ஸ்ரீ பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் – பிரம்மதேசம்
சோழர்கள் காலத்து ஊராக இருந்த பெருமைக்குரிய ஊர் இந்த பிரம்மதேசம் . பல்லவன், சோழன், பாண்டியன், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலம். அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர். பாடசாலையாக விளங்கிய ஊர் . நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன இவ்வளவு பெருமைக்கு உரிய இந்த தலத்தை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் .
இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாதாளீஸ்வரர் ஆலயம் ஊரின் நடுவிலும், பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் ஊரின் வடக்குப் பகுதியில் ஏரிக்கரையின் அருகேயும் இருக்கின்றன.
பாடலீஸ்வரர் கோயில் :
சோழ மன்னனான ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலய கல்வெட்டுகளில் ‘பாதாலீஸ்வரர் ஆலயம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில், மகாமண்டபம் காலப்போக்கில இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது.
ராஜராஜன், ‘பிடாரிபட்டு’ என்னும் கிராமத்தில் உள்ள ‘சப்தமாதர்கள்’ ஆலயத்துக்கு தானம் கொடுத்ததற்கான கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன. ஆலயத்தின் கருவறை வாயிலில் உள்ள 6 அடி உயரம் கொண்ட இரண்டு சிலைகள் பச்சை வண்ண கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தை மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன. எனவே, இங்கு வழிபாடுகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்:
ஏரிக்கரையில் ஓரத்தில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இக்கோயில் காணப்படுகிறது . பெரும்பாலும் வெளிப்புறத்தில் உள்ள மண்டபங்கள் மற்றும் சுவர்கள் உருக்குலைந்து காணப்படுகிறது . பாடலீஸ்வரர் கோயிலின் காலத்தின் பின் காலத்தை சார்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது . இங்கு மாணவர்களுக்கு வேத கல்வி மற்றும் அரங்கேற்றங்கள் நடைபெற்றிருக்க கூடும் என்று கருதப்படுகிறது .
பெரிய மதில் சுவரினைக் கடந்து உள்ளே சென்றவுடன் சற்று இடதுபுறமாக வளைந்து சென்றால் மகாமண்டபத்தின் மிகப்பெரிய நுழைவு வாயில் காணப்படும்.
ஆலயத்தின் கருவறையை சுற்றி நிறைய கல் தூண்கள் காணப்படுகின்றன . அவைகளில் எந்தவிதமான சிற்பங்களும் காணாமல் வெறும் உருளை வடிவ கற்களாக அமைக்கப்ட்டுள்ளன . பள்ளிசாலையாக இருந்திருந்தால் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .
முக மண்டபத்தின் தெற்கு திசையின் அன்னை பெரியநாயகி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் திருக்காட்சியருளுகிறாள். மேல் வலது கரத்தில் அல்லி மலர், மேல் இடது கரத்தில் தாமரை, கீழ் வலது கரத்தில் அபயஹஸ்தம், கீழ் இடது கரத்தில் வரத முத்திரை என அன்னை எழிலுறக் காட்சிகொடுக்கிறாள். அன்னை இந்தத் திருக்கோலத்தில் தரிசனம் தருவது இந்தத் தலத்தில் மட்டுமே.
சதுர வடிவ கருவறையில் பிரமாண்ட திருமேனியோடு கிழக்கு நோக்கி பாணலிங்கமாக பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்.கோயிலின் கருவறையின் அருகில் இருந்து பார்த்தால் இறைவன் உள்ள கருவறை சற்று மறைந்து நம் கண்ணுக்கு தெரியும் அதுவே முன்னே உள்ள மண்டபத்தில் இருந்து பார்த்தால் கருவரையோடு இறைவன் முழுவதும் தெரிவார் .
கல்வெட்டுகள் :
இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன .விக்கிரமசோழன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், தம்புராயர்கள், விஜயநகர மன்னன் மற்றும் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் உள்ளன.
இவ்வூரின் அருகில் எண்ணாயிரம் என்ற ஊர் உள்ளது .மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய ‘மீனாட்சி கலித்தொகை’யில் இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சி மகா பெரியவரின் தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் பிரம்மதேசம் பற்றியும், எண்ணாயிரம் குறித்தும், அந்தணர்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இப்பகுதி குறித்தும், அங்கு நிகழ்ந்த மன்னர்களின் வாழ்க்கையைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்புகளும் பெருமைகளும் , நமது வரலாற்றையும் சுமந்து உள்ள இந்த ஊருக்கு சென்று இந்த கோயில்களை சென்று பாருங்கள் அருகில் உள்ள எசாலம் மற்றும் எண்ணாயிரம் ஆகிய இடங்களில் உள்ள பழமையான கோயில்களையும் சென்று நமது குழந்தைகளுக்கும் நமது வரலாற்றை சொல்லிக்கொடுங்கள் .
Photos :
https://alayamtrails.blogspot.com/2021/04/sri-padaleeswarar-bramahapureeswarar.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 9 .00 – மாலை 7 .00 மணி வரை
செல்லும் வழி:
சென்னை திருