Sri Pampuranathar Temple – Thirupampuram

ஸ்ரீ பாம்புரநாதர் கோயில் – திருப்பாம்புரம்

இறைவன் :சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர் , பாம்புரநாதர்

இறைவி :பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி

தல விருட்சம்:வன்னி

தீர்த்தம்:ஆதிசேஷ தீர்த்தம்

ஊர்:திருப்பாம்புரம்

மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் :  அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான் நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே.

-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்களில் இத்தலம் 59 வது தலமாகும் . தேவார சிவத்தலங்கள் 276 இல் இத்தலம் 122 வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் திருபுகழில் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .

இத்தலமானது ஒரு ராகு – கேது பரிகார தலமாகும் . இங்கு ராகுவும் கேதுவும் இருவரும் ஒரே உடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலமானது ராகு – கேது பரிகார தலமாக விளங்குகிறது .

யானை வழிபட்ட தளம் திருவானைக்காவல் , தேனீ வழிபட்ட தளம் புவனகிரி , எறும்பு வழிபட்ட தளம் திரு எறும்பூர் என்று வழங்கப்பட்டது போல் இத்தலம் பாம்பு வணங்கியதால் ‘திருப்பாம்புரம் ‘ என்று அழைக்கப்படுகிறது .

கோயில் அமைப்பு :

நுழைவாயிலை அடுத்து விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்து இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது.

மூலவராக லிங்கத்திருமேனியாக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக வலது புறம் விநாயகர், இடது புறம் சுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது.

சட்டைநாதர் சன்னதி :

மூலவர் விமானத்தின்கீழ் சட்டைநாதர் உள்ளார். இதற்குப் பீடம் மலைஈஸ்வரர் கோயிலில உள்ளது. இக்கோயில் விமானம் வட்டமானதாகும். விமானத்தின் கிழக்குப் புறத்தில் உள்ள சிறிய கோயிலில் சுதையால் செய்யப்பட்ட சட்டை நாதர் உருவம் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது.

மலை ஈஸ்வரரின் சன்னதி :

கருவறையை அடுத்து தெற்கில் மலைஈஸ்வரர் சன்னதி உள்ளது. இதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. இதன் வழியாக ஏறிச்சென்றால் பாம்புரநாதர் கருவறை விமானத்திற்கு வர முடியும்

அப்படியே கோயிலை வளம் வந்தால்  ராஜ விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி, வன்னீஸ்வரர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் பைரவர், சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா, மாணிக்கவாசகர், சுந்தரர், நாவுக்கரசர், ஞானசம்பந்தர், மகாலிங்கம், சனி பகவான், பாணலிங்கம் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கோயிலுக்கு முன்பாக எதிரில் கோயில் குளம் உள்ளது.

வன்னி ஈஸ்வரர் :

தல விருட்சமான பெரிய வன்னி மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

ராகு – கேது சன்னதி :

கோயிலை வலம் வந்தால் இறுதியில் ராகு – கேது சன்னதியை அடையலாம் .பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்

பரிகாரம் :

 ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம் களத்திர தோஷம், புத்திர தோஷம், 18 வருட 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது, புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.

தல சிறப்பு :

மகா சிவராத்திரி அன்று இரவு முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்துக்கும் வந்து வழிபட்டு ஆதிசேஷன் விமோசனம் பெற்றதாக வரலாறு.

இந்த ஊரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும், யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராணம் கூறுகிறது.

மற்றுமொரு அதிசயமாக இக்கோவில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எவரையும் இத்தனை ஆண்டு காலமாக எந்த பாம்பும் தீண்டியதில்லை என கூறுகின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.

ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்பகுதிகளில் மல்லி மற்றும் தாழம்பூ மலர்களின் வாசம் வீசுவதாகவும் இதற்கு காரணம் இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவனின் சக்தியே என பக்தர்கள் கூறுகின்றனர்.

கோயில் வரலாறு :

சோழர்கள் கட்டிய கோயிலாகும் . கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/01/sri-pampuranathar-temple-thirupampuram.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Contact  Number : 0435 – 2469555 , 9486279221 ,9443047302 , 9443943665

செல்லும் வழி :

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்பாம்புரத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் கற்கத்தி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றாலும் திருப்பாம்புரம் திருத்தலத்தை அடைய முடியும். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

Location :

திருச்சிற்றம்பலம்

Leave a Reply