Sri Thalapureeswarar Temple – Thirupanangadu

ஸ்ரீ தாளபுரீஸ்வரர் கோயில் – திருப்பனங்காடு

இறைவர்  : பனங்காட்டு ஈஸ்வரர், தாலபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்

இறைவி : அமிர்தவல்லி, கிருபாநாயகி

தல மரம் : பனை மரம்

தீர்த்தம் : ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம், ஊற்று தீர்த்தம்

வழிபட்டோர் :சுந்தரர், அகத்தியர்,புலத்தியர்

தேவார பாடல் பாடியவர் : சுந்தரர்

ஊர் : திருப்பனங்காடு

மாவட்டம் : திருவண்ணாமலை , தமிழ்நாடு

இக்கோயில் தேவார பாடல் பெற்ற தலங்களில் 241 தேவார தலமாகும் , தொண்டை மண்டல தேவார தலங்களில் 9 ஆவது தேவார தலமாகும் .

கோவில் அமைப்பு:

 கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள் மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது. இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.

தல வரலாறு :

சுந்தரரிடம் இறைவன் , ‘நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன் ‘ என்று அருளியதாலும் , புறவார் பனங்காட்டூரிலிருந்து வேறுபாடு அறியவும் இத்தலத்தை ‘வன்பார்தான் பனங்காட்டூர் ‘ என்று சுந்தரர் பாடியுள்ளார் . பனங்காடாக இந்த பகுதி இருந்ததால் இந்தவூர் பனங்காடு என்று அழைக்கப்படுகிறது .வன்பாக்கம் என்ற ஊர் இப்போது வெம்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது .இந்த ஊர் இவ்வூரின் அருகில் உள்ளது . அங்கே ஒரு சிவன் கோயில் உள்ளது . இக்கோயில் பாடல் பெட்ரா ஸ்தலமாகும்.

கோயிலுக்கு வெளியே பெரிய குளம் உள்ளது , இக்குழந்தை ‘ சடா கங்கை ‘ என்று அழைக்கிறார்கள். அகத்தியர் பூசித்தபோது இறைவன் தன்சடாமுடியில் உள்ள கங்கை மூலம் நீரை கொடுத்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறது .

கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு  பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.

அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.

அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.

கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும், சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது.

அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது.உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று நாம் பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் நம்  பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை.மிக அற்புதமாக அமைந்துளார்கள்.

இக்கோயிலின் வெளியே வேம்பு மரத்தின் கீழ் தவம் செய்த கோட்டை  முனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

இக்கோயிலுக்கு வரும் வழியில் வலது புறத்தில் சற்று உள்ளே வயல்களுக்கு இடையே ஒரு சிறிய குளம் உள்ளது , இதற்க்கு ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு . சிவதலயாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும், அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர். சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் அவரை மறித்து  பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர், உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா? என்றார். அதற்கு முதியவர் “உங்களுக்கு நீர் கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது.

வியந்த சுந்தரர் முதியவரிடம், தாங்கள் யார்? என்றார். அதற்கு முதியவர், “உன் திருமணத்தில் வம்பு செய்த நான் பனங்காட்டில் குடியிருப்பவன்’ என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். தனக்கு உணவு படைத்து பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி “வம்பு செய்பவன், கள்ளன்’ என்று அவரை உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார். சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தமே இதுவாகும் ,எப்போதும் இங்கு நீர் வற்றாமல் நீர் இருந்து கொண்டே இருப்பது ஒரு அதிசயமாகும் . இத்தீர்த்ததை ‘சுந்தரர் தீர்த்தம் ‘ என்று அழைக்கிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/07/sri-thalapureeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

செல்லும் வழி :

இத்திருத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மி. வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மி. நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும்.

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *