Sri Pranava Viyakrapureeswarar Temple –  Omampuliur

ஸ்ரீ பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் – ஓமாம்புலியூர்

இறைவன் :பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், துயர்தீர்த்த நாதர்

இறைவி :பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை

தல விருட்சம்:இலந்தை

தீர்த்தம்:கொள்ளிடம், கவுரி தீர்த்தம்

புராண பெயர்:உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்

ஊர்:ஓமாம்புலியூர்

மாவட்டம்:கடலூர் , தமிழ்நாடு

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்

வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்

தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்

ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.

– சம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில் 31 வது தலமாகும் . சிவனின் தேவார தலங்கள் 276 இல் 31 வது தலமாகும் .

மூலவர் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சிதருகிறார் .இத்தலத்தில் இரண்டு தட்சணாமூர்த்தி இருக்கிறார்கள் .குருமூர்த்த தலம், தாயாருக்கு உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு உள்ளேயே மூலமூர்த்தியாக உயர்நதபீடத்தில் சிலாரூபத்தில் காட்சிதருகிறார் . சன்னதியின் உள்ளே ஒருபுறம் சலந்தரனை அழிக்க திருமாலுக்கு சக்கரம் வழங்கிய சிற்பமும் ,மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபட்ட ஐந்து சிவலிங்கங்களை சிற்பமாக வடித்துள்ளார்கள்.ரேவதி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தலம்

புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர் ) பூஜித்த சிவத்தலங்களை பஞ்சபுலியூர் தலங்கள் என்பார்கள் அதில் இத்தலமும் ஒன்றாகும்.மற்றவைகள் பெரும்பற்றுபுலியூர் (சிதம்பரம்), கானாட்டம்புலியூர் ,எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகியவைகள் ஆகும் .

கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கியவாறு இக்கோயில் அமைந்துள்ளது , கோயிலுக்கு எதிர் திசையில் கௌரி தீர்த்தம் உள்ளது .மதில்சுவருடன் கூடிய வாயிலை கடந்து நாம் உள்ளே சென்றால் பலிபீடம் ,நந்தி மண்டபத்தை நாம் காணலாம் . அடுத்து மூன்று நிலை ராஜகோபுரத்தை நாம் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் முருகனை தரிசிக்கலாம் ,பின்பு வலம் வந்து உட்சென்றால் இறைவன் கருவறை முன் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு தாயார் பூங்கொடிநாயகி அருள்புரிகிறாள் . இறைவன் கருவறையின் வாயிலின்  ஒருபுறம் சலந்தரனை அழிக்கத்திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப் பட்டுள்ளன.

தட்சிணாமூர்த்தி :

இறைவன் சந்நிதியில் வலதுபுறம தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிப்பது இத்தலத்தில் மட்டும் தான். இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

கோயிலை வலம் வந்தால் இத்தலத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக இருக்கும் நடராஜர் சிற்பம் . இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஏனைய கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.

தல வரலாறு :

உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது. சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி உமையம்மை பூமிக்கு வந்தார். அவர் இத்தலத்தில் தங்கியிருந்து சிவனை வணங்கி வந்தாள். இறைவன் உமையின் தவத்திற்கு மகிழ்ந்து அவளுக்கு காட்சி கொடுத்து தெட்சிணாமூர்த்தியாக உமாதேவியார் “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார்.

அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள். அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார்.

அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது.

ஓமம் என்ற சொல் வேள்வியைக் குறிக்கும். வேள்விச்சிறப்புடைய ஊர் எனபதாலும் இத்தலம் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்து வந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.

வடதளி :

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவக்கரசர் பதிகம் ஒன்றும் உள்ளன. ஞானசம்பந்தர் பதிகத்தில் இத்தலம் “ஓமமாம்புலியூர்” என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பர் பாடலில் “ஓமாம்புலியூர்” என்று மருவி வருகிறது. இருவரும் தங்கள் பதிகங்களில் இத்தலத்தை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர். ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர்.

இவர் ஒரு பக்தரின் குஷ்டநோயை தீர்த்தத்தால் துயர்தீர்த்தநாதர் என்ற பெயரும் இவருக்கு உண்டு . நோய்கள் குணமாக இக்கோயில் கௌரித்தீர்த்ததில் நீராடி இறைவனை பூஜித்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறார்கள் .

பரிகாரம் :

தாயார் பிரணவ உபதேசம் கேட்டது ரேவதி நட்சத்திரம் என்பதால் இத்தலம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகார செய்ய உகந்ததலம். மற்றும் தட்சணாமூர்த்தின்  குருமூர்த்த தலமாக உள்ளதால் குருஸ்தானத்தில் உள்ளவர்கள் ,கல்வி பயில்பவர்கள் தரிசிக்க வேண்டிய கோயிலாகும் . 

கல்வெட்டுகள் :

சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ‘ என்றும்; இறைவன் பெயர் ‘வடதளி உடையார் ‘ என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/03/sri-pranava-viyakrapureeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

 காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Contact Number :  திரு : ஜெகதீஷ் குருக்கள் – Ph : 7402187572

இக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளதால் குருக்களிடம் முன்னரே தெரிவித்து செல்லலாம் ,அவரின் வீடு கோயிலின் அருகிலேயே உள்ளது.

செல்லும் வழி :

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி சென்று அங்கிருந்து சுமார் 7 km தொலைவில் இக்கோயில் உள்ளது . பேருந்து வசதி உள்ளது ஆனால் நாம் ஆட்டோ அல்லது பைக்கில் சென்றால் அருகில் உள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள கோயில்களையும் சென்று தரிசிக்கலாம் .

அருகில் உள்ள கோயில்கள் :

1 . வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்

2 . வீரட்டேஸ்வரர் கோயில் – காட்டுமன்னார்கோயில்

3 . பதஞ்சலீஈஸ்வரர் கோயில் – கானாட்டம்புலியூர்

4 . அமிர்தகடேஸ்வரர்  கோயில் – மேல்கடம்பூர்

5 . ருத்ரகோடீஸ்வரர் கோயில் – கீழ் கடம்பூர் 6 . சௌந்தரேஸ்வரர் கோயில்  – திருநாரையூர்

Location :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *