Sri Sanjeevirayar Temple and Nadavavi Well – Ayyangarkulam

ஸ்ரீ சஞ்சீவிராயர் (அனுமன் ) கோயில் மற்றும் நடவாவிக் கிணறு – அய்யங்கார்குளம்

காஞ்சிபுரம் என்று சொன்னாலே பல கோயில்களை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாத உண்மை . நாம் பெரும்பாலும் காஞ்சிபுரம் சென்றவுடன் ஏகாம்பரநாதர் கோயில் , வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காமாக்ஷி அம்மன் கோயில் ஆகியவற்றை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் , ஆனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அழகிய மற்றும் புராதமான கோயில்கள் மற்றும் இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சஞ்சீவீராயர் கோயிலும் ,நடவாவி கிணறும் .

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சென்றால் கலவை செல்லும் கூட்ரோடு வரும் அங்கிருந்து வலதுபுறம் திரும்பி சென்றால் சுமார் 3 km தொலைவில் ஆஞ்சநேயர் கோயில் வரும் . காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 km இருக்கும் இந்த அய்யங்கார்குளம் .

சஞ்சீவீராயர் கோயில் :

சஞ்சீவீராயர் கோயில் நம் கண்முன்னே மிக அழகாக தெரிகிறது . முன்னே உயரமான தூண்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது , முழுவதும் கருங்கற்களால் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியபடி இக்கோயில் காட்சி தருகிறது .இந்த கோயிலை விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . ஆஞ்சநேயருக்காக கட்டப்பட்ட மிக பெரிய கோயில் இது என்று சொல்லலாம் , ஆஞ்சநேயர் இருக்கரங்களை கூப்பியவாறு வட திசையை நோக்கி பார்க்கிறார் அதாவது அயோத்தி இருக்கும் திசையை பார்க்கிறார் , அவர் பார்க்கும் திசையிலேயே  பரந்து விரிந்த சுமார் 130 ஏக்கர் ஏரியே இக்கோயிலின்  திருக்குளம் போல் காட்சி தருகிறது . தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோயில் இதுவே என்று கூறுகிறார்கள் .

கோயிலின் வெளி பிரஹத்தின் இருபுறங்களிலும் தூண்களுடன் கூடிய மானுடம் உள்ளது ,கோயிலில் உள்ளே சென்றால் உள் பிரகாரம் பரந்து விரிந்து காணப்படுகிறது ,வலது புறத்தில் தூண்களுடன் கூடிய மண்டபங்கள் உள்ளன , அதன் மேல் விஷ்ணுவின் தசாஅவதாரங்கள் சிற்பங்கள் உள்ளன , ஆனால் அவைகள் சிதைந்து உள்ளன . ஆஞ்சநேயர் முன் உள்ள வடக்கு வாசல் அதாவது ஏரிக்கும் ஆஞ்சநேயர் சன்னதிக்கும் இடையே தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது , இங்கு வேறு எந்த சன்னதிகளும் இல்லை .

திருக்குளம் :

இந்த 130 ஏக்கர் பரப்புள்ள குளம் பார்ப்பதற்கு கடல் போல் காட்சி கொடுக்கிறது . அய்யங்கார்குளம் என இந்த ஊருக்குப் பெயர் வருவதற்கு இந்தக் குளம்தான் காரணம். விஜயநகரப் பேரரசு ஆட்சியின்போது லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் என்பவர் இந்தக் குளத்தை வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் பெயரைத் தாங்கி இந்தக் கிராமத்துக்கு ‘அய்யங்கார்குளம்’ என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் குளத்துக்கு ‘தாத சமுத்திரம்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

இவரே ’ஸ்ரீ அனுமத் விம்சதி’ என்ற தோத்திரப் பாடலையும் இயற்றினார். இத்தலத்து அனுமரை வழிபடுவது ராமபிரானின் பாதங்களில் சரணடைவதற்கு ஒப்பானது என அப்பாடல்களில் குறிப்பிடுகின்றார்.

 இந்த குளத்தில் நிறைய சிற்பங்களை வடித்துள்ளார் அவைகளை இக்கோயிலின் எதிர் புறமான உள்ள கரையில் உள்ளது .

நடவாவிக் கிணறு :

இவ்வூரில் அமைந்துள்ள மிக அற்புதமான ஒரு இடம் இந்த நடவாவிக் கிணறு . இக்கிணறானது இக்கோயில் எதிர்திசையில் உள்ளது . அனுமன் கோயிலின் இரண்டு புறங்களிலும் நாம் இவ்விடத்திற்கு செல்லலாம் ஆனால் யாரும் அதிகமாக அறிந்திடாத மூடப்பட்ட பழைய நடவாவிக் கிணறுக்கு போக வேண்டும் என்றால் கோயிலின் வலது கரை மண் சாலையில் செல்ல வேண்டும் .  கரையின் சிறிது தூரம் சென்றால் வலது புறத்தின் இறக்கத்தில் நடவாவிக் கிணற்றின் கல் வளைவு நம் கண்களுக்கு தெரியும் , இக்கிணறானது புழக்கத்தில் இல்லாமல் மூடப்பட்டுள்ளது , கற்கள் சிதைந்து போய் உள்ளன . புதர்கள் மடிந்து முழுவதும் மறைத்தவாறு மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்துள்ளன , ஆனால் அந்த கல் வளைவு மட்டும் இன்றும் அழகாக சிதையாமல் உள்ளது , அதில் கஜலக்ஷ்மி சிலையானது மிக அழகாக மற்றும் நேர்த்தியாக செதுக்கி உள்ளார்கள் . இந்த இடத்தை பார்த்தபோது மனம் சிறிது சங்கடத்தில் ஆழ்ந்தது .

