Sri Jurahareswarar /Iravataneswara Temple – Kanchipuram

ஸ்ரீ ஜுரஹரேஸ்வரர் / இறவாதீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம்

Sri Jurahareswarar /Iravataneswara Temple - Kanchipuram

கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில் எல்லோரும் ஏகாம்பரேஸ்வரர் கோயில், காமாட்சி அம்மன் கோயில் ,வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றை தரிசித்துவிட்டு சென்றுவிடுவார்கள் , ஆனால் இந்த காஞ்சிபுரத்தில் நிறைய புராதனமான மிக அழகான மன்னர்களின் கலை வண்ணத்தை எடுத்து காட்டுமாறு பல கோயில்கள் உள்ளன , அந்த வரிசையில் இப்ப நாம பார்க்கபோவது தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள ஜுரஹரேஸ்வரர் கோயிலை பற்றித்தான் பார்க்க போறோம் .

இக்கோயிலானது ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள சன்னதி தெருவில் உள்ளது . தெருவின் ஓரத்திலே கிழக்கு பார்த்து மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் இக்கோயில் உள்ளது . உள்ளே நுழைந்தால் வெளிப்புறமானது மிக பெரியதாக இருக்கிறது . கோயிலானது தரை மட்டத்தை விட சற்று கீழாக உள்ளது , கோயிலின் அமைப்பானது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது .

முதலில் பலிபீடமும்  அதனை அடுத்து நந்தி மண்டபமும் இருப்பதை நாம் காணலாம் , அவற்றை தரிசித்து விட்டு நாம் சென்றால் மஹாமண்டபமும் அதை ஒட்டி உள்ள தனி மண்டபத்தை நாம் காணலாம் . அந்த தனி மண்டபத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கியவாறு இரண்டு நந்திகள் உள்ளன .

மகாமண்டபத்தின் முன்புறம் நிறைய அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் உள்ளன , அதில் கிழக்கே பார்த்தவாறு விநாயகர் மற்றும் விஷ்ணு துர்க்கை சிற்பங்கள் உள்ளன .

அர்த்தமண்டபத்தில் முன் பகுதியில் சங்கநிதி மற்றும் பத்மநிதி உள்ளார்கள் .

கட்டிட அமைப்பு :

கோயிலின் கருவறையானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்துள்ளது , இரண்டு அடுக்கு செங்கற்களியால் ஆனா விமானமும் நீள்வட்ட வடிவில் மிக நேர்த்தியாக அழகாக அமைந்துள்ளது . மூன்று கலசத்துடன் விமானம் அமைந்துள்ளது .

கோயிலானது கருவறை ,அர்த்தமண்டபம் ,முகமண்டபம் மகாமண்டபம் மற்றும் சாவகாச அந்தராளம் ஆகிய அமைப்புடன் உள்ளது .

கோயிலின் கருவறை சுற்றி நாம் வேறு எங்கும் காணமுடியாத அழகிய நான்கு ஜாலங்கள் உள்ளன , அவை ஒவ்வொன்றும் வெல்வேறு விதமாகவும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு . அந்த ஜன்னல்கள் ஹஸ்தி நேத்ரா , கோ நேத்ரா , புஷ்பகர்ணம் ,சகர்ணம்  என்னும் பெயர்களை கொண்டுள்ளது . இறைவன் வெப்பமுடையவாறாக இருப்பதால் இந்த ஜன்னல்களை ஏற்படுத்தியிருக்கலாம் .

கருவறை விமானத்தில் சுதையினால் ஆன சிவனின் 64 வடிவங்கள் உள்ளன , கருவறை தேவ கோஷ்டத்தில் சிலைகள் எதுவும் இல்லாமல் உள்ளது .

இங்கு உள்ள கும்ப பஞ்சரங்கள் மிக அழகாக உள்ளது , அதுமட்டும் அல்லாமல் வலபியில் பூதகணங்கள் தலைகீழாக தொங்கியவாறு அற்புதமாக அமைத்துள்ளார்கள்.

