Sri Theerthapureeswarar Temple – Thiruvattathurai

திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் – திருவட்டத்துறை

இறைவன் :தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர்

இறைவி :திரிபுர சுந்தரி, ஆனந்த நாயகி , அரத்துறைநாயகி

தல விருட்சம்:ஆலமரம்

தீர்த்தம்:நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு, நிவாநதி

புராண பெயர்:திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை

ஊர்:திருவட்டத்துறை

மாவட்டம்:கடலூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் , அருணகிரிநாதர் .

பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்

மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்

அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய

தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

– திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்

    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்

நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்

    நிலவெண்மதிசூடிய நின்மலனே

நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்

சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்

    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

– சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்

சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்

கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்

அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

– சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)

தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தேவார தலங்களில் இது முதலாவது தலமாகும் . 276 தேவார சிவத்தலங்களில் 212  வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .

கோயில் அமைப்பு :

வெள்ளாறு படுகையில் நெல்லும் , கரும்பும் சூழ்ந்த வயல்வெளிகளுடன் கூடிய அழகிய கிராமத்தின் நடுவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மிக கம்பீரமாக இக்கோயில் இருக்கிறது . கோயிலின் கோபுரத்திற்கு நேர் எதிரே வெள்ளாறு படித்துறையுடன் இருக்கிறது .

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் எதிரே  தலவிருச்சமான ஆலமரம் இருக்கிறது . கோயிலின் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம் ,பலி பீடம் மற்றும் நந்தி மண்டபத்தை காணலாம் . இங்கு நந்தி சற்று பின்புறம் நோக்கியவாறு சாய்ந்த நிலையில் உள்ளார். இதற்கு ஒரு காரணம் உண்டு அது என்ன என்றால் இத்திருக்கோவிலின் அருகே ஓடும் வெள்ளாறு நதியில், பிரளய காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இறைவனின் ஆணைக்கிணங்க, நந்திதேவர் ஆற்றினை திரும்பிப் பார்க்க, வெள்ளத்தின் வேகம் கட்டுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஐதீகமாகவே இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் நந்தி சிலை, ஆற்றின் திசைநோக்கி பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.

வலது புறத்தில் தாயார் திரிபுரசுந்தரி தனி சன்னதியில் நமக்கு அன்பையும் ,அருளையும் வாரி தந்து அருளுகிறார் . அன்னை அரத்துறை நாயகி, மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில், அபய வரத முத்திரை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

தீர்த்தபுரீஸ்வரர்  :

மூலவர் திருப்பெயர் தீர்த்தபுரீஸ்வரர். இவரே ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் கிழக்கு முகமாய் வட்ட வடிவ ஆவுடையாரில் ஒளிவீசும் திருமுகத்துடன் காட்சி அளிக்கின்றார். திருவட்டத்துறை உடைய மகாதேவர், திருவட்டத்துறை மகாவேதர், திருவட்டத்துறை உடைய நாயணார் என கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகம் வாசல் :

இக்கோவிலில் கருவறைக்கு இடதுபுறம் மகம் வாசல் அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள், ஓராண்டு முடிந்த பிறகு, இத்தல ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு, மகம் வாசல் வழியே ஆலயத்திற்குள் சென்று இறைவனை தரிசிப்பார்கள். பின்னர் அந்த வாசல் வழியாகவே மீண்டும் வெளியில் செல்வது ஐதீகமாக உள்ளது. இப்படிச் செய்வதால், இறந்த தன்னுடைய கணவர் நற்கதி பெறுவார் என்று அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

கோயிலை வலம் வந்தால் விநாயகர், சமயக்குரவர்கள், வான்மீகி முனிவர், சப்தமாதர்கள், லிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஜோதிர்லிங்கம் உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன.

இதனையடுத்து, அண்ணாமலையார், ஆதிசேஷன், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, சரஸ்வதி, சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் என மூவேந்தர்களுக்கும் லிங்கத் திருமேனிகள் அமைந்துள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, சந்தானக் குரவர்கள், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இறைவனின் கருவறை கோஷ்டத்தில் பிச்சாண்டவர் , நடராஜர் சிவகாமி ,தட்சணாமூர்த்தி , பிரம்மா,விஷ்ணு இருவரும் இருபுறம் இருக்க அன்னமலையார் ,சிவன் பார்வதி ,அர்த்தநாரீஸ்வரர் ,காலபைரவர் ஆகியோர் புடைப்பு சிற்பங்கள் மிக அழகாக கண்ணை கவரும்விதமாக வடிக்கப்பட்டுள்ளது . திருஞானசம்பந்தர் சிலையும் இங்கே ஒரு சுவற்றில் தனியாக வைத்துள்ளார்கள்.

கோயில் சிறப்புக்கள் :

திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம்.

வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி “நீவா’ என்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது என்றும் கூறுவர்.

ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது.

கல்வெட்டுகள் :

இவ்வாலயத்தில் கி.பி. 1949-50 இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), வீரராஜேந்திர தேவன் (கி.பி 1067), முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1107), விக்கிரம சோழதேவன் (கி.பி. 1120), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1190) மூன்றாம் ராஜராஜன் (கி.பி. 1226) ராஜகேசரிவர்மன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விருதராஜ பயங்கர வளநாட்டு, மேற்கால நாட்டு, முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் என, இன்றைய திருவட்டத்துறை நெல்வாயில் அழைக்கப்பட்டுள்ளது.

நிலக்கொடை, பசுதானம், பொற்காசு வழங்கியது போன்ற பல்வேறு விதமான கொடைகள் குறித்த விவரங்கள் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள், சிவ பிராமணர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் பூஜைகள் நடத்தப்பட்ட விவரங்களும் இதில் கூறப்பட்டுள்ளன.

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/03/sri-theerthapureeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். கோயில் மூடியிருந்தால் கோயில் அருகிலேயே உள்ள வீட்டில் உள்ளவரிடம் சொன்னால் கோயிலை திறந்து காட்டுவார்கள் .

செல்லும் வழி :

விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் வழியாக திட்டக்குடி செல்லும் பேருந்தில் சென்றால் ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

அருகில் உள்ள கோயில்கள்

1 . பழமலைநாதர் கோயில் – விருத்தாச்சலம்

2 . பிரளயகாலேஸ்வரர் கோயில் – தூங்கானை மாடம் ( பெண்ணாடம் )

3 . திருநீலகண்டீஸ்வரர் கோயில் – திருஎருக்கம் புலியூர் (ராஜேந்திரப்பட்டினம் )

Location:

– திருச்சிற்றம்பலம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *