Sri Sowriraja Perumal, Neelamega Perumal Temple – Thirukannapuram

ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் கோயில் – திருக்கண்ணபுரம்

மூலவர்: நீலமேகப்பெருமாள்

உற்சவர்: சௌரிராஜப்பெருமாள்

தாயார்: கண்ணபுர நாயகி

தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி

ஊர்: திருக்கண்ணபுரம்

மாவட்டம்: நாகப்பட்டினம் , தமிழ்நாடு

மங்களாசனம் செய்தவர்கள் :  பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர்.

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.

 –நம்மாழ்வார்

இத்தலமானது பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 19 வது திவ்ய தேசமாகும். சோழ நாட்டு திவ்ய தேசமாகும் . அதுமட்டும் இல்லாமல் இத்தலமானது பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகும் . திருவரங்கம் மேலை  வீடாகவும் இத்தலம் கீழை வீடாகவும் போற்றப்படுகிறது .

கோயில் அமைப்பு :

  வடக்கே திருமலைராயனாறு,  தெற்கே  வெட்டாறு இந்த இரண்டுக்கும் இடையே கிழக்கு மேற்காக 316  அடி நீளம் 216 அடி அகலம் வடக்கு தெற்காக 95 அடி உயர கோபுரம் 7 நிலை கொண்டு  கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இராஜ கோபுரத்தின் முன் மிக பெரியதாக நித்ய புஷ்கரணி 450 அடி நீளம் 415 அடி அகலம் மிக பிரமாண்டமாக காட்சி தருகிறது . ஒன்பது படித்துறை கொண்டது. இந்த தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள்.

இக்கோவிலுக்கு எதிரில் உள்ள நித்யபுஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல்புறம் தீர்த்தக்கரை ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது

இராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் வெளிப்ரகாரத்தை நாம் காணலாம் . இடது புறமாக நாம் சென்றால் பெருமாள் உள்ள சன்னதி மற்றும் முன்மண்டபத்தை அடையலாம் .

இறைவன் காட்சி :

மூலவர் ஸ்ரீ நீலமேகப் பெருமாள்  இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.

உற்சவர்,  கன்யகாதானம் வாங்க கையேந்திய நிலையில் தேவை சாதிக்கிறார்.  விபீஷணனுக்கு  ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று இறைவன் நடையழகை சேவை சாதித்த ஸதலம்.  விபீஷணனுக்குத்  தனி சன்னதி உண்டு.  உபரி சரவசு  மன்னன்  புத்திரப்பேறு வேண்டி  இந்த ஸதலத்தில் தவம் செய்து பத்மினி என்று அழகான பெண் குழந்தைக்கு தந்தை ஆனதால் பத்மினி,  இத்தலப் பெருமானே  தனக்கு கணவனாக வரவேண்டும் என்று விரும்பியதால் சவுரிராஜ பெருமாளே  பத்மினியை மணந்து கொண்டார்.

சௌரிராஜா பெருமாள் :

சோழ மன்னர் ஒருவர்,  ஒரு நாள் இந்த பெருமாளுக்குச் சூட்டிய மாலையில் தலைமுடி இருப்பதைக் கண்டு கோயில் அர்ச்சகர் இடம் கேட்க இது பெருமாளின் தலைமுடிதான் என்று அர்ச்சகர் பதில் சொன்னார்.  இதை நம்ப மறுத்த அரசன்,  கருவறைக்குச் சென்று பெருமாளைப் பார்த்தார்.  பெருமாள் தலையில் ஒரு முடி இருந்தது.  அது உண்மையான மனிதனா என்று சந்தேகப்பட்டு,  அரசன் அந்த தலைமுடியை இழுக்க பெருமாள் தலையிலிருந்து ரத்தம் வந்தது. அரசன் இதைக் கண்டு அதிர்ந்து பெருமாளிடம் மன்னிப்பு கேட்டான்.  பெருமானும் தன் தலைமுடியை வளர்த்து அரசனுக்கு காண்பித்து அரசனது சந்தேகத்தை போக்கி  மன்னித்து அருளினார்.  இதனால் உத்ஸவ பெருமாளுக்கு ‘ சவுரிராஜன்’  என்ற பெயரும் உண்டு.

நவகிரகம் :

 தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.  கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

“ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

முனையதரையன் பொங்கல்:

முனையதரையர் என்ற பக்தர், தமது மனைவி சமைத்த பொங்கலை அர்த்தசாம பூஜைக்குச் சமர்ப்பிப்பார். ஒருசமயம் கோயிலுக்கு போக முடியாமையால் பக்தியுடன் பகவானுக்கு சமர்ப்பிக்க, மூடிய கோயிலுக்குள் மணி ஓசை கேட்டு வெண்பொங்கல் நைவேத்திய வாசனை நிரம்பியது. அதுமுதல் அர்த்தஜாம பூஜைக்கு ‘முனியோதரம் பொங்கல்’ நிவேதனம் செய்யப்படுகிறது.

தல சிறப்பு :

ஒருசமயம் அரசன் ஒருவன் இங்கு வந்தபோது வளர்ந்திருந்த நெற்பயிர்களை எடுக்க முனைந்தான். அப்போது ஒரு சிறுவன் அதை தான் பாதுகாத்து வருவதாகவும், பறிக்க அனுமதி இல்லை என்று கூற, அரசன் சிறுவனைப் பிடிக்க முனைந்தான். சிறுவன் வான் நோக்கி சென்று மேலே மறைய, அரசன் வந்தது பெருமாளே என்று உணர்ந்து பிரார்த்தித்துக் கொள்ள, பகவான் மேகத்தில் இருந்து வெளிப்பட்டு காட்சி அளித்ததால் இத்தலத்து மூலவருக்கு ‘நீலமேகப் பெருமாள்’ என்ற திருநாமம் உண்டானது.

விபீஷண ஆழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் அருளியபடி அமாவாசையன்று பெருமாள் நடை அழகை சேவை சாதித்த  தலம். திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட தலம். மகரிஷிகள் வேண்டியபடி வீகடாக்ஷன் என்ற அசுரனை வதம் செய்ய பெருமாள் சக்ர பிரயோகம் செய்வதாக ஸேவை சாதிக்கிறார்.

பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று.  திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.

திருமங்கையாழ்வார் 104 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களும், குலசேகராழ்வார் 11 பாசுரங்களும், பெரியாழ்வார் ஒரு பாசுரமும், ஆண்டாள் ஒரு பாசுரமுமாக மொத்தம் 128 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை பாயாசம் கும்பகோணத்தில் தோசை அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு – திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/02/sri-sowriraja-perumal-neelamega-perumal.html

திறந்திருக்கும் நேரம் :

இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

செல்லும் வழி :

திருவாரூரில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் உள்ள சன்னாநல்லூரில் இருந்து வடகரை செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவு சென்று திருப்புகலூர் அடைந்து அங்கிருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது .

Location :

Leave a Reply