ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோயில் – ஸ்ரீவில்லிபுத்தூர்
இறைவன் : வடபத்ரசாயி, ரங்கமன்னார்
தாயார் : ஆண்டாள் நாச்சியார்
தீர்த்தம் : திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம்.
ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர்
மாவட்டம் : விருதுநகர் ,தமிழ்நாடு
மங்களாசனம்: பெரியாழ்வார் , ஆண்டாள்
பெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில் 90 வது திவ்யா தேசமாகும் . பாண்டியநாட்டு திவ்யதேசமாகும் .
பெருமாளுக்கே பெண் கொடுத்து பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் , மற்றும் அவர் பெற்றெடுத்த பெண் பிள்ளையாம் ஆண்டாள் நாச்சியார் ஆகிய இருவரும் திருஅவதாரம் செய்த மிக அற்புதமான திருத்தலம் .
ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 – 966) கல்வெட்டில், இக்கோயில் ‘ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்’ என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 – 1120) ஆட்சியில் இந்த ஊர், ‘விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்’ என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின், கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், ‘பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்’ என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. திருமலைநாயக்கர் (1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (1689-1706) ஆட்சி காலத்தில், இந்த நகரம் மிகவும் பிரபலமானது. கி.பி1751 முதல் கி.பி1756 ல் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நெற்கட்டும்செவ்வல் பாளையக்காரர் பூலித் தேவர் ஆட்சியின் கீழ் வந்து ஒரு மறவர் பாளையமாக இருந்தது. பின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெரியசாமி தேவர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. அடுத்து, முகமது யூசுப் கான் கைகளில் விழுந்தது. 1850 வரை, ஆண்டாள் கோவில் திருவிதாங்கூர் ராஜா சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷ் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம், ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த ‘நெற்கட்டுச் செவ்வல்’ பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டார். 1756 மே 6-ல் நடந்த போரில் அவரை வெல்லஇயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார். பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும் இல்லாத அந்த இடம் ‘கோட்டைத்தலைவாசல்’ என்றழைக்கப்படுகிறது. இப்போது இந்த கோட்டை தலைவாசல் தெருவாக மாறியிருக்கிறது .
ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணம் :
ஒரு சாபத்தின் காரணமாக வில்லி, புத்தன் என்ற இரு முனிவர்கள் வேடர்களாகப் பிறந்தனர். புத்தன் என்பவரை ஒரு நாள் ஒரு புலி அடித்துக் கொன்று விட்டது. புத்தனைத் தேடியலைந்த வில்லி ஆல மரங்கள் நிறைந்த இக்காட்டில் திருமால் சிலையொன்றையும் அருகில் புதையலையும் கண்டெடுத்தான். தங்கப் புதையலைக் கொண்டு ஒரு கோவில் கட்டி அதில் திருமாலை பிரதிஷ்டை செய்தான். காட்டைத் திருத்தி நகரினை உண்டாக்கினான். அதுவே புத்தன் பெயரில் புதுவை என்றும் , அவனது பெயரில் வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. மல்லி என்ற அரசியார் ஆண்டு வந்த மல்லிநாடு இதுவாகும். இவ்வூரின் அருகில் “மல்லி” என்ற சிற்றூர் உள்ளது – இதை மெய்ப்பிக்கறது. அங்கிருந்த ” வடபெருங் கோவிலே ” வடபத்ரசாயி திருக்கோவில் என்பர். வல்லி கண்டெடுத்த திருமால் சிலை 2000 ஆண்டுகளுக்கு முட்பட்டது.
கோயில் அமைப்பு :
முதலில் இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இக்கோபுரம் பெரியாழ்வாரால் மற்றும் மதுரை அரசர் வல்லபதேவனால் கட்டப்பட்டது என்பர்.11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. இதுவே தமிழக அரசின் சின்னமாகத் திகழ்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால், கொடிக்கம்பம், பலிபீடம் இவற்றிற்கு இடப்பக்கத்தில் நம்மாழ்வார், இராமானுஜர், வலப்பக்கத்தில் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உள்ளனர். அடுத்து நேர் எதிரில் உள்ள லட்சுமி நரசிம்மரை வணங்கி இடது பக்கமாக சென்றால் இக்கோவில் அடித்தளம், மேல்தளம் என இருத்தளங்களாக அமைந்திருப்பதால், படிக்கட்டுகளில் ஏறி மேல் தளத்திற்குச் செல்லலாம்.
இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தும், முக்கிய விழாக்காலங்களில் வெள்ளை வேஷ்டி அணிந்தும் அருள்பாலிக்கிறார்.
திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார்.இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்த போது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சுவாமிக்கு அருகில் கருடாழ்வார் இருக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் ஆகிய மூன்று பேர் அவதரித்த தலம் என்பதால் “முப்புரிஊட்டியதலம்” என அழைக்கப்படுகிறது. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது.
ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருப்பாவை என்ற பாசுரத்தால் பாமாலை பாடியபூமாலை சூடிக்கொடுத்ததால் “சூடிக்கொடுத்த நாச்சியார்” என்ற பெயரும் உண்டு. பெரியாழ்வார், நாச்சியார் பிறந்த இடம். பெரியாழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய திருத்தலம். தமிழ்நாடு அரசு சின்னத்தில் போடப்பட்டுள்ள கோபுரம் இக்கோவிலின் கோபுரம் என்பது கூடுதல் சிறப்பு. இக்கோவிலின் ராஜ கோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார்.ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றி கொண்டு, தாம் பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.
ஆண்டாள் நாச்சியார் :
ஆண்டாள் வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.
ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை. சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார் . குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.
சிறப்புக்கள் :
இவூர் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூர தேர் மிகவும் சிறப்பு பெற்றது .மற்றும் இவூரின் பால்கோவா மிகவும் பெருமை வாய்ந்தது .மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6AM-11 மணி வரை மாலை 4PM-8 மணி வரை.
செல்லும் வழி:
மதுரையில் இருந்து சுமார் 74 km தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளது .நிறைய பேருந்து வசதிகள் உள்ளன .
English :This Andal temple at Srivilliputhur is dedicated to the Hindu god Vishnu. It is located 74 km from Madurai. This temple is one of the 108 Divya Desams of Lord Vishnu.The main Deities are Andal and Ranga Mannar. You can also visit the birth place of Goddess Andal inside the temple premises.The greatest attraction is the Rajagopuram of the temple with eleven tiers and 192″ height. it is one of the the tallest towers of temples in Tamilnadu. It finds a place in the emblem of Government of Tamilnadu.