Sri Ramanatheswarar Temple – Thirukannapuram

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் – திருக்கண்ணபுரம்

இறைவன் :ராமநாதசுவாமி, இராம நதிஸ்வரர்

இறைவி :சரிவார்குழலி

உற்சவர்:நந்தியுடன் சோமாஸ்கந்தர்

தல விருட்சம்:மகிழம், செண்பகம்

தீர்த்தம்:ராம தீர்த்தம்

ஊர்:திருக்கண்ணபுரம்

மாவட்டம்:திருவாரூர், தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே

அங்கிடு பலிகொளு மவன்கோபப்

பொங்கர வாடலோன் புவனியோங்க

எங்குமன் இராமன தீச்சுரமே.

திருஞானசம்பந்தர்

தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்களில் 77 வது தலமாகும் . தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 140 வது தேவாரத்தலம் ஆகும்.

 இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துக் காட்சி தந்ததும் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது . இறைவனுக்கு தீபாராதனை செய்யும் போது லிங்கத்தில் ஜோதி வடிவம் தெரிவது ஒரு சிறப்பு .

தல வரலாறு :

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து பல வீரர்களை சாய்த்தார் , அதனால் ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க அவர் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தார், அயோத்தி திரும்பும் வழியில் இவ்வழியே… ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்தார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் நந்தியைத் தடுத்து காட்சி தந்தார், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் வரலாறு. பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி “ராமநாதசுவாமி” என்று பெயர்.இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் உள்ளார்.

கோயில் அமைப்பு :

சிறிய கிராமத்தில் மிக அமைதியான இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு எதிரில் இராமதீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலீபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். இங்கு கொடிமரமில்லை.வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சரிவார்குழலி சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கணபதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், மகாலட்சுமி,சண்டிகேஸ்வரர், சரிவார்குழலி அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

இறைவன் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது.

தீபாராதனையின்போது மூலவர் லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். இங்குள்ள  உற்சவ மூர்த்தி மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது.

கல்வெட்டுகள் :

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டதாகும் .கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

இத்திருக்கோயில் பூஜைக்கு அர்ச்சகர்களுக்குள் உரிமைப்போர் நிகழ்ந்ததை ‘கோனேரின்மைகண்டான்’ என்பவரால் நீக்கப்பெற்றதும், திருமண்ணு சோழ பரமராயனுக்கு மாணவராயனுக்கு பூஜை உரிமை வழங்கப்பெற்றதுமான செய்திகளையும் இக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கின்றன .

இக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் சிறப்பு செய்தியாக, தனியூரான தில்லையிலிருந்து மாகேஸ்வரர்களால், இக்கோயில் நிலங்கள் பஞ்சத்தால் விளையாத காலத்தில், ‘ராஜராஜபாண்டி மண்டலம், வீரசோழ மண்டலம், நடுவில் நாடு, ஜெயங்கொண்ட சோழமண்டலம்’ முதலியவற்றில் உள்ள திருக்கோயில்களிலிருந்து நெல்லும் பொன்னும் கொடுத்து உதவ உத்தரவிட்டுப் பஞ்சம் தீர்த்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/02/sri-ramanatheswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 8 .30 முதல் நண்பகல் 11 .00 மணி வரை , மாலை 6 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை

Contact Details : 9443113025,04366-292300,9843227744

திருப்புகலூர் கோயிலில் பூஜை செய்பவரே இக்கோயிலுக்கு நாங்கள் போகும் போது பூஜை செய்தார் ஆதலால் நீங்கள் திருப்புகலூர் போகும் போது அவரிடம் தெரிவித்து செல்லவும் . இவ்வோரில் 108 திவ்யதேசங்களில்  ஒன்றானா சௌரிராஜா பெருமாள் கோயிலும் உள்ளது .

செல்லும் வழி :

திருவாரூரில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் உள்ள சன்னாநல்லூரில் இருந்து வடகரை செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவு சென்று திருப்புகலூர் அடைந்து அங்கிருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது .

Location :

Leave a Reply