Sri Swaminatha Swamy Temple – Swamimalai

ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில் – சுவாமிமலை

இறைவன் : சுவாமிநாதன் , தகப்பன்சாமி

தாயார் : வள்ளி , தெய்வானை

தலவிருச்சம் : நெல்லி மரம்

தல தீர்த்தம் : சரவண தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம்

ஊர் : சுவாமிமலை , கும்பகோணம்

மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. தகப்பனுக்கு குருவாக இருந்து ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் உரைத்த இடம் .

 ஐந்து நிலைகள் கொண்ட தெற்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் வல்லப கணபதியைத் தரிசிக்கலாம். பின்னர் கீழேயுள்ள மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், ராஜகணபதி, சோமாஸ்கந்தர், ஸ்ரீவிசுவநாதர், விசாலாட்சி அம்மை, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளை தரிசிக்கலாம்.

 60 படிகளைக் கடந்து முருகனைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். மேலே சென்றதும் அருள்பவர் `கண்கொடுத்த கணபதி’ இவரை வணங்கினால் கண் தொடர்பான சகல நோய்களும் நீங்கிவிடும் என்கிறார்கள். கருவறையில் தகப்பனுக்கு குருவாக இருந்து உபதேசித்த அழகன் முருகன் கம்பீரமான வடிவில் நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்காட்சி  தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தாங்கி, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசின் மீது ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் ருத்திராட்ச மாலையும் விளங்கக் கருணையே வடிவாக  காட்சிதருகிறார் முருகர் .

ஆலய மகாமண்டபத்தில் முருகப்பெருமானின் வாகனமாக மயிலுக்கு பதிலாக இந்திரனின் ஐராவத யானை நிற்கிறது. இக்கோயிலானது மூன்று விதமான கட்டுமானத்தில் அமைந்துள்ளது .மூன்றாவது பிராகாரம் மலையடிவாரத்திலும்,  இரண்டாம் பிராகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும், முதல் பிராகாரம் உச்சியில் கருவறையைச் சுற்றியும் அமைந்திருக்கின்றன.மாடக்கோயில் அமைப்பில் காணப்படுகிறது .

பிரணவ உபதேசம் கேட்ட சிவபெருமான் :

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், “பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று முருகனிடம் கேட்டார். “ஓ நன்றாகத் தெரியுமே” என்றார் முருகன். “அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன். “உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!” என்றார் முருகன்.

அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

தென்கையிலாயம் என அழைக்கப்படும் திருவையாற்றில் இருந்துதான் சிவனின் உபதேசம் பயணம் தொடங்கியது. ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் கூடிய அற்புதமான நன்னாளில் சக்தி, கணபதி உட்பட தன் படைபரிவாரங்களுடன் புறப்பட்டு நந்தியெம்பெருமானை விட்ட இடம் நந்தி மதகு என்றும், கணபதியை அமர வைத்த இடம் கணபதி அக்கிரஹாரம் என்றும், சக்தியை அமரவைத்தது உமையாள்புரம் என்றும், சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையினை அமர வைத்த இடம் கங்காதரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதன்பின்னர் சிவபெருமானும் முருகனும் தனியாக அருகில் உள்ள மண்குன்று  பகுதியில் ஓம் எனும் பிரணவ பொருள் உபதேசம் நிகழ்த்திய தலமானதால் சுவாமிக்கே நாதனாக இருந்தமையால் இப்பகுதி சுவாமிமலை என அழைக்கப்பெறுகிறது. பிற்காலத்தில் இம்மண்குன்றினை கட்டுமலையாக அமையப்பெற்றது. இத்தலத்தில் முருகப்பெருமானை தேவர்கள் புடைசூழ வழிபட்ட தேவேந்திரன் தனது நினைவாக ஐராவதுத்தினை  முருகப்பெருமானுக்கு வழங்கியதால் மூலவருக்கு முன், இன்றும் ஐராவதம் உள்ளது.

தமிழ் வருடத்தேவர்கள் அறுபது பேரும் இத்தலத்தில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் முதுகு மேல் ஏறி தரிசிக்க வேண்டிய பாக்கியம் அருள முருகனிடம் இத்தலத்தில் அறுபது படிகளாக அமையப்பெற்றனர்.

அருணகிரிநாதர் முப்பத்தெட்டு திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிநாதனுக்குச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார்.

திறந்திருக்கும் நேரம் :
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

செல்லும் வழி :
 தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை.  அருகில் திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில் ,பட்டீஸ்வரரும் சிவன் கோயில் உள்ளன .

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply