Sri Parasurameswarar Temple – Gudimallam

ஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோயில் – குடிமல்லம்

Sri Parasurameswarar Temple - Gudimallam

இறைவன் – பரசுராமேஸ்வரர்

இறைவி – ஆனந்தவல்லி

ஊர் – குடிமல்லம்

மாவட்டம் – சித்தூர் , ஆந்திரா பிரதேசம்

சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் சுமாரான சாலை வழியே பயணம் செய்தால்  சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது.

இக்கோயிலானது இந்தியாவில் உள்ள மிக பழமையான கோயில்களில் ஒன்றாகும் . சுமார் 2200 வருடங்கள் மேற்பட்ட இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலாக இக்கோயில் உள்ள  கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது .இக்கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும்.  இக்கோயிலில் உள்ள சிவலிங்க அமைப்பை போன்று இந்தியாவில் மூன்று இடங்களில் உள்ளது அதில் சிவத்தலத்தில் உள்ள இந்த லிங்கம் மட்டுமே இன்றும் வழிபாட்டில் உள்ளதாக கூறுகிறார்கள் . மற்ற இரண்டும் அருங்காட்சியங்களில் உள்ளது . அவைகள் இரண்டும் உத்திரபிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டு அவைகள் முறையே லக்னோ மற்றும் மதுரா அருங்காட்சியத்தில் உள்ளதாக குறிப்புக்கள் கூறுகின்றன.
இவை இரண்டும் குஷானர் காலத்தை(முதலாம் நூற்றாண்டு ) சார்ந்ததாக கூறப்படுகிறது .

கோவிலின் முன் மொட்டை கோபுரமே அமைந்துள்ளது அதன் உள்ளே சென்றால் விசாலமான வெளிப்பிரகாரம் உள்ளது சற்று இடது புறம் நாம் திரும்பி நடந்தால் தாயார் ஆனந்தவல்லி சன்னதி மற்றும் சுப்ரமணியர் சன்னதியை நாம் தரிசிக்கலாம் , பின் வலம் வந்தால் சூரிய பகவான் பெரிய உருவத்துடன் தனி சன்னதியில் உள்ளார் . பின் சற்று வலம் வந்தால் பலி பீடம் மற்றும் கொடிமரத்தை தரிசிக்கலாம் , நாம் மீண்டும் கோயிலை வலம் வந்தால் கருவறைக்கு செல்லும் முகப்பு பகுதியை நாம் அடையலாம் , இந்த முகப்பு மண்டபம் மிகுந்த வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது இங்கே நமக்கு விநாயகர் காட்சி தருகிறார் இவரை வணங்கிவிட்டு நாம் உள்ளே சென்றால் ஈசன் வீற்றியிருக்கு கருவறையை அடையலாம் .

இந்த கோவிலின் மூலவர் சிவபெருமான், மும்மூர்த்திகளையும் சேர்த்து லிங்கத்தின் வடிவில் காட்சியளிக்கின்றார். லிங்கத்தின் கீழ்பகுதியில் சந்திரசேன யட்சன் இருக்கின்றான். இவனுக்கு பிரம்ம யட்சன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. யட்சனுக்கு மேல் பகுதியில் நின்று கொண்டிருக்கும் சிவபெருமான் ஒரு கையில் பரசுவையும், மற்றொரு கையில் வேட்டையாடிய ஆட்டுக்கிடாவையும் கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றார். கையில் பரசு இருப்பதால் இவருக்கு பரசுராமர் என்ற பெயர் வந்தது.பிரம்மனாவர்  யட்சன் ரூபத்திலும், விஷ்ணுவானவர் பரசுராமர் ரூபத்திலும், சிவபெருமான் லிங்க ரூபத்தில் மும்மூர்த்திகளாக திகழ்கின்றனர்.

சவேதிக இலிங்கம்  என்ற வகையைச் சேர்ந்த எழு பட்டைகளுடன் கூடிய சிவலிங்க வடிவில் பரசுராமேஸ்வரர் கருவறையில் காட்சி தருகிறார். இது லிங்கோத்பவ வடிவம் ஆகும். பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ள இந்த இலிங்கத்தின் உயரம் 5 அடி  மற்றும் விட்டம் 1 அடி ஆகும்.இந்த இலிங்கம் சதுரமான அடித்தளத்தின் மீது திறந்த நிலையில் நிறுவப்பட்டுள்ளது. இவர் ஒரு சுயம்பு மூர்த்தியாவார்.

 இந்தத் தலத்தில் பரசுராமேசுவரர் வழக்கத்துக்கு மாறாக ஆறு அடி பள்ளத்தில் நின்று அருள்புரிகிறார். அதனால்தான் இந்தக் கிராமத்துக்கு `குடிபள்ளம்’ என்று பெயர் வந்தது. நாளடைவில் குடிபள்ளம் என்ற பெயர் மருவி `குடிமல்லம்’ என்று ஆகிவிட்டது. தற்போது குடிமல்லம் என்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் இந்த ஊர் திருவிப்பிரம்பேடு என்றும் பேரம்பேடு என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இறைவனாரின் பெயர் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இக்கோயிலில் 25 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன .கோயிலில் கிடைத்த சில பழைமையான செங்கற்களைக் கொண்டு இந்தக் கோயில் சாதவாகனர் காலத்தில் செங்கல் தளியாகக் கட்டப்பட்டிருக்கலாம். சாதவாகனர்கள் காலத்தில் செங்கல் தளியாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில் பல்லவர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டு, பிற்காலச் சோழர்களின் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  

தென்னிந்திய கல்வெட்டுகள் South Indian inscriptions (S.I.I) தொகுதி VIII எண் 503 முதல் 528 வரை (பக்கம்: 251 முதல் 266 வரை) பதிவாகியுள்ளது. கோவிலின் உள்ளேயும் மற்றும் கோவில் வளாகத்திலேயும் இந்தக் கல்வெட்டுகளைக் காணலாம். இக்கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல்லவர்கள், கங்கப் பல்லவர்கள், பாணர்கள், மற்றும் சோழ மன்னர்கள் அளித்த நிலையான கொடைகளைப் பதிவு செய்துள்ளன. இக்கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளிலேயே பழமையானது மூன்றாம் நந்திவர்மனின் 23 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 802)  ஆகும். நிருபதுங்கவர்மனின் 24 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வானவித்யாதர மகாபலி வானவராயனின் கொடையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது. தந்திவர்மனின் 49 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 778 – 829) ,பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாண மன்னன் ஜெயனந்திவர்மனின் மகன் முதலாம் விரமாதித்தியன் (கி.பி. 796 – 835) இக்கோவிலுக்கு அளித்த கொடையினைப் பற்றிப் பதிவு செய்துள்ளது. பெரும்பாணப்பாடி பாண மன்னர்களின் கால்வழி மரபு குடிமல்லம் (பாணர்) மற்றும் உதயேந்திரம் (பல்லவர்) செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளிலேயே மிகவும் அண்மையானது யாதவ தேவராயனின் (கி.பி. 1346) கல்வெட்டாகும். குடிமல்லம் மற்றும் கோலார் ஆகிய நகரங்கள் பாணர் வம்சத்தவர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது. விக்கிரம சோழனின் கல்வெட்டு, கி.பி. 1126 ஆம் ஆண்டில்  இக்கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ள செய்தியினைப் பதிவு செய்துள்ளது.

மிகவும் பழமையான இந்த கோயிலையும் இங்கு வீற்றியிருக்கும் வித்தியாசமான சிவனையும் நீங்கள் உங்கள் குடும்பதோடு சென்று தரிசியுங்கள் . இறைவனை நாம் காணும்போது நமக்குள் ஒரு பயம் கலந்த பரவசத்தை உணரலாம் . இந்த உணர்வு எனக்குள் எழுந்தது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-parasurameswarar-temple-gudimallam.html

கோயில் திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை திறந்திருக்கும் .

செல்லும் வழி

இவ்வூருக்கு சென்னையில் இருந்து சென்றால் சுமார் 137 km  தொலைவில் உள்ளது , திருவள்ளூர் வழியாக திருப்பதி செல்லும் வழியில் சென்றால் பாப்பாநாயுடுபேட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், ரேணிகுண்டாவிலிருந்து 8.3 கி.மீ. தொலைவிலும், புத்தூரிலிருந்து 17.8 கி.மீ. தொலைவிலும்,நாரயணவனத்திலிருந்து 20.1 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 20.8 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருத்தணியிலிருந்து 54.4 கி.மீ. தொலைவிலும் இக்கோயிலுக்கு நாம் செல்லலாம் .

Location Map :

Leave a Reply

Your email address will not be published.