முருகன் கோயில் – மயிலம்
ஒரு சிறிய குன்றின் மீது பெரிய ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் மயிலம் முருகன் கோயில், பசுமையான மரங்கள் சூழ்ந்த மயில் தோகை விரித்தது போன்ற அழகான குன்று அமைப்பைக் கொண்டது.
இக்குன்றின் உச்சியில் மயிலின் கொண்டை போல திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயில் போன்று காட்சியளிப்பதால் இக்குன்றுக்கு மயிலம் என்கிற பெயர்.
முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடும்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்ரமணியர் காட்சியளித்தபோது, தன்னையே வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டினார் சூரபத்மன். மயில் வடிவாக அவர் தவம் புரிந்த அத்தலத்திற்கும் ‘மயூராசலம்’ என்கிற பெயரை வேண்டினார். முருகப்பெருமானும் அவரது தவத்தை ஏற்றுக் கொண்டார். ’பாலசித்தர்’ என்பவரால் சூரபத்மனின் கோரிக்கைகளும் நிறைவேறியது. மயூராசலம் என்கிற பெயரே பின்னாளில் மயிலமாக மருவியது.
பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.
இது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்.அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும் .பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.
தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 – 12 .30 வரை , மாலை 4 .00 -8 .00 , ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.
செல்லும் வழி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களி லிருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில்.வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.
இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தரிசிக்கலாம் .
Map :