ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் – மயிலாப்பூர்
இறைவன் : வெள்ளீஸ்வரர்
இறைவி : காமாட்சியம்மன்
தீர்த்தம் : சுக்ரதடாகம்
தலவிருச்சம் : குருந்தை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி அமைந்துள்ள சப்த விடங்க சிவ தலங்களில் இக்கோயிலும் ஒன்று . கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தலமாக விளங்குகிறது .
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் நம்மை கம்பீரமாக வரவேற்கிறது. உள் நுழைவதற்கு முன் வலப்பக்கத்தில் அரசமரமும் , வேப்பமரமும் இணைந்த மரத்தின் அடியில் விநாயகரும் நகரும் உள்ளார்கள் . உள்ளே தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் சித்தி, புத்தி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அவருக்கு முன்பாக செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கி இருக்கிறார்.
கிழக்கு நோக்கியபடி இருக்கும் கரு வறையில் வெள்ளீஸ்வரர் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.எதிரில் வெளி பிரகாரத்தில் நந்தி பின்பாக கொடிமரம், பிரம்ம சக்தி பீடம் உள்ளது. கருவறை நுழைவு வாசல் முன்பு இருபுறங் களிலும் விநாயகர், முருகப்பெருமான் இருக்கிறார்கள்.
சிவபெருமான் சன்னிதிக்கு வலது புறத்தில், தெற்கு நோக்கிய திசையில் தனிச் சன்னிதியில் காமாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளார். நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருளும் இந்த அம்மன், மேல் இரு கரங்களில் மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறாா். அம்பாளின் கருவறையில் உள்ள ஸ்ரீசக்கரம், காஞ்சி சங்கராச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இறைவனின் கருவறை கோஷ்டத்தில் மகா கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். அதற்கு அடுத்ததாக துர்க்கையம்மன் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். உள் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், சிவசூரியன், சப்த கன்னியர், வீரபத்திரர், உண்ணாமுலையம்மனுடன் அண்ணாமலையார், சரஸ்வதி, லட்சுமி, சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்பட மேலும் பல தெய்வங்களின் திருமேனிகள் உள்ளன.
முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சகிதம் எதிரில் மயில் வாகனம் , பலிபீடம் ,கொடிக்கம்பத்துடன் தனி சன்னதியில் கிழக்கு பார்த்து காட்சிகொடுக்கிறார் . வாயிலில் அருணகிரிநாதரும் , வீரபாகு தேவரும் உள்ளார்கள் .வெளி வரும் பகுதியில் பைரவர் சன்னதி உள்ளது .
வெளிபிரகாரத்தின் வலப்பக்கம் சுக்ரேஸ்வரர் தனி சன்னதியில் உள்ளார் , சன்னதியில் சுக்ராச்சாரியார் குருந்தமரத்தடியில் லிங்க பூஜை செய்வதை நாம் காணலாம் . இவ் சன்னதிக்கு அருகில் சூலினி துர்கை , சரபேஸ்வரர் ,பிரத்யங்கரா நாம் தரிசிக்கலாம் .
இவ்வாலயத்தில் விசாலமான கல்மண்டபம் உள்ளது. இதில் தான் விழாக் காலங்களில் எம்பெருமான் மற்றும் உபய உற்சவ விக்கிரகங்கள் வீதி உலா காணும் முன் அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த மண்டபத்தின் வெளியில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளன. அதன் எதிரே சனீஸ்வரர் அருள்கிறார். அருகில் நவக்கிரகங்களும் உள்ளன.
தல வரலாறு :
தாழங்குடை பிடித்து கமண்டலம் சுமந்து வாமனர் மகாபலியின் யாகசாலைக்கு வந்து மூன்றடி நிலம் தானமாக கேட்டார் அதற்க்கு மகாபலி ஒரு ஊரையே தானமாக தருவதாக கூறினார், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை இதனால் சுக்க்ராச்சாரியார்க்கு ஐயம் ஏற்பட்டது.சுக்ராச்சாரியார் மகாபலியை தனியாக அழைத்து இவன் குள்ளன் மட்டும் அல்ல கள்ளன். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்று கூறினார், மகாபலி கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டான். சுக்கிறார் ஒரு சிறுவண்டாக உருமாறி மகாபலி மனைவியின் கையில் உள்ள கெண்டியின் துவாரத்தை அடைத்துக்கொண்டார் .மஹாபலி மந்திரம் கூறி நீர் வைக்கும் சமயம் நீர் வரவில்லை , உடனே வாமனர் கிழே இருந்த தர்ப்பையை எடுத்து துவாரத்தை குத்த தண்ணீரும் ,உதிரமும் சேர்ந்து வெளியே வந்தது . ஒரு கண் குருடாகி சுக்ரர் கிழே விழுந்தார் .தானத்தை தடுத்த பாபம் தீரவும் ,கண்ணொளி பெறவும் இங்கு வந்து குருந்த மரத்தடியில் இருந்த லிங்கத்துக்கு பூஜை செய்தார் . ஈச்வரர் மனம் இறங்கி சுக்ரருக்கு பார்வை அளித்த தலம் இது .
பரிகாரம் :
சுக்ரேஸ்வரர் சன்னிதியில் மன முருக வேண்டிக்கொண்டால் கண் பார்வை குறைபாடுகள் நீங்குவதாக கூறு கின்றனர்.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 மணி இருந்து 11 .30 மணி வரை , மாலை 4 .00 மணி முதல் இரவு 9 .00 மணி வரை
செல்லும் வழி :
சென்னை, மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலின் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
Location:
ஓம் நமசிவாய !