Sri Swetharanyeswarar temple – Thiruvenkadu

ஸ்ரீ சுவேதாரண்யேசுவரர் கோயில் – திருவெண்காடு

Sri Swetharanyeswarar temple - Thiruvenkadu

இறைவன் : சுவேதாரண்யேசுவரர் , நடராஜர் , அகோரமூர்த்தி

இறைவி : பிரமவித்யாநாயகி , துர்க்கை , காளி

தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் ,அக்னி தீர்த்தம்

தல விருட்சம் : வட ஆலமரம் , கொன்றை , வில்வம் 

வழிபட்டோர் : பிரம்மா , இந்திரன் , வெள்ளையானை

புராண பெயர் : ஆதி சிதம்பரம் , திருவெண்காடு

ஊர் : திருவெண்காடு

மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு

பாடியவர்கள் :

சம்பந்தர் – 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை, 3. மந்திர மறையவை

அப்பர் – 1. பண்காட்டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித்

சுந்தரர் – 1. படங்கொள் நாகஞ்

தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் 11 வது தேவார தலமாகும் , காவேரி வடகரை தேவார தலங்களில் 11 வது தலமாகும் , 51 சக்தி பீடங்களில் பிரணவ சக்தி பீடமாகும் , கும்பகோணம் அருகில் உள்ள நவகிரக தலங்களில் புதனுக்கு உரிய முதன்மையான தலமாகும் . சிவபெருமானின் 64  வடிவங்களில் 43 வது வடிவமான “அகோரமூர்த்தி ” இவ் தலத்தில் தான் மிக பெரிய வடிவில் அருள் தருகிறார் , சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்த ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படும் தலம். காசிக்கு சமமான 6 தளங்களில் ஒன்று , பஞ்சவனம் தலங்களில் ஒன்று .

கோயில் அமைப்பு :

சாலையின் அருகில் மிக பெரிய நுழைவு வாயில் உள்ளது அதன் வழியாக நாம் உள்ளே சென்றால் ராஜகோபுரமானது ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது , அப்படியே கோபுரம் தரிசனம் கண்டு நாம் உள்ளே நுழைந்தால் மிக விசாலமான பெரிய மதில்சுவர்களுடன் கூடிய கோயிலின் உள் பிரகாரத்தை நாம் காணலாம் . மூன்று இறைவன் ,மூன்று இறைவி , மூன்று விருச்சம் ,மூன்று தீர்த்தம் என எல்லாம் இங்கு மூன்றாக உள்ளது .

இடது புறத்தில் தீர்த்த குளங்களில்  ஒன்றான அக்கினி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. கரையில் சூரிய தீர்த்தலிங்க சந்நிதி உள்ளது.

இபோது நாம் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்திதேவரை வணங்கிவிட்டு உள்ளே செல்வோம் , வலது புறம் உற்சவ மண்டபம் உள்ளது , முகப்பில் இறைவனின் திருக்கல்யாண காட்சி வண்ண சுதையால் வடிக்கப்பட்டுள்ளது . வாயிலைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் தரிசனம். அறுபத்துமூவர் மூல உற்சவத் திருமேனிகள் இருவரிசைகளில் முன் பின்னாக அழகுறக் காட்சி தருகின்றன.

இவர்களை வணங்கிவிட்டு நாம் கடந்தால் சட்டைநாதர் சன்னதி , பெரியவாரண பிள்ளையார் ஆகியோர்களை தரிசிக்கலாம் , பின்பு நாம் பத்ரகாளி அம்மனின் சன்னதியை காணலாம் , அகோரமூர்த்தி இருப்பதால் பத்ரகாளி அம்மன் இங்கு அருள்பாலிக்கிறார் . இவரை வணங்கிவிட்டு நாம்  அடுத்து வீரபத்திரர், இடும்பன், சுகாசனமூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர் முதலிய திருமேனிகள் ஒரு மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன அவர்களை தரிசித்துவிட்டு ,  இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி உள்ள சன்னதியை நோக்கி செல்வோம் .

அகோரமூர்த்தி :

நின்ற திருமேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக  உண்மையிலேயே அகோரராக , அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். அவரை பார்த்துக்கொண்டே இருப்பது போல் மனம் எண்ணியதை மறுக்கவியலாது . இவருடைய உற்சவ மூர்த்தி மிக அழகாக அற்புத வேலைப்பாடுகள் கொண்டது .

சலந்தரன்மகன் மருத்துவன். இவன் இறைவனை நோக்கித்தவம் செய்தான். இறைவன் காட்சிதந்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்களைத் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். இதை அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார். போர் தொடுக்கையில் மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப்போயிற்று. இதையறிந்து இறைவன் தாமே அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்தநாள் ஞாயிற்றக்கிழமை பூரநட்சத்திரம். (மாசி மகத்து மறுநாள்) இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றக்கிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் ( அகோரமூர்த்திக்கு  சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிப்பாட்டைத் தரிசிக்கவேண்டும். இவ்வரலாற்றையட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்களை இன்றும் நாம் காணலாம் .

