அஷ்டலக்ஷ்மி கோயில் – பெசன்ட் நகர் , சென்னை
இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. 45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கு. தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு. அஷ்டலக்ஷ்மியின் சன்னதி விமானத்தில் ஒன்பது சக்திகள் அமைந்துள்ளன. அதேப்போன்று தரைப்பகுதி சக்கரமாகவும், மொத்த அமைப்பு மேருவாகவும், தரிசனத்திற்கு மேலே சென்று இறங்கிவரும் பாதை “ஓம்” வடிவமாகவும் கட்டப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு .
கோயில் அமைப்பு :
இந்த அஷ்ட லட்சுமி ஆலயத்தில் அமைந்துள்ள அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது கருவறைகளுடன் கூடிய சிறு சிறு கோவில்கள் உள்ளன. அவை தரைத்தளத்தில் நான்கும், இரண்டாம் தளத்தில் நான்கும், மூன்றாவது தளத்தில் ஒன்றுமாக நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் முதல் நிலைக் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகளின் எட்டு வடிவங்களும் அதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாகவே இரண்டாம் நிலையில் ‘தென்கிழக்கு’ மூலையில் ஸ்ரீ லட்சுமி கல்யாணத் திருக்கோலமும், ‘தென்மேற்கு’ மூலையில் ஸ்ரீவைகுண்டக் காட்சியும், ‘வடமேற்கு’ மூலையில் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீமத்வாசாரியார் போன்ற மகா ஞானிகளின் திருவுருவங்களையும், வடகிழக்கில் ‘தேவாசுரர்கள் அமிர்தம் பெற திருப்பாற் கடலையும் கடையும் எழிற் காட்சியும்’ அதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு நம் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்கின்றன.
மூன்றாவது நிலையில் ஒரு புறம் ‘ஸ்ரீ மகா விஷ்ணுவின்’ தசாவதாரக் கோலங்களும், ஒரு புறம் சைவ சம்ப்ரதாயத்தின்படி ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தவம் ஓதும் பிம்பத்தையும், ஒருபுறம் வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி தூப்புல் ஸ்ரீநிகமாந்த மகா தேசிகரின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம். பிரதான கோவிலின் முன்புறமாக இருபுறமும் சங்கநிதி, பதுமநிதி என இரண்டு பொக்கிஷங்களுக்கும் இரண்டு கோவில்கள் உள்ளன.
சிற்ப ஆகம சாஸ்திரப்படி அவை குறுகலாக 28 அங்குல அளவு கொடுத்து அமைக்கப்பட்டிருக்கு. மேலே ஏறிச் சென்றால் முதல் தளத்தின் கிழக்கே கஜலக்ஷ்மியையும், தெற்கே சந்தானலக்ஷ்மியையும், மேற்கே விஜயலக்ஷ்மியையும், வடக்கே வித்யாலக்ஷ்மியையும் ஆகிய நான்கு லக்ஷ்மிகளின் தரிசனம் மட்டுமே கிடைக்கும். அடுத்தடுத்த படிகளில் மேலே ஏறிச்சென்றால் இரண்டாம் தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள தனலட்சுமி தாயாரைத் தரிசிக்கலாம்.
தனலட்சுமி தாயாரைத் தரிசனம் செய்துவிட்டு மண்டபம் வழியேக் கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்யலட்சுமி, வடக்கே தைரியலட்சுமியையும் தரிசிக்கலாம்.
பின்பு இரண்டாவது தளத்திற்கு ஏறினால் முதலில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ கஜலட்சுமியை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு பிரகாரத்தில் சுற்றினால் தென்பகுதியில் ஸ்ரீ சந்தானலட்சுமி, மேற்கில் ஸ்ரீவிஜயலட்சுமி, வடக்கில் ஸ்ரீ வித்யா லட்சுமிகளையும் வழிபாடு செய்யலாம். அதன்பிறகு ‘ஸ்ரீ கஜலட்சுமி’ சன்னதியிலிருந்து மூன்றாவது தளத்திற்கு மேலேறி சென்றால், பிரதான நிலையில் ஸ்ரீ தனலட்சுமி அருள் காட்சி தருவாள். இவ்வாறாக அஷ்டலட்சுமிகளையும், பிரதான சன்னதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி மூர்த்தங்களையும் தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
மூலவர் மஹாலக்ஷ்மி அமைப்பு :
பிரதான கர்ப்பக் கிரகம் 10 அடி அகலத்தில் 14 அடி உயரம் உடையது. கருங்கல் சுவரால் மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கு. மூலவர் மகாலட்சுமி தாயார் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீனிவாசர் என்னும் பெயரோடு மகா விஷ்ணு அருள்புரிகிறார். மகாலக்ஷ்மியும் மஹா விஷ்ணுவும் திருமணக்கோலத்தில் நின்ற வண்ணம் உள்ளதால் எப்பொழுதும் மகாலக்ஷ்மிக்கு 9 கஜம் பட்டுப்புடவையும் மகா விஷ்ணுவிற்கு 10 முழ வேட்டியும் கட்டப்படுது.
இதர சன்னதிகள் :
இக்கோவிலில் மேலும் விஷ்ணுவின் தசாவதாரச் சன்னிதி, கமல விநாயகர் சன்னிதி, குருவாயூரப்பன் சன்னிதி, சக்கரத்தாழ்வார்- யோக நரசிம்மர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி, கருடாழ்வார் சன்னிதியும் அமைந்திருக்கு.
அஷ்ட லட்சுமிகளும், ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் கோவில் கொண்டிருப்பது உலகத்திலேயே வேறெங்கும் கிடையாதாம். ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது.
தனலட்சுமி தாயாரைத் தரிசனம் செய்துவிட்டு மண்டபம் வழியேக் கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்யலட்சுமி, வடக்கே தைரியலட்சுமியையும் தரிசிக்கலாம்.
பரிகாரம்:
திருமண தோஷம் போக லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண யோகம் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கும், நோய் குணமாக ஆதிலட்சுமிக்கும், செல்வம் வேண்டி தனலட்சுமிக்கும், கல்வி செல்வம் பெற வித்யாலட்சுமிக்கும், மனத்தைரியம் பெற தைரியலட்சுமிக்கும் பூஜை செய்து அம்மனின் அருள் பெறுகின்றனர்.
காஞ்சி பெரியவர் மும்பையில் உள்ளது போல் மகாலட்சுமிக்கு தனி கோயில் கட்டவேண்டும் என்று நினைத்தார் . அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தாராம். அதன்படி சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைமாநகர் ன்ற இடத்துல, வங்க கடற்கரையோரம் 1974 ம் ஆண்டு இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டதாம்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/10/sri-ashtalakshmi-temple-besent-nagar.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரை
மாலை 4 .00 மணி முதல் இரவு 8 .30 மணி வரை
வெள்ளிக்கிழமை ,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை
காலை 6 .30 மணி முதல் நண்பகல் 1 .00 மணி வரை
செல்லும் வழி :
சென்னை பெசன்ட் நகர் கடல் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் எல்லா இடங்களிலும் இருந்தும் போக்குவரத்துக்கு சேவை உள்ளது .
Location: