ஸ்ரீ மருந்தீஸ்வரர் திருக்கோயில்- திருவான்மியூர்
மூலவர் -மருந்தீஸ்வரர் , பால்வண்ண நாதர்
அம்பாள் – திரிபுரசுந்தரி, சொக்க நாயகி.
தல விருட்சம்– வன்னிமரம்.
தல தீர்த்தம்– பஞ்சதீர்த்தம்
ஊர் : திருவான்மியூர்,சென்னை
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 258 வது தலமாகும். தொண்டை நாட்டு தலங்களில் 25 வது தலமாகும் .
- இத் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார்.இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார்.அதனாலேயே இறைவன் ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார்.
- ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும்.இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
- வான்மீகி முனிவர் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில்தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன.அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார்.இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாளில் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
- ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார்.தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, “வான்மியூ ரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா சாப விமோசனம் கிட்டும்” என்று கூறினார்.அதன்படியே இத்தலம் வந்து வழிபாடு செய்து, ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு.பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் ‘பால்வண்ண நாதர்’ என்று பெயர் பெற்றார்.
- ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் என்கிறது.
- சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு ‘நவக்கிரகங்களுக்கு’ என்று தனி சந்நிதி இல்லை.
- அருணகிரிநாதர் இக்கோயில் முத்துக்குமாரசாமி சன்னதியில் பாடியுள்ளார் ,திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
- 7 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் . 16 சோழர்கள் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளது.
- ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தரிசிக்க வந்த அப்பையதீக்ஷிதர் என்னும் பக்தரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கிய ஈசன், மேற்குப்புறமாகத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.
- எல்லாவித நோய்களும் இவரை வணங்கினால் குணமாகும் ,இங்கு தரும் அபிஷேக பால் நோய்களுக்கு சிறந்த நிவாரிணி .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-marundeeswarar-temple-thiruvanmaiyur.html
செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை ஆரம்பிக்கும் இடத்தில் திருவான்மியூர் உள்ளது ,கோயில் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உள்ளது .
தினமும் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
Location: