Sri Subramaya swamy Temple – Thiruparankundram

ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் – திருப்பரங்குன்றம்

இறைவன் : சுப்பிரமணியர்

தாயார் : தெய்வானை

தலவிருச்சம் : கல்லத்தி

தல தீர்த்தம் : சரவணப்பொய்கை

ஊர் : திருப்பரங்குன்றம்

மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடு இந்த திருப்பரங்குன்றம் ஆகும் . இங்கு முருகன் தெய்வானையை திருமணம் செய்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார் . இவருடன் நாரதர், இந்திரன், பிரம்மா, இவர்களும் வீணை ஏந்தாத சரஸ்வதி தேவியும், சாவித்திரி தேவியும், மேல் பகுதியில் சூரிய சந்திரரும் காட்சி தருகின்றனர். இங்கு முருகருக்கு அபிஷேகம் செய்வதில்லை , வேலுக்கே இங்கு அபிஷேகம் நடைபெறுகிறது இது ஒரு சிறப்பான நிகழ்வாகும் . சூரனை வதம் செய்த முருகப்பெருமான் வெற்றிவேல் உடன் வந்து இந்த கோவிலில் அமர்ந்ததால் இந்த கோவிலில் வேலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இக்கோயிலை பற்றி அருணகிரிநாதர் , பாம்பன் சாமிகள் ,சம்பந்தர் ,திரு நாவுக்கரசர்,சுந்தரர் , மாணிக்கவாசகர் ,நக்கீரர் ஆகியோர்கள் பாடியுளார்கள்.


கோயிலின் அமைப்பு :

இக்கோயிலானது ஒரு குடவரை கோயிலாகும் .இக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது.

கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன.  கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.

மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சூரியன்  ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன. கருவறையில் ஒரு பெரிய பாறை, அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.  மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன.

மூலவர் சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில்  பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலின்வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன.கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார்.

சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க மன்னர்களில் வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர் (1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள் (1689-1706) திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன.

தல வரலாறு:


 தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தும் அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கி, அந்த தீப்பொறியில் இருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் பூமியில் அவதாரம் எடுத்தார். பூமியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த சூரர்களை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் கையிலேயே வைத்துக் கொண்டார். இந்தப் போரானது திருச்செந்தூரில் நடந்தது. போரில் வெற்றி கண்ட முருகப்பெருமான் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். அசுரர்களை அழித்து வெற்றி கொண்ட முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகளான தெய்வானையை மணம் செய்து தந்தது இந்த திருப்பரங்குன்றத்தில் தான். திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும், தேவர்களும், மகரிஷிகளும் முப்பெரும் தேவியரும் வந்து ஆசி வழங்கினர். அந்த நாரத முனியின் முன்னணியில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இதே திருமண கோலத்தில்தான் அந்த முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் இப்பொழுதும் நமக்கு  காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர, திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.

பரிகாரம்:


திருமண தடை , குழந்தை பேறு இல்லாதவர்கள் இக்கோயிலில் வந்து வேண்டிக்கொள்கிறார்கள் . ரக்து காலத்தில் இங்குள்ள துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் .

திறந்திருக்கும் நேரம் :


காலை 5 .30 மணி முதல் நண்பகல் 1 .00 மணி வரை
மாலை 4 .00 மணி முதல் இரவு 9 .00 மணி வரை

செல்லும் வழி


மதுரையில் இருந்து சுமார் 8 km தொலைவில் உள்ளது . நிறைய நகர பேருந்துகள் உள்ளன .

Location:

Leave a Reply