அடுத்து நாம் நடராசர் சன்னதியை நோக்கி செல்வோம் , இங்குள்ள நடராசர் சபையானது சிதம்பரத்தை போல் செப்பறையில் அமைந்துள்ளது . சிதம்பரத்தில் நடப்பது போல் இங்கும் ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது , மற்றும் இங்கும் ரகசிய அறை உள்ளது . இங்கு இறைவன் நவ தாண்டவங்களை ஆடியதாக வரலாறு கூறுகிறது .சிதம்பரத்தில் சகுனமாக ஆடி முக்தி தரும் மூர்த்தி ,இங்கு நிற்குணமாக ஆடி  இம்மைக்கும் மறுமைக்கும் இடையே நற்பலன்களை தருகிறார் . இவ் தலத்தை ஆதி சிதம்பரம்  என்று அழைக்கிறார்கள் .

பின்பு நாம்  பைரவர் , காசி துண்டீர விநாயகர், அஷ்டபுஜதுர்க்கைச் சந்நிதிகள் சென்று அவர்களை வணங்கி விட்டு மூலவர் சன்னதி நோக்கி நாம் செல்வோம் .

சுவேதாரண்யேசுவரர்:

மூலவர் சந்நிதி  சற்றுயர்ந்த பாணம். அழகான திருமேனி. வேண்டுவோர்களுக்கு கேட்க்கும் வரங்களை அள்ளி தருபவராக திருஅருள்புரிகிறார் . நாள்தோறும் ஆறுகால வழிபாடுகள் சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாமத்தின்படியும் அகோர மூர்த்திக்கு காரணாகமத்தின் படியும் இங்குள்ள நடராசப் பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுகின்றன.

மூலவரை வணங்கிவிட்டு நாம் இப்போது தாயார் பிரமவித்யாநாயகி சன்னதியை நோக்கி செல்வோம் . இங்கு வந்து வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். ஆதலின் அம்பாளுக்குப் பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.அம்பாள் சந்நிதிக்குள் வலப்புறம் பள்ளியறை. நேரே அம்பாள் தரிசனம் தருகிறார் . உள்பிராகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்பாள் உள்ளார் .

பிள்ளை இடுக்கி அம்பாள் :

திருஞானசம்பந்தர் திருவெண்காடு வந்தபோது ஊரெல்லாம் சிவலோகம் ,மணலெல்லாம் சிவலிங்கமாக இருப்பதை கண்டு கால் வைக்க அஞ்சி ‘அம்மையே ‘ என்று அழைத்தார் , தாயார் சம்பந்தரை இடுப்பில் வைத்து அழைத்துவந்தார் . சம்பந்தர் ஞான குழந்தையாக இருப்பதால் தாயார் தன வலது இடுப்பில் வைத்து தூக்கி வந்ததால் இவருக்கு இங்கு பிள்ளை இடுக்கி அம்பாள் என்ற பெயர் ஏற்பட்டது . அம்பாளை சம்பந்தர் கூப்பிட்ட இடத்தில உள்ள குளம் ‘கூப்பிட்டான்குளம் ‘ என்றும் அவ்விடத்தில் உள்ள பிள்ளையார் சம்பந்தர் பிள்ளையார் என்றும் இன்றும் வழக்கில் உள்ளது .இத்தலத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் மகப்பேறு நிச்சயம் உண்டாகும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது .

நாம் இவ் தளத்தின் சிறப்பு பெற்ற புதன் பகவான் சன்னதி நோக்கி செல்வோம் , சிறிய நுழைவு வாயில் வழியாக வெளி பிரகாரத்திற்கு சென்றால் புத பகவான் உள்ள சன்னதியை அடையலாம்.

புதன் பகவான் :

கல்விக்கும், தொழிலுக்கும், அதிபதியாக இருக்கும் புதன் பகவானுக்கு இத்தலத்தில் தனி ஆலயத்தில் வீற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காசிக்கு நிகரான புண்ணியத்தை தேடித்தரும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உள்ளது. இந்த கோவிலில் இருக்கும் ருத்ர பாதத்தினை, வழிபட்டால் 21 தலைமுறைறினர் செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். காசியில் விஷ்ணு பாதம். திருவெண்காட்டில் ருத்ர பாதம்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும். இதனால்தான் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானுக்கு 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சிலபேருக்கு இத்திருத்தலத்திற்கு சென்று புதன் பகவானுக்கு தீபம் ஏற்றினால் யோகம் வரும் என்று தெரிந்திருக்கும். இதைத் தெரிந்து, இந்த கோவிலுக்கு செல்பவர்கள், நேராக புதன் பகவானை தரிசனம் செய்ய சென்று விடுவார்கள். ஆனால், இது மிகப்பெரிய தவறு. முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரை வழிபட்டு, அதன் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, அதன் பின்பு இறுதியாகத் தான் புதன் பகவானை வழிபட்டு 17 தீபங்கள் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே சரியான முறையும் கூட.

‘புதன்’ சந்நிதியும் எதிரில் அடுத்ததாக  ‘சந்திர’ தீர்த்தமும் உள்ளது. சந்திரதீர்த்தத்தின் கரையில்  வட ஆல மரமுள்ளது. மிகப்பெரய மரமாகத் தழைத்து விளங்குகின்றது.மரத்தினடியில் விநாயகரும், அவருக்கெதிரில் ருத்ரபாதம் என்னும் பெயரில் இருதிருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது.

பஞ்சவன தலங்களான 1 . சிதம்பரம்  2 . தென்  திருமுல்லைவாசல்  3 . பல்லவனேஸ்வரம்  4 . திருவெண்காடு 5 . சாயாவனம் ஆகியவற்றில் ஒன்று .

காசிக்கு சமமான 6  தலங்களில் 1 . திருவெண்காடு 2 . மயிலாடுதுறை 3 . திருவிடைமருதூர் 4 . திருவையாறு  5 . திருவாஞ்சியம் 6 . சாயாவனம் இத்தலமும் ஒன்றாகும் .

பிரார்த்தனை:

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா ஆகும் .

கல்வெட்டுக்கள்:

இத்திருக்கோயிலில் தமிழிலும் கிரந்தத்திலும் 95 கல்வெட்டுக்கள் உள்ளன .
இராசராசன் 1, இராசேந்திரன் 1, வீரராசேந்திரன் 2, குலோத்துங்கன், விக்கிரம சோழன் 1, குலசேகரபாண்டியன். கௌமாரபாண்டியன், விக்ரமபாண்டியன், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன், பராக்கிரம பாண்டியன், ஸ்ரீவல்லப் தேவன், விருப்பண்ண உடையார், கிருஷ்ணதேவராயர், துக்கோஜி முதலியவர்கள் காலத்திய கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு முடிய கல்வெட்டுக்கள் இங்கு
உள்ளன. கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோயிலுக்கு பல்வேறு நிவந்தங்களைப் பற்றியே உள்ளன. 
இக்கல்வெட்டுக்களால் மேற்குறித்த பல அரசர்களின் பெயர்களோடு அரசியரின் பெயர்களும்  தெரிய வருகின்றன. இராசராச நம்பிராட்டியார், கூத்தன்வீர நாராயணியார், பராந்தகன் மாதேவியார், செம்பியன் மாதேவியார், திரைலோக்கியம் உடையார், வானவன் மாதேவியார், நக்கன் உலோகமாதேவியார், பஞ்சவன் மாதேவியார், வில்லன் மாதேவியார் ஆகிய அரசியரும் நிவந்தங்கள் அளித்து உள்ளனர்.

Photos

https://alayamtrails.blogspot.com/2023/06/sri-swetharanyeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

Contact Number :  +91-4364256424

This Swatharanyeswarar Temple is situated in the village of Thiruvenkadu in Nagapattinam district. This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 11th Shiva Sthalam on the northern bank of the river Cauvery in Chozha Nadu . This is one of 51 Sakthi peedam , this is one of the 6 Shiva Sthalams on the banks of river Cauvery that are considered to be equal in significance with Kasi . Budha (Mercury) is believed to signify a person’s speaking skills. There are many shrines inside the temple. The temple has three presiding deities namely Swetharanya, Aghora and Nataraja who are believed to govern Budha. The temple has three water bodies namely Surya, Chandra and Agni. Swetharanyeswarar Temple is the fourth Navagraha sthalam of the 9 Navagraha Temples in Thiruvenkadu, Tamil Nadu. It is the abode of Bhudhan or Bhudha (planet Mercury).

செல்லும் வழி :

சீர்காழியில் இருந்து சுமார் 13 km தொலைவில் உள்ளது . சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது . மயிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்தில் சென்றால் திருவெண்காட்டிருக்கு செல்லலாம் .

அருகில் உள்ள கோயில்கள் :

1 .பல்லவனேஸ்வரர் கோயில் – பூம்புகார்

2 . சாயவனேஸ்வரர் கோயில் – சாயாவனம்

மற்றும் இக்கோயிலின் அருகில் நிறைய பெருமாளின் திவ்ய தேச கோயில்கள் உள்ளன .

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *