ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில் & கோட்டை -சேந்தமங்கலம் / விழுப்புரம்
இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர் , வாணிலைக் கண்டேசுவரர்
இறைவி : பெரியநாயகி
ஊர் : சேந்தமங்கலம்
மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு
வரலாற்றோடு தொடர்புடைய ஒரு ஊர் இந்த சேந்தமங்கலம் , இந்த ஊரில் அமைந்துள்ள பழமையான கோட்டைக்குள் இந்த கோயில் அமைந்துள்ளது .இது தமிழ்நாட்டிலுள்ள சிதிலமடைந்த கோட்டைகளில் ஒன்றாகும். இக்கோட்டை 12 வகையான கோட்டைகளுள் 7வது வகையைச் சேர்ந்த சதுர்முகதுர்க்கம் எனும் வகையைச் சேர்ந்தது. சதுர்முகதுர்க்கம் என்பது 4 வாசல்களையுடைய கோட்டையாகும். இக்கோட்டை காடவராய மன்னர்களுள் ஒருவரான மணவாளப்பெருமான் காலத்திலும் அவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் காலத்திலும் கட்டப்பட்டது. இந்த கோட்டையானது தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது . தற்போது தொல்லியல் துறை தன கட்டுப்பாட்டில் எடுத்து புதுப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் .
மொட்டை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் பெரிய வெளி பிரகாரம் உள்ளது . கல்தூண்கள் வரிசையாக இருபுறமும் உள்ளது பின்பு பலிபீடம் அமைந்துள்ளது .வலது புறத்தில் உள்ள வசந்த மண்டபம் முற்றிலும் புதுப்பிக்கப்படுகிறது .
உள்ளே சென்றால் இறைவனுக்கு முன் நந்தி பெருமான் உள்ளார் . இறைவன் சற்று பெரிய லிங்க திருமேனியாக காட்சி தருகிறார் . கோஷ்ட மண்டபத்தில் இருக்க வேண்டிய விநாயகர் ,தட்சணாமூர்த்தி ,துர்க்கை ,பைரவர் ஆகியவர்கள் மகா மண்டபத்தில் வைத்துள்ளார்கள்.
கோயிலை வலம் வந்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபங்கள் அமைந்துள்ளன . பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது .
கோயிலின் வெளி பகுதியில் வலதுபுறம் சென்றால் தாயார் சன்னதி உள்ளது ,இது தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது .
இசை குதிரை :
இக்கோயிலின் எதிர்புறம் உள்ள ஏரி கரையில் இரு இசை குதிரை சிலைகள் உள்ளது . இக் குதிரையை மிகவும் ரசனையோடு செதுக்கியிருக்கிறார்கள் . அக்குதிரையின் பாகங்களை தட்டும்போது இசை ஒலி வருகிறது .
கோட்டை வரலாறு :
கோயில் கட்டடக் கலையில் ஒருப்புதியவகை கட்டிடக்கலையை காடவராயர் தோற்றுவித்தனர்.கோயில் திருச்சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மற்றுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்பட்டுள்ளது.கோயில் கோட்டையைச் சுற்றி அகழியுண்டு.கோயிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு உள்ளது .
வரலாற்றில் சேந்தமங்கலம் :
இவ்வூரில் கோவில் கொண்டுள்ள சிவனும், பெருமாளும் சேர்ந்தே மங்களம் வழங்குவதால் சேர்ந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரை ஆண்ட பல்லவர் வழியில் வந்த கோப்பெருஞ்சிங்கனுக்கு சேந்தன் என்ற பட்டப்பெயர் இருந்துள்ளது. இதனால் இவூர் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இப்பகுதி கடைசி பல்லவ மன்னன் அபராஜிதவர்மனை முதலாம் ஆதித்தசோழன் வென்று பல்லவ பேரரசுக்கு முடிவுகட்டினான். அதன்பின் சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்கள் எனப் பிரிந்து தனக்கென தனித்தனி சிற்றரசுகளை உருவாக்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். காடவராயர்கள் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் தங்களை பிற்காலப் பல்லவர்கள் என்றும் அழைத்துக்கொண்டனர். இவர்கள் சோழர்களின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு சிற்றரசுகளாக ஆட்சி புரிந்து வந்தனர்.காடவ அரசன் மணவாளப் பெருமான், என்றழைக்கப்படும் காடவராயன் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனி சிற்றரசை உருவாக்கினான்.
காடவ மன்னன் மணவாளப்பெருமான் கி.பி 1195 ல் சேந்தமங்கலத்தை தலை நகராகத் தோற்றுவித்தான் என்று அவனது 5ம் ஆண்டு ஆட்சிக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் இவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் ஆவார் .
பாண்டியவர்களிடம் தோல்வியுற்ற மூன்றாம் ராஜராஜசோழன் போசளமன்னனான வீர நரசிம்மனின் ஆதரவை நாடிச்சென்றபோது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் கி.பி1231 ல் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து மூன்றாம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான்.மூன்றாம் ராஜராஜனை சிறையிலடைத்த சேதி அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும்,கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான். இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான்.இச்செய்தியை திருவந்திபுரம் கல்வெட்டு மூலம் அறியலாம். மற்றும் இக்கோயிலுக்கு காடவராயர்கள், பல்லவர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் பலவிதமான கொடைகளை தந்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/08/sri-abathsahayeswarar-temple-sri.html
திறந்திருக்கும் நேரம் :
இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் .
செல்லும் வழி :
இக்கோயிலானது விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் , உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் வரும்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 10 km தொலைவிலும் உள்ளது .
நாம் குடும்பதோடு பார்க்க வேண்டிய மிக அற்புதமான வரலாற்று இடம் .
Location:
ஓம் நமசிவாய !