Sri Penneswarar Temple – Penneswaramadam

ஸ்ரீ பென்னேஸ்வரர்  கோயில் –  பென்னேஸ்வரமடம்

இறைவன் : பென்னேஸ்வரர்

இறைவி  : வேதநாயகி

ஊர் : பென்னேஸ்வரமடம்

மாவட்டம் : கிருஷ்ணகிரி , தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இத்தலம் அமைந்துள்ளது . ஏழு அடுக்கு ராஜகோபுரத்துடன் ஆற்றங்கரையின் ஓரத்தில் மிக அழகாக அமைந்துள்ளது . இக்கோவிலைக் கட்டியது இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133-1150) ஆவார். இம்மன்னனின் சிலையும் ஆலயத்தை நிர்மாணித்த சிற்பியின் சிலையும் இக்கோவில் வளாகத்தில் உள்ளது.

இறைவன் பென்னேஸ்வரர் கிழக்கு நோக்கி சேவை தருகிறார் .விமானத்தைச் சுற்றி திருச்சுற்று மாளிகை நான்குபுறமும் அமைந்துள்ளது. இக்கோவிலில் வேதநாயகி அம்மன் வடமேற்கு மூலையில் தனிச் சன்னதி கொண்டுள்ளார். விநாயகர், சப்தமாதர்கள், சூர்யன், சந்திரன் ஆகியோருக்குத் துணைச் சன்னதிகள் உண்டு. மேற்குப்புறத்தில் இராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோருக்கு ஒரு சன்னதி உள்ளது.பிரகாரம் சுற்றி நால்வர், சேக்கிழார், சப்தமாதர்கள், சீதா ராமர் லட்சுமணர்,அனுமன், வள்ளி தெய்வயானை முருகர், பைரவர், நந்தி பலிபீடம், சண்டிகேஸ்வரர், மற்றும் குலோத்துங்கசோழர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். மேலும், அற்புத லிங்கம், ஆனந்த லிங்கம்,மங்கல லிங்கம், ஐஸ்வர்ய லிங்கம்,பூர்ண லிங்கம் தரிசனம் காணலாம்.
இத்தல மூலவர் மீது மாசி மாதம் மக நட்சத்திரத்தில் சூரிய ஒளி படுகிறது. பைரவர் நாய் வாகனம் இல்லாமல் நாகத்தோடு இருப்பதால் நாகதோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது.

கல்வெட்டுகள்

பென்னேஸ்வரமடம் பென்னேஸ்வரநாயனார் கோவிலில் 40 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் ஹோய்சளர், சோழர், விஜயநகர அரசு வம்ச அரசர்களால் பொறிக்கப்பட்டவை ஆகும். பென்னேஸ்வரமடம் பென்னேஸ்வரநாயனார் கோவிலில் குடி கொண்டுள்ள பென்னேஸ்வரநாயனாருக்குத் தங்கம், வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலம் மற்றும் பல பொருட்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ள செய்திகள் கல்வெட்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீர நரசிம்மனின் கல்வெட்டு, மதுராந்தக வீரநுளம்பன் வைரவன் விமலன் என்பவன் பெண்ணை நாயனாருக்கு அளித்த நிலக்கொடை பற்றிப் பதிவு செய்துள்ளது. இந்த நிலம் பெருமான் கோயில் கொல்லை, தட்டான்குட்டை, மகாதேவன் கொல்லை, சிறுக்கன் கொல்லை, புளியமடை ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டு அமைந்துள்ளது.

இவற்றுள் ஹோய்சாள மன்னன் வீர ராமநாதன் பொறித்த கல்வெட்டு ஒன்று இலஞ்சம் வாங்குவதோ கொடுப்பதோ குற்றம் என்று கருதி, லஞ்சம் வாங்கிய அல்லது கொடுத்த நபருக்கும், அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க ஆணை பிறப்பித்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

Photos :

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-ponneswarar-temple-ponneswaramadam.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 – 12 .00 , மாலை 5 .00 – 8 .30

செல்லும் வழி:
இத்தலம் கிருஷ்ணகிரி இருந்து  28 கி.மீ, காவேரிபட்டிணம் இருந்து  5 கி.மீ..தூரத்தில் அமைந்துள்ளது

Leave a Reply