமதியில்லை.
- தர்ப்பணம் : ஆடி அம்மாவாசை ,தை அம்மாவாசை ,மஹாளய அம்மாவாசை ஆகிய தினங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதும் .காசிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி ,மணல் மற்றும் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காசிக்கு சென்று ,கங்கையில் நீராடி அந்த மணலை கங்கையில் கரைத்துவிட்டு ,காசி விஸ்வநாதருக்கு அக்னிதீர்த்ததால் அபிஷேகம் செய்யவேண்டும் .பிறகு காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து ,ராமேஸ்வரத்தில் ராமநாதருக்கு அபிசேகம் செய்யவேண்டும் .
தீர்த்தங்களும் அதன் பயன்களும்
ராமேஸ்வர கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் 22 புனித தீர்த்தங்கள் தான். இந்த 22 தீர்த்தங்கள் எவை, அவற்றில் நீராடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு காண்போம்.
1 . மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெருகும்.
2 . சாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும்.
3 . காயத்ரி தீர்த்தம் – உலக நன்மை உண்டாகும்.
4 . சரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் உயர்வு தரும்.
5 . சங்கு தீர்த்தம் – வசதியாக வாழ்வு அமையும்.
6 . சக்கர தீர்த்தம் – மன உறுதி கிடைக்கும்.
7 . சேதுமாதவ தீர்த்தம் – தடைபட்ட பணிகள் தொடரும்.
8 . நள தீர்த்தம் – தடைகள் அகலும்.
9 . நீல தீர்த்தம் – எதிரிகள் விலகுவர்.
10 . கவய தீர்த்தம் – பகை மறையும்.
11 . கவாட்ச தீர்த்தம் – கவலை நீங்கும்.
12 . கந்தமாதன தீர்த்தம் – எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.
13 . பிரம்மஹத்தி தீர்த்தம் – பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
14 . கங்கா தீர்த்தம் – பாவங்கள் அகலும்.
15 . யமுனை தீர்த்தம் – பதவி வந்து சேரும்.
16 . கயா தீர்த்தம் – முன்னோர் ஆசி கிடைக்கும்.
17 . சர்வ தீர்த்தம் – முன்பிறவி பாவம் விலகும்.
18 . சிவ தீர்த்தம் – சகல பிணிகளும் நீங்கும்.
19 . சத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தியாகும்.
20 . சந்திர தீர்த்தம் – கலை ஆர்வம் பெருகும்.
21 . சூரிய தீர்த்தம் – முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.
22 . கோடி தீர்த்தம் – முக்தி அடையலாம்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/ramanathaswamy-temple-rameswaram.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 05 .00 -01 .00 வரை ,மாலை 03 .00 -09 .00 வரை
செல்லும் வழி:
சென்னையில் இருந்து சுமார் 600 km தொலைவிலும் ,திருச்சியில் இருந்து சுமார் 275 km தொலைவிலும் ,மதுரையில் இருந்து சுமார் 175 km தொலைவிலும் உள்ளது . இவ்விடங்களில் இருந்து பேருந்துகள் ,ரயில் வசதிகள் உள்ளன .
அருகில் உள்ள கோயில்கள்
ராமநாதபுரத்தில் இருந்து 108 திவ்யா தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி மற்றும் சேதுக்கரை ,உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் ஆகியவைகளை பார்க்கலாம் .ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இவ்விடங்களுக்கு செல்ல ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம் ,எல்லா கோயில்களையும் காணவேண்டும் என்றால் 1000 ரூபாய் கேட்பார்கள் . இவ் கோயில்களை பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் .
Location :