மகாமண்டபத்தில் ஒரு கோபத்தை நாசி உள்ளது அதில் நிசும்பசூதனியும் , மற்றொரு நாசியில் மஹிஷாசுரமர்தினியும் அமைத்துள்ளார்கள் .மகாமண்டபம் தெற்கிலும் , வடக்கிலும் சாவகாச அமைப்புடன் படிக்கட்டுகள் உள்ளன .இக்கோயிலானது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .

இங்குள்ள தீர்த்தம் ஜுரஹர்தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது , இதில் நீராடி இறைவனை தரிசித்தால் எவ்வித நோய்களில் இருந்தும் விடுபடலாம் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது .

இறைவன் சதுர ஆவுடையாரில் காட்சிதருகிறார் , இவர் அருகில் இந்திரன் தன் இந்திராணியுடனும் , குபேரரரும் உள்ளார்கள் . காஞ்சியில் காமாட்சி அம்மனே  பிரதானவர் என்பதால்  இங்கு தனியாக அம்மனுக்கு சன்னதி இல்லை .

இந்த தலத்தை வந்து இவரை வணங்கினால் நமக்கு எவ்வித நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம் .

வரலாறு :

தாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான்.இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் `கவலை வேண்டாம்’ என சிவன் சொன்னாலும், அசுரனை அழிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஏனெனில் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். எனவே அவரை மன்மதன் மூலம் எழுப்பும் முயற்சியை தேவர்கள் மேற்கொண்டனர். இந்த முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிர பலன் கிடைக்கவில்லை.

எனவே தேவர்கள், சிவனைப் பல நாமங்களைச் சொல்லி துதித்தனர். இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு தாக்கியது. அப்போது, எல்லா தேவர்களுமே அதன் உக்கிரத்தை உணர்ந்தனர். கடும் காய்ச்சல் போல உடல் நெருப்பாய் சுட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக தேவர்கள் துடித்தனர். ஆனாலும் மீண்டும் ஈசனையே அவர்கள் சரணடைந்தனர்.

அவர்களிடம் சிவபெருமான், “பூலோகத்தில் காஞ்சி என்னும் திருத்தலத்தில் சுரன் என்ற அரக்கனை ஒழித்துவிட்டு, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளேன். அங்கு ஜூரஹரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருளும் என்னை வழிபட்டால், உங்களுடைய வெப்பம் தணியும்” என்று அருளினார். இதையடுத்து தேவர்கள் அனைவரும் இங்கு வந்து வழிபட்டு, உடல் குளிர்ந்தனர்.

உடலின் வெப்பத்தை குறைத்து குணம் பெறச் செய்பவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘ஜூரஹரேஸ்வரர்’ என்று பெயர்.

கல்வெட்டுகள் :

இக்கோயிலில் விக்ரமசோழனின் கல்வெட்டு ,சுந்தர சோழ வேளாளர் ,விஜயகண்ட கோபால கல்வெட்டு ,குமரக்கம்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் உள்ளன . இக்கோயிலானது இக்கல்வெட்டுகளுக்கு முன் உள்ள காலத்தில் காட்டியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் .

Photos :

https://alayamtrails.blogspot.com/2023/04/sri-jurahareswarar-temple-kanchipuram.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 மணியில் இருந்து 11 .30 மணி வரை , மாலை 5 .00 மணியில் இருந்து 8 .30 வரை

This Jurahareswarar temple is situated in Kanchipuram , This temple is also know as Iravatanesawar temple and is considerd as one of the 108 shiva temples in kanchipuram.

செல்லும் வழி :

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள சன்னதி தெருவில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது . காசீபுரத்திற்கு எல்லா இடங்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது . அருகில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பாண்டவ தூத பெருமாள் கோயில் உள்ளது .

Location:

நன்றி – Mr .பாபு மனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *