Sri Balasubramaniya Swamy Temple – Siruvapuri

ஸ்ரீ பாலசுப்ரமணியன் கோயில் – சிறுவாபுரி

ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து நாம் உள்ளே சென்றால் உயரமான கொடி மரத்தை நாம் காணலாம் ,கொடிமரத்தை வணங்கிவிட்டு சென்றால் கோயிலின்  உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள் ஆகியோரை தரிசனம் செய்து விட்டு மூலவர் பாலசுப்ரமணியரை நாம் தரிசிக்கலாம் .

 சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன்  இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார்.

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமண்யர், ஆதி மூலவர், நவகிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்தும்  மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை.கோவிலுனுள் உயரமான கொடிமரம் முன் காணப்படும் பச்சை மரகத மயிலின்  காட்சி கண்கொள்ளா அழகு. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது.

தல புராணம் :

அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி  முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும்  குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை  வெல்ல முடியவில்லை.ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும்  குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.அதாவது சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போர் புரிந்த இடம் என்பதினாலும், பால வயதுக் குமாரன் தீரச் செயலை செய்து வள்ளியை கரம் பிடித்து  வந்து தங்கிய இடம் என்பதினாலும், சிறு இளைஞர்கள் பெருமை சேர்த்த அந்த வனப்பகுதி -சிறுவர்கள் + வாய் + புரி = ‘சிருவாய்புரி’ – அதாவது அனைவரும் வாயும் பிளக்கும் வண்ணம் தீரமிக்கக் செயலை காட்டிய இடம் என்ற அர்த்தத்தில் ‘சிருவாய்புரி’ என்ற பெயரில் அமைந்தது. ஆனால் காலப் போக்கில் அது மருவி சிறுவாபுரி என ஆகி விட்டது .

பரிகார தலம்:

இக்கோயில் ஆனது பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது ஏன்னென்றால் கேக்கும் வரன்கள் எல்லாம் இத்தல முருகன் வாரி வழங்குகிறார் . அருணகிரி நாதரால் இத்தலம் பாடல் பெற்ற தலமாகும் .

சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற கனவு பலபேருக்கு இருக்கும் ,நிலம் இருந்தும் வீடு கட்ட முடியாத நிலை ,பணம் இருந்தும் வீடு ,நிலம் வாங்க முடியாமல் தடை இவைகளுக்கு பரிகார தலமாக இத்தலம் விளங்குகிறது . பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடை உள்ளவர்களுக்கு பரிகார தலமாக உள்ளது .வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை  வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

சிறுவாபுரி கோவில் ஞாயிறு தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருக்கும். பிறகு  பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல்  இரவு 9 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும்,  மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தான் வழிபாடு செய்ய முடியும்.

செல்லும் வழி:

சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து  3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம்.

Location Map

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *