Sri Vanchinathar Temple – Sri Vanchiyam

ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில் – ஸ்ரீவாஞ்சியம்

இறைவன் : வாஞ்சிநாதேஸ்வரர்

இறைவி : மங்களாம்பிகை , வாழவந்தநாயகி

தல விருச்சம் : சந்தன மரம்

தல தீர்த்தம் : குப்தகங்கை  தீர்த்தம் , எம தீர்த்தம்

ஊர் : ஸ்ரீவாஞ்சியம்

மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர் , சுந்தரர் ,சம்பந்தர் , அருணகிரிநாதர்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே.

– திருநாவுக்கரசர்

இக்கோயில் எம பயம் போக்கும் தலம்,  இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை அடைவார்கள் . தேவார பாடல் பெற்ற காவேரி தென் கரை தலங்களில் 70 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 276  தலங்களில் 133 வது தலமாகும் .

காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை – 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு. திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் – திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.

தன்னைப் பிரிந்த திருமகளை  மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது. 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் 3 கோபுரங்களுடனும், 3 பிரகாரங்களும் உடையது.

கோயிலின் உள்ளே நுழைந்தால் வலதுபுறம் சிறிது தூரம் சென்றால் குப்தகங்கை தீர்த்தம் வரும் , குப்தகங்கைத் தீர்த்தம் மிகவும் புனிதமானது.மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷமாகவும் கூட்டமாகவும் இருக்கும்.

 எமன் சன்னதி :

 உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.  கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது. அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவியை உடையதால் எமனை எல்லோரும் திட்டியதாலும், பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டும் எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும் பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இறைவனும் உயிர்களை எடுக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். மரணபயம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை.எமன் நான்கு கரங்களுடன் (பாசம், கதை, சூலமேந்தி) இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றான்.

இவரை தரிசித்து உள்ளே சென்றால் முன்மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரிமணியர் சந்நிதிகள். உள்வாயிலைத் தாண்டியதும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. கொடிக்கம்பம் மற்றும் பலிபீடம் உள்ளது .அடுத்து ‘நட்டுவன் பிள்ளையார்’ சந்நிதி உள்ளது . கடந்து உள்ளே சென்றால் ஈசன் சற்று பெருத்த திருமேனியுடன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார் . அவரை கண்டு வணங்கினால் மனம் அடையும் ஆனந்தத்தை வார்த்தையால் சொல்ல இயலாது .இவரை வணங்குவதால் மன குழப்பம் ,மரண பயம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது .

 உள் பிரகாரத்தை வலம் வந்தால்  வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சந்நிதிகள் உள்ளன. அதையடுத்துக் காசிக்குச் சமமான தலங்களுக்குரிய சிவலிங்கச் சந்நிதிகள் அகோரேஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர், மயூரநாதேஸ்வரர், மகாலிங்கேசர்  முதலான பெயர்களில் உள்ளன.

உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும். இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள் பாலிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை.

துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள்.

யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார். யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில் தலபுராணம் பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளது. இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையும் உள்ளன. தருமை குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.

கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.

கல்வெட்டுகள் :

இத்தலத்தில் 27 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுளன. பிற்கால சோழர்கள் கல்வெட்டுகள் ஏழும், பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் ஏழும், நாயக்கர்கள் கால கல்வெட்டு ஒன்றும், ஏனைய பொது. கல்வெட்டுக்களில் முறையே – குலோத்துங்கச் சோழவள நாட்டில் பனையூர் நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் என்ற குறிப்பு உள்ளது. இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. விற்பனை நில தானம், வரி தள்ளுபடி முதலிய தகவல்கள் உள்ளன.

இரண்டாம் நாள் தீர்த்தவாரி :

எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு.

பரிகாரம் :

மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/12/sri-vanchinathar-temple-sri-vanchiyam.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 5 .30 மணி முதல் 12 .30 மணி வரை , மாலை 4 .00 முதல் இரவு 8 .30 மணி வரை .

Contact Number: 04366 – 228305 , 94424 03926 , 93606 02973

செல்லும் வழி :

 நன்னிலம் – குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது.நன்னிலம் – கும்பகோணம் பேருந்தில் செல்வோர் அச்சுத மங்கலத்தில் இறங்கித் திருவாரூர் பாதையில் சுமார் 2 km  சென்றால் இத் தலத்தையடையலாம். திருவாரூரில் இருந்து சுமார் 17 km தொலைவில் உள்ளது .

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *