Thiruvidaikazhi Murugan Temple
Thiruvidaikazhi Murugan Temple

Thiruvidaikazhi Bala Subramaiyan Temple

ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் –  திருவிடைக்கழி

Thiruvidaikazhi Murugan temple

மூலவர் : முருகன் (திருக்குராத்துடையார்)

மூலவர் : காமேசுவரர் (ஈசன் )

இறைவி :  காமேஸ்வரி

தல விருட்சம் : குரா மரம்

தல தீர்த்தம் : சரவண தீர்த்தம் , கங்கை கிணறு

புராண பெயர்    :    திருக்குராவடி

ஊர்    :      திருவிடைக்கழி

மாவட்டம்    :   நாகப்பட்டினம், தமிழ்நாடு

 முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர,முருகனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் புரிந்த  இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும். முருகப்பெருமானின் பாதங்கள் முன்னே ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கிட அவர் வணங்கிய ஸ்படிக லிங்கமும்  உள்ளது .மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தரும் ஒரே தலம். இத்தலத்தில்தான்  முருகன், தெய்வானைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆலய அமைப்பு :

கிழக்கு  நோக்கிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் நமக்கு பிரமாண்டமாக காட்சி தருகிறது . உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகரை தரிசனம் செய்யலாம் .  வலதுபுறம் தெய்வானை தனி சன்னிதியில் தவக்கோலத்தில் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். நேரே உள்ளே சென்றால் அர்தமண்டபத்தை அடையலாம் .  கருவறையில் இறைவன் முருகன் தன அழகு முகத்துடன் 6 அடி உயரத்தில்  உயரமாக இருக்கிறார் . சுவாமியின் வலதுகை அபயம் தரும் விதத்திலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் உள்ளன. வேலும் உள்ளது .முருகப்பெருமானின் பாதங்கள் முன்னே ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கிட அவர் வணங்கிய ஸ்படிக லிங்கமும்  உள்ளது .

முருகனுக்கு பின்னால் உள்ளடங்கியபடி சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார் . முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் இந்த  திருவிடைக்கழி.இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.

அப்படியே வெளியே வந்து கோயிலை வளம் வந்தால் கோயிலின் கருவறை சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம். பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டி இடதுபுறம் செல்லும்போது சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்களை வழிபடலாம். உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியவற்றை வணங்கலாம்.

இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.

வெளிப்பிரகாரத்தில் இக்கோயிலின் தலவிருட்சம் குராமரம் தழைத்துக் காட்சி தருகிறது. முருகப்பெருமான் சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம் (பத்ர லிங்கம்) அமைந்துள்ளது. இதற்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.தல மரமாகிய “குராமரம்” தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது.

குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். தனிச் சன்னிதியில் திருக்காமேஸ்வரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார்.

தல வரலாறு :

திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான். உயிர்களை காக்கும் பொருட்டு கீழச்சமுத்திரம் வந்து, மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை, வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தார்.  அசுரனாக இருந்தாலும் சிவபக்தன் என்பதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க பராசக்தியின் ஆலோசனைப்படி, முருகன் இத்தலத்திலுள்ள குராமரத்தின் அடியில் சிவனை நோக்கி தவமிருந்து பலனடைந்தார். குராமர நிழலில் அமர்ந்து சிவனை வழிபட்டதால் ‘திருக்குராவடி’ என இத்தலத்திற்கு பெயர் வந்தது. தரிசிப்போரின் பழி, பாவம் போக்கும் இத்தலமுருகனை, ‘திருக்குராத்துடையார்’ என கல்வெட்டுகள் கூறுகின்றன.

நிச்சயதார்த்த தலம்

முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் ‘விடைக்கழி’ எனப்படுகிறது.

 முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவவிமோசன சுவாமியாக அருள்கிறார். திருச்செந்தூருக்கு நிகரான இவரைத் தரிசிக்க தீராப்பழியும் தீரும். இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன.

இக்கோயிலில் அம்பாளுக்குத் தனி சந்நிதி இல்லாமல் அருகிலுள்ள தரங்கம்பாடி கோயிலில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரக சந்நிதி இல்லை.

கோயிலின் மற்ற சிறப்புக்கள் :

திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலம், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலம், . அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர்.

சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தல விருட்சம் சிறப்புப் பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று காஞ்சிமாவடி. மற்றது திருவிடைக்கழி குராவடி. இந்த குரா மரத்தடியிற்றான் ராகு முருகனைப் பூசித்து வரம் பெற்றதால் இது ராகுதோசம் நீக்கும் ஸ்தலம்  எனப்படுகிறது. இந்த குரா  மரத்தடி நிழலில் இன்றும் முருகன் விரும்பி உலாவுவதாக ஸ்தலபுராணம் சிறப்பிக்கின்றது.ராகு என்பதை திருப்பி நோக்கினால்  குரா  எனவரும். எனவே, ராகு கிரகத்துக்கும் குராமரத்துக்கும் ஏதோ ஒரு வகை தொடா்பு இருப்பது புரிகிறது. இந்த ஊரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. அப்படித் தீண்டினாலும் நஞ்சு ஏறியாரும் மரணிப்பதில்லை

திருவிழாக்கள் :

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசத்தின் போது, சுவாமிமலையிலிருந்து நடைபயணமாக வருவது பெரிய திருவிழாவாக நடக்கிறது.

Temple Images

https://alayamtrails.blogspot.com/2026/09/sri-subramaniyar-temple-thiruvidaikkazhi.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

செல்லும் வழி :

திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து மேற்குறிப்பிட்ட வழியாகவும், செம்பொன்னார்கோயில் வழியாகவும் இயக்கப்படும் பேருந்துகள் ஆலய வாசல் வரை செல்லும்.

Location:

திருச்சிற்றம்பலம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply