Sri Muktheeswarar & Adhi Vinayagar Temple – Sethalapathi, Thilatharpanapuri

ஸ்ரீ முக்தீஸ்வரர் மற்றும் ஆதி விநாயகர் கோயில் – சிதலப்பதி

இறைவன் :முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்

இறைவி :பொற்கொடியம்மை, சொர்ணவல்லி

தல விருட்சம்:மந்தாரை

தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு

ஊர்:சிதலப்பதி , திலதர்பணபுரி

மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் :  திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர்

பொடிகள் பூசிப் பலதொண்டற் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அவ்வழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி அடி கொள்சோலை மலர்மணம் கமழும் மதிமுத்தமே.

– திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவ தலங்களில் 58 வது தலமாகும் . அருணகிரிநாதர் இத்தலத்து முருகரை பற்றி பாடியுள்ளார் .

இத்தலமானது மனித முகத்துடன் அருள்தரும் ‘ஆதி விநாயகர் ‘ மற்றும் பித்ரு தர்ப்பணம் கொடுக்க சிறப்பான இந்தியாவில் உள்ள ஏழு இடங்களில் ஒன்று போன்ற சிறப்புகளை தன்னுள் இத்தலம்  தாங்கி உள்ளது .

ஆதிவிநாயகர் :

சிறிய மதில் சுவருடன் கூடிய வாயிலை கடந்து நாம் உள்ளே சென்றால் இடது மற்றும் வலது புறத்தில்  வேதங்கள் பயிலும் பயிலரங்கம் மற்றும் தங்கும் இடம் உள்ளது .

சிறிது கடந்து சென்றால் வலது புறத்தில் தனி சந்நதியில் மனித முகத்துடன் ஆதி விநாயகர் காட்சிதருகிறார் .  இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர். இந்த அபூர்வமான அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது .அகஸ்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தூல, சூஷ்ம  வடிவுகளில் நேரடியாகவே வழிபடும் பிள்ளையார் மூர்த்தி இவர்.

ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :

அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்

துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி

பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும்

புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி

முக்தீஸ்வரர் ஆலயம் :

வாசலில் சிறிய கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருளும் சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருளுவதால் இவரை “முக்தீஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள்.

பிராகாரத்தில் விநாயகர், இராம இலக்குமணர் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். தட்சிணாமூர்த்தி இங்கு வித்தியாசமாக காணப்படுகிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கமும் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சி தருகிறார்.

பித்ரு தர்ப்பணம் :

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் இத்தலம் ஐந்தாவது தலமாகும் .

திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் ‘முக்தீஸ்வரர்’ என்றும் இத்தலம் ‘திலதர்ப்பணபுரி’ என்றும் கூறப்படுகிறது.

நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர்ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக் கொண்டார்களாம். அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

 இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

ராமர் செய்த பித்ரு  தர்ப்பணம் :

கோயிலை வலம் வரும்போது கருவறை மண்டபத்தின் பின் பகுதியில் ராமர் தன் மூதாயருக்கு தர்ப்பணம் செய்வதை காணலாம் .இராமர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது.ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் நாம் காணலாம் .இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார்.

பரிகாரம் :

பித்ரு தர்ப்பணம் செய்ய கூடிய இடம் , மற்றும் குடும்பத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், புதல்விகள், பேரன், பேத்திகள் இடையே சுமூகமான, சாந்தமான உறவு நிலை ஏற்பட்டிட வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த விநாக மூர்த்தி உள்ள இடம் .

இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் இராமர் என்று கூறுகிறார்கள் .

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/01/sri-muktheeswarar-adhi-vinayagar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 07 .00 முதல் நண்பகல் 12 .45 முதல் , மாலை 4 .00 முதல் இரவு

8 .30 வரை .

Contact Number : 04366-238818,239700,94427014055

செல்லும் வழி :

தமிழ் நாடு மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மி. கூத்தனூர் சரஸ்வதி கோவில் இங்கிருந்து அருகில் இருக்கிறது.

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *