Sri Pushparatheswarar Temple – Gnayiru

ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோயில் – ஞாயிறு கிராமம்

Sri Pushparatheswarar Temple - Gnayiru

இறைவன் : புஷ்பரதேஸ்வரர்

இறைவி : சொர்ணாம்பிகை

தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம்

தல விருச்சம் : செந்தாமரை

அவதாரம் : ஸ்ரீ சங்கிலி நாச்சியார்

முக்தி : ஸ்ரீ கண்வ மகரிஷி

ஊர் : ஞாயிறு கிராமம்

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

சென்னையில் உள்ள (தொண்டை மண்டலம் ) நவகிரஹ தலங்கள் இரண்டு வங்கியாக உள்ளது . அதில் போரூர் ,குன்றத்தூர் சுற்றியுள்ள நவகிரஹ தலங்கள் , மற்றொன்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள தலங்கள்

1 . புஷ்பரதேஸ்வரர் கோயில் – ஞாயிறு கிராமம் சூரியன்

2 . பீமேஸ்வரர் கோயில் – முடிச்சூர் சந்திரன்

3 . அகத்தீஸ்வரர் கோயில் – வில்லிவாக்கம்செவ்வாய்

4 . காரணீஸ்வரர் கோயில் – சைதாப்பேட்டைபுதன்

5 . திருவாலீஸ்வரர் கோயில் – திருவலிதாயம் , பாடிகுரு

6 . வாலீஸ்வரர் கோயில் – மைலாப்பூர் சுக்ரன்

7 . தேவி கருமாரி அம்மன் – திருவேற்காடு ராகு ,கேது

இந்த நவகிரஹ தலங்களில் முதன்மையான தலமான ஞாயிறு தலம் இந்த புஸ்பரதேஸ்வரர் கோயிலாகும் .

தமிழகத்தில் தொண்டை மண்டலத்தில் புழல் கோட்டத்தில் ஞாயிறு ஒரு நாடாக இருந்தது . சூரிய பகவான் பிரம்மாவின் சாபத்தால் ஏற்பட்ட வினை தீர்க்க , இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவன்,இறைவியை செந்தாமரை மலர் கொண்டு பூஜை செய்து பேரு பெற்றதால் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் முதன்மையான தலமாக விளங்குகிறது . சுவாமி சூரிய பகவானுக்கு சிவசக்தி சமேதராக செந்தாமரையில் தரிசனம் அளித்து , ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அருள் ஆட்சி செய்கிறார் .

சூரிய பகவானிடம் உபதேசம் பெற்ற ஞான சீடரான “யாக்யவல்கியரின்” பிரதான சீடரான  கண்வ மகரிஷி இங்கு ஸ்வாமியை வழிபாட்டு முக்தி பெற்ற தலமாகும் . பெரிய புராணத்தில் சேக்கிழார் சங்கிலி நாச்சியாரை பற்றியும் ஞாயிறு தலத்தையும் பெருமையாக பாடியுள்ளார் . புலவர்கள் ,சோழர்கள் ,பாண்டியர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் திருப்பணி செய்துள்ளார்கள்.

தாமரை மலரில் ஐக்கியமான ஜோதி

தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள்.

எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான்.

அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது.

தாமரையை வெட்டி கண்பார்வை இழந்த மன்னன்

இந்த பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றான். அப்போது தடாகத்திலிருந்த ஒரு தாமரை மட்டும் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டான். அதை பறிக்க நினைத்தவன், நெருங்கியபோது தாமரை நகர்ந்து சென்றதே தவிர, கையில் சிக்கவில்லை.

ஆச்சர்யமடைந்த மன்னன், தன் வாளால் அதை வெட்டவே, ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட மன்னன், பார்வை இழந்தான். வருந்திய மன்னன் சிவனை வேண்டினான். அவனுக்கு காட்சி தந்த சிவன், கண் பார்வை கொடுத்ததோடு, தான் அவ்விடத்தில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார்.

அதன்பின் மன்னன் தடாகத்தின் கரையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால் சிவன், ‘புஷ்பரதேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

சங்கிலி நாச்சியார் அவதார தலம்:

சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. இவருடைய வீடு இக்கோயிலின் அருகில் உள்ளது .

சித்திரையில் சூரிய ஒளி

இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

மகர சங்கிராந்தி தினமான தை பொங்கல் தினத்தில் சூரியனுக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. சூரியன் நவகிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவகிரக சந்நிதி கிடையாது. மற்ற கிரகங்களுக்குரிய கிழமைகளில் அந்த கிரகங்களின் தோஷம் நீங்க சிவப்பு நிற வஸ்திரங்களை சாற்றி, கோதுமை மாவு, நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

கிரீடம் இல்லாத விநாயகர் :

பொதுவாக விநாயகர் தலையில் கிரீடத்துடன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தனது தந்தையான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விநாயகர் இக்கோலத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இவரை பல்லவ விநாயகர் என அழைக்கின்றனர். இவரை வணங்குவதால் பொருளாசை, பதவி ஆசை முதலியவை நீங்குவதாக ஐதீகம். கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சந்நிதி இருக்கிறது.

பரிகாரம்:

கண் தொடர்பான நோய்கள் தீர இங்கு வந்து வழிபட அவை தீரும் என்பது பக்தர்களின் வாக்கு. மேலும் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் சீக்கிரம் வாழ்வில் ஒன்றிணைவர்கள் என்றும் பல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும் இங்கு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

இக்கோயிலின் பூமிக்கு கீழிருந்து 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான பச்சை மகரதக் கல்லாலான ஸ்ரீ சக்ரதாழ்வார் மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி ஆகியவைகள் 06 .11 .2002 அன்று கண்டடுக்கப்பட்டது . அவைகளை இக்கோயிலுக்கு அருகிலேயே தனி கோயிலில் அமைத்து பிரதிஷ்டை  செய்துள்ளார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/08/sri-pushparatheswarar-temple-gnayiru.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 – 12 .00 மணி , மாலை 4 .00 – 8 . 00 , ஞாயிறு கிழமைகளில் காலை 6 .00 – 01 .00 மணி முதல் மாலை 3 .00 – 8 .00 மணி வரை

செல்லும் வழி :

சென்னை ரெட் ஹில்ஸ் இருந்து சுமார் 10 km தொலைவில் உள்ளது . ரெட் ஹில்ஸ் இருந்து 58 A , 58 C ,57 C ,T 57 ஆகிய பேருந்துகள் உள்ளன . வண்டலூர் – மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் சென்றால் மிக எளிதாக செல்லலாம் .

Location:

Om Namasivaya

Leave a Reply