Sri Pralayakaleswarar Temple – Pennadam

ஸ்ரீ பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் – பெண்ணாடம்

இறைவன் :பிரளயகாலேஸ்வரர் , சுடர்க்கொழுந்தீசர் ,கடந்தை நாதர்

இறைவி :அழகிய காதலி ,ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி

தல விருட்சம்:செண்பகம்

தீர்த்தம்:கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு

புராண பெயர்:பெண்ணாகடம், திருத்தூங்கானை மாடம்

ஊர்:பெண்ணாடம்

மாவட்டம்:கடலூர், தமிழ்நாடு

பாடியவர்கள் : திருநாவுக்கரசர் , சம்பந்தர்

ஒடுங்கும் பிணிபிறவி கோடன் றிவை உடைத்தாய

வாழ்க்கையழியத் தவம்

அடங்கும் இடங்கருதி நின்றீரெல்லாம் அடிகளடி

நிழற் கீழாளாம் வண்ணம்

கிடங்கும் மதிலும் சுலாவியெங்குங் கெழு மனைகள்

தோறும் மறையின்ஒலி

தொடங்குங் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை

மாடம் தொழுமின்களே.

– சம்பந்தர்

“பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்

என் ஆவிகாப்பதற்கு இச்சையுண்டேல் இருங்கூற்றகல

மின்னாரும் மூவிலைச் சூல மென்மேல் பொறி மேவு கொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க்கொழுந்தே”

அப்பர்

தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களில் 2 வது தலமாகும் . தேவார சிவ தலங்கள் 274 இல் இத்தலம் 213 வது தலமாகும் .

எதிர் புறமாக திரும்பிய நந்தி உள்ள தலம் , கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான்.

தேவ கன்னியாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் அனைத்தும் சேர்ந்து பெண்+ஆ+கடம்= பெண்ணாடகம் ஆனது. இதுவே மருவி பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது.இவ்வூரில் ஆறாயிர்ம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்’ எனப்பெயர் பெற்றதென்பர்.

தல வரலாறு :

இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக்கண்டு மகிழ்ந்த வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வாராமைகண்டு இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமைகண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது. எனவே மேற்சொல்லிய மூவரும் வழிபட்ட தலம் -பெண்ணாகடம் எனப்பெயர் பெற்றதென்பர்.

கோயில் அமைப்பு :

சிறிய நுழைவு வாயிலை கடந்து உள்ளே சென்றால் விசாலமான நந்தவனம் உள்ள பகுதி வரும் , நேரே நாம் ஐந்து நிலை ராஜகோபுரத்தை நாம் காணலாம் .கோயிலின்  முன் வாயிலில் தென்பகுதியில் குடவரை விநாயகரைத் தரிசிக்கலாம். ராஜகோபுரத்திற்கு முன் அழகான துவஜஸ்தம்பம்,  பக்கத்தில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது. உள்ளே நுழைந்தால் பதினாறுகால்  மண்டபம்.  மூலவரின் கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் அமைந்துள்ளது.  மூலலிங்கம் சுயம்பு, சற்று உயரமானது, எண்பட்டை வடிவில் ஆவுடையார் சதுர  வடிவானது.  கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக்  கண்டு வணங்குமாறு சன்னல்கள் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.

சுவாமியை நோக்கியபடி கலிக்கம்பர், மெய்கண்டார் சன்னிதிகள் உள்ளன. அருகே நடராஜர் சன்னிதியும் காணப்படுகிறது.

கருவறைச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிட்சாடனர், சண்டேஸ்வரர், துர்க்கை ஆகியோர் திருமேனி காணப்படுகிறது. இது தவிர, தனி துர்க்கையம்மன் சன்னிதியும் கூடுதலாக அமைந்துள்ளது.

ஆலய பிரகாரத்தில் கோடி விநாயகர், நால்வர், சந்தனக் குரவர்களான மெய்கண்டார், மறைஞானசம்பந்தர் மற்றும் கலிக்கம்பர், சேக்கிழார், தண்டபாணி ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. உற்சவமூர்த்தி மண்டபம், சப்தகன்னியர், நாகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், நடராஜர் சபைக்குப் பின்புறம், பைரவர் மற்றும் சூரியபகவான் சன்னிதிகளும் உள்ளன.

கட்டு மலைக்கோயில் :

மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் சந்நிதி தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபட வந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே இறைவனை காண வேண்ட , அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சி தந்தார், அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் சொல்லப்படுகிறது.

சண்டிகேஸ்வரர் சன்னிதியின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் நுழைவு வாசல் மூலம் அழகிய காதலி அம்மன் ஆலயத்தை அடையலாம். பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் இதனைக் கடந்ததும் துவாரபாலகிகள் இருவர் காட்சி தர, கருவறையின் உள்ளே எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள்.

அப்பரின் தோளில் இலச்சினை:

இவர் சிவனிடம் தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் தன் கைப்பட அவருக்கு முத்திரையை பொறித்தார்.

சந்தானக் குரவர்கள் நால்வரில் இருவர் சிதம்பரத்திலும், மற்ற இருவர் பெண்ணடாகத்திலும் தோன்றியவர்களாவர். மெய்கண்ட நாயனார், மறைஞான சம்பந்தர் இருவரும் இத்தலத்தில் அவதரித்த அருளாளர்கள்.

கல்வெட்டுக்கள்:

சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் “தூங்கானைமாடமுடைய நாயனார்” என்று குறிப்பிடப்படுகின்றனர். கோயிலுக்குப் பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/03/sri-pralayakaleswarar-temple-pennadam.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் 8 .30 மணி வரை

செல்லும் வழி :

விருத்தாச்சலம் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் சுமார் 17 கி. மீ தொலைவில்  பெண்ணாடம் உள்ளது . பேருந்து நிலையத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது .

அருகில் உள்ள தலங்கள் :

1 . பழமலைநாதர் கோயில் – விருத்தாச்சலம்

2 . தீர்த்தபுரீஸ்வரர் கோயில் – திருவட்டத்துறை (5 KM )

3 . திருநீலகண்டீஸ்வரர் கோயில் – திருஎருக்கம் புலியூர் (ராஜேந்திரப்பட்டினம் )

Location:

 – திருச்சிற்றம்பலம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *