ஸ்ரீ வீழிநாதேஸ்வரர் கோயில் – திருவீழிமிழலை

இறைவன் :வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)
உற்சவர்:கல்யாணசுந்தரர்
இறைவி :சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)
தல விருட்சம்:வீழிச்செடி
தீர்த்தம்:வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்
ஊர்:திருவீழிமிழலை
மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோரும் பாடியுள்ளார் .
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக் கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட “வவ்வால் நந்தி மண்டபம்’ உள்ளது.
கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது அதன் முன் பெரிய திருக்குளம் உள்ளது .
வௌவால் நெத்தி மண்டபம் :
ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் வலது புறத்தில் வௌவால் நெத்தி மண்டபம் உள்ளது . இது அழகிய வேலைப்பாடுகளை கொண்டுள்ளது . அந்த காலத்தில் சிற்ப கலைஞர்கள் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அறிய வேலைப்பாடுகள் நீங்கலாக செய்துதருவதாக கூறுவார்கள் அந்த அளவுக்கு இக்கோயிலின் வௌவால் நெத்தி மண்டபம் பிரசித்திபெற்றது.
இந்த வௌவால் நெத்தி மண்டபம் அகலமான அமைப்புடன் தூண்கள் இல்லாமல் சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்ட வளைவான கூரை அமைப்புடன் வௌவால்கள் வந்து தங்க முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது . இப்போது இவ்விமண்டபம் திருமண மண்டபமாக இருக்கிறது .
இப்போது நாம் உள்ளே நுழைந்தால் கொடிமரத்தை காணலாம் . கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இங்கு நந்தி பாதாளத்தில் உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இது ஒரு மாடக்கோயில் அமைப்பை சார்ந்தது .
திருவீழிநாதர் :
படியின் வழியாக நாம் மகா மண்டபத்தின் உள் நுழைந்தால் எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியும் இடத்தை அடையலாம் . இறைவன் திருவீழிநாதர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருக சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன. இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.
மஹாவிஷ்ணு சக்கரம் :
மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுதம் தேயும் போது திரும்பவும் அதன் ஆற்றலை பெற அவர் திருமால்பூர் , திருப்பைஞ்சலி, திருவீழிமிழலை ஆகிய இடங்களில் அவர் சிவனை பூஜித்து சக்ரத்திற்கு ஆற்றல் பெற்றதாக புராணம் கூறுகிறது .
அதில் இந்த திருத்தலம் சிறப்பு வாய்ந்தது . சலந்தரன் என்ற அரக்கனை அழிக்க மகாவிஷ்ணுவுக்கு சக்கரம் தேவைப்பட்டது , இத்தலத்தில், திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூஜை செய்யும் போது ஒரூநள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்றார். இவ்வரலாறு திருமுறையில் கூறப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரரின் பாதத்தில் விஷ்ணு தம் கண்ணைப் பறித்து அருச்சித்த அடையாளம் உள்ளது. உற்சவமூர்த்தியின் வலப்பாதத்தின் மேலே திருமாலின் கண்ணும் கீழே சக்கரமும் உள்ளன.
மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் திருமால் கையில் கண்ணூடு அர்ச்சிக்கும் பாவனையில் காட்சி தருகிறார் .
நீற்றினைநிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக் காழிநல்கி அவன் கொணர்ந்திழிச்சுங் கோயில்
வீற்றிருந்தளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
– திருநாவுக்கரசர்
இவ் பாட்டின் மூலம் இவ்நிகழ்வை நாம் தெரிந்துகொள்ளலாம் .
மாப்பிளை சுவாமி:
இங்கு ‘கல்யாண சுந்தரர்’ என்று அழைக்கப்படும் ‘மாப்பிள்ளை சுவாமி’ உற்சவ மூர்த்தியாக விளங்குகிறார். அவர் பாதத்தின் மேலே, திருமால் அர்ச்சித்த கண் மலர் உள்ளது.
திருமண வீடுகளில் வைத்திருப்பதுபோல் இங்கும் அரசாணிக்கால் உள்ளது. வயதாகியும் மணமாலை கூடாமல் இருப்பவர்கள், இந்த திருக்கோவிலுக்கு வந்து, மாலை சூட்டியபடியே அரசாணிக்காலை மூன்று முறை வலம் வந்து கல்யாண சுந்தரரை வழிபட்டால் கல்யாணக் கனவுகள் நனவாகும்.
காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார். முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. இவ்விமானம், திருமால் கொணர்ந்தது என்பதனை
“தன்றவம் பெரிய சலந்தரனடலந் தடிந்த சக்கிரம் எனக்கருள் என்று அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறையணி சடையவன்’
ஞானசம்பந்தர்
என்னும் ஞானசம்பந்தர் வாக்கால் அறியலாம். செப்புத்தகடுகள் வேயப்பெற்றுத் தங்கக்கலசத்தோடு விளங்கும் இவ்விமானம் தனி அழகுடையது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் தனிச்சிறப்புடையது. கர்ப்பகிருக விமானத்தில் ஞானசம்பந்தர் கண்ட சீகாழிக்காட்சி சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளது.
படிக்காசு :
ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும உள்ளன. படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.
இரண்டாம் கோபுரத்தைக் கடந்ததும், வெளிச்சுற்றில், படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் உள்ளன. தெற்குப் பிராகாரத்தில் தலவிநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. நடராஜர் சந்நிதி சிறப்பானது.
அம்பாள் – படியளந்த நாயகி. இவர் இறைவனின் சன்னதிக்கு அருகில் தனி சன்னதியில் உள்ளார் . உற்சவமூர்த்தி தராசுபிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்த கையோடும் காட்சி தருகின்றனர். நடராஜர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சக்கரதானர், பிட்சாடனர், காலசம்ஹாரர், சுவர்க்காவதாநேசர், நாயன்மார்கள் முதலிய உற்சவத்திருமேனிகள் உள்ளன.
Photos:
https://alayamtrails.blogspot.com/2022/01/sri-veezhinathar-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Contact Number : 04366 – 273050 , 94439 2482
செல்லும் வழி :
தமிழ் நாடு மயிலாடுதுறை – திருவாரூர் சாலை வழியில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து அங்கிருந்து 10 கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
அருகில் உள்ள தலங்கள் :
திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர்
Location :
திருச்சிற்றம்பலம்
