Sri Chandramouleeswarar And Sri Vakrakali Amman Temple- Thiruvakkarai

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில் – திருவக்கரை

Sri Chandramouleeswarar Temple- Thiruvakarai
Sri Vakrakali Amman Temple

இறைவன் : சந்திரமௌலீஸ்வரர்

இறைவி : அமிர்தாம்பிகை

தல விருச்சம் : வில்வம்

தல தீர்த்தம் : சூரிய புஷ்கரினி , சந்திர  புஷ்கரினி

ஊர் : திருவக்கரை

மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , சுந்தரர்

தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் தொண்டைநாட்டு தேவார தலங்களில் 30 வது தலமாகும் .  தேவார தலங்கள் 276 இல் 263 வது தலமாகும் .

பெரிய ராஜகோபுரத்தின் உள்ளே முதலில் நாம் நுழைகிறோம். ராஜகோபுரத்தின் உட்புற மேற்கூரையில் ஒன்பது கட்டங்களின் நடுவில் தாமரையும், சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலர்களும் தென்படுகின்றனர். ராஜகோபுரத்தின் அடிப்படை கருங்கல்லாலும், மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளன.

ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது.இந்த தாய் தான் இங்கு பக்தர்களால் அதிகம் போற்றப்படுகிறாள் . இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

video

பின் நாம் வக்ரகாளியம்மனை வணங்கிவிட்டு வெளியே வந்தால் காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சந்திரமௌலீஸ்வரர்  சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது.மண்டபத்தின் தென்புறம் பெரிய நந்தி உள்ளது. பலி பீடத்தை அடுத்து காதுகளை உயர்த்தி சற்று வலப்புறம் சாய்ந்து சிரிக்கும் பாவனையில் உள்ள இந்த நந்தி, ராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் நேராக இல்லாமல், வடப்புறமாகச் சற்று நகர்ந்து வக்கிரமாக இருப்பது கவனிக்கத்தக்கது. கொஞ்சம் தள்ளியுள்ள சிறு விநாயகர் கோவிலுள்ள கணபதியின் திருவுருவம் பெரியதாக இருக்கிறது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள்அன்னையின் சன்னதி தெற்குப் பார்த்தது. பெரும்பாலான திருக்கோயில்களில் கிழக்கு நோக்கி காட்சி தரும் தேவி, இங்கு திருவெற்றியூர் வடிவுடையம்மைப் போல தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். இச்சன்னதியின் முன்மண்டபம் அழகிய எட்டு தூண்களால் ஆனது. இச்சன்னதியில் இடப்புறம் பள்ளியறை உள்ளது.

தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.

தல வரலாறு:

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம்.

வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.

வக்ரகாளியம்மன்:

வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது.

சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது.

முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.

மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.

கல்வெட்டுகள் :

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து (சாலி வாகன சக ஆண்டு 1352 (கி.பி. 1430)) செம்மந்தை காங்கேயன் வரையுள்ள பல்வேறு மாமன்னர்களும், அவர்தம் தேவிமார்களும், குறுநில மன்னர் களும் அரசு அதிகாரிகளும் செய்வித்த திருப்பணிகளையும், கோவிலுக்கு அளித்த நிமந்தங்களையும், 43 கல்வெட்டுக்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன.

இத்திருக்கோவில் ஆதித்ய சோழன் என்னும் சோழ மன்னரால் ஏறக்குறைய 2000-ம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது எனத் தெரிகிறது. பின்னர் கி.பி.907 முதல் கி.பி.953 வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த, சிவபக்தனாக விளங்கிய முதலாம் பராந்தகச் சோழனின் மகனான கண்டராதித்தச் சோழனால் கி.பி.950 முதல் கி.பி.957 முடிய உள்ள காலத்தில் திருக்கோவில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவன் பெயரிலேயே கண்டராதித்தன் ‘‘திருக்கோபுரம்’’ எனவும் ‘‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’’ எனவும் வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்தி கூறுகிறது.

கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பாடல் பெற்றகோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருமுதுக்குன்றம், தென்குரங்காடு துறைபோன்ற கோவில்களைக் கற்றளியாக்கி திருப்பணி செய்துள்ளார். அதே போல திருவக்கரை திருத்தலத்தையும் கற்றளியாக்கி சிறந்ததொரு திருப்பணி செய்துள்ளார்.

நூற்றுக்கால் மண்டபம்

ராஜ கோபுரத்தைக் கட்டிய பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயனே (கி.பி.1179-ல்) இந்த நூற்றுக்கால் மண்டபத்தையும் கட்டினான். அதனால் ‘கண்டர் சூரியன் திருமண்டபம்’ என்று இதற்கு பெயர். அமர்ந்த நிலையில் உள்ள எட்டு சிம்ம தூண்களிடையே இந்த மண்டபம், இரு பக்கமும் இரண்டு சக்கரங்களுடன் இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல் தேர் அமைப்பில் இருக்கிறது.

மண்டபத்தின் உட்புறச் சுவரில், ஒரு குதிரையின் மீது வலக்கையில் வாள் ஏந்தி வீரன் ஒருவன் செல்வது போன்ற சிறு சுவர் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தையும் ராஜ கோபுரத்தையும் கட்டிய கண்டர் சூரிய சம்புவராயன் சிற்பமாக இது இருக்கலாம்.

எல்லாமே வக்ரமாக உள்ள தலம்

காளி அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால்தான் இவள் கோவில் கொண்டி ருக்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவிலும் வக்கிர நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.இத்தல காளியின் வக்கிர நிலையினாலேயே தலமும் வக்கிர நிலையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.விநாயகர் தன் துதிக்கையை இடது பக்கத்திற்கு பதிலாக வலப்பக்கமாக சுருட்டி வைத்து கொண்டிருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வழக்கத்துக்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து காணப்படுகிறது. இங்குள்ள நந்தி கருவறைக்கும் கொடிமரத்திற்கும் நேராக இல்லாமல் வடப்புறமாகச் சற்று விலகி வக்கிரமான நிலையில் இருக்கிறது.

 பிரார்த்தனை:

 மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

வக்ர தோசங்கள், ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.

நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-chandramouleeswarar-and-sri.html

திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

செல்லும் வழி:

திண்டிவனம் நகரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மயிலம் வழியாக பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகைக் கார் மூலம் திருவக்கரை கோயிலை அடையலாம்.

Map :

Om Namasivaya!

Leave a Reply