இங்குள்ள நடவாவிக் கிணறுகள் பற்றி ஒரு சுவாரசியமான தகவல்களை எங்களுக்கு இக்கோயிலில் உள்ள ஒரு உதவியாளர் சொன்னார் அவை இங்கு அனுமனுக்காக முதலில் ஒரு கிணறு நோண்டும் போது சேவல் கூவும்  சத்தம் கேட்டதாகவும் ஆதலால் அதை மூடிவிட்டதாகவும் ,சிறிது காலம் கழித்து  மற்றொரு கிணறு வெட்டும் போது செட்டியார் எண்ணெய் விற்பது போல் கேட்டதால் அப் பணியை நிறுத்திவிட்டார்கள் , பின்பு சிறிது காலம் கழித்து இன்னொரு கிணறை கோயிலின் எதிர் புறம் வெட்டினார்கள் அதுவே இப்போது எல்லோருக்கும் தெரிந்த நல்ல முறையில் உள்ள நடவாவிக் கிணறு . இக்கிணறானது இந்த பாழடைந்த கிணற்றை தாண்டி சிறிது தூரம் சென்றால் ஒரு சிறிய அம்மன் கோயில் வரும் அதன் எதிர் திசையின் இறக்கத்தில் இறங்கினால் இவ் கிணற்றை அடையலாம் .

அய்யங்கார்குளத்தின் வடக்குக் கரையின் பின்புறம் கலையம்சத்துடன் காணப்படுகிறது இந்தக் கிணறு. நீளவாக்கில் உள்ள இந்தக் கிணற்றின் நாலா புறங்களிலும் உள்ள பக்கவாட்டுக் கற்களில் சப்தகன்னிகளின் சிலைகள் காட்சி தருகின்றன. கிணற்றுக்குள் இறங்க வசதியாகப் படிக்கட்டுகள் உள்ளன. முடிவில் பாதாளத்தில் மண்டபம் ஒன்று தெரிகிறது.

அந்த மண்டபம் முழுவதும் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. அதையொட்டி, கல்லால் ஆன ஏற்றம் பிரம்மாண்டமாக நிற்கிறது. கிணற்றிலிருந்து நீரை இறைக்க ஏற்றத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மண்டபம் மட்டுமல்ல, படிக்கட்டுகள்வரை நீர் நிரம்பிக் கிடக்கிறது. அய்யங்கார்குளத்தைப் போலவே இதுவும் எப்போதும் வற்றாத கிணறு.

கிணற்றின் முன் உள்ள கல் வளைவு ஆனது அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது , அதில் மேல் பகுதியில் கஜலக்ஷ்மி உருவம் அழகாக வடித்துள்ளார் , தூணின் இருபுறங்களிலும் வீரர்கள் யாளி மீது அமைர்ந்துள்ளது போல் வடித்துள்ளார்கள்.

வரதராஜ பெருமாளின் திருமஞ்சனம் :

நடவாவிக் கிணற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று விழா நடைபெறுகிறது . அன்று காஞ்சி வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றில் எழுந்தருள்கிறார். இதற்காக நடவாவிக் கிணற்றில் உள்ள நீரை இறைத்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். முன்பு ஏற்றம் மூலமே தண்ணீரை வெளியேற்றியிருக்கிறார்கள்.

தண்ணீரை முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்துக் கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார். பின்னர், கிணற்றிலிருந்து எழுந்தருளும் வரதராஜப் பெருமாள், மீண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலுக்குத் திருப்பி எடுத்துச் செல்லப்படுகிறார். இவ் தினத்தன்று இவ்வூரானது பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் .

இந்த அய்யங்கார்குளம் குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு மிக அற்புதமான இடம் . அழகிய கிராமம் , பெரிய கோயில் ,வற்றாத குளம் , சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய கிணறு , கூட்டம் அதிகம் வராத இடம் இவ்வளவு சிறப்பு உள்ள இடத்தை நீங்கள் ஒருமுறையேனும் சென்று பாருங்கள் .

இவ் கோயிலின் அருகில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலம் , பைரவர் கோயில் , ஜெயின் கோயில் ஆகியவற்றை எனது அடுத்து அடுத்து பதிவுகளில் நீங்கள் படித்து மகிழலாம் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/07/sri-sanjeevirayar-temple-and-nadavavi.html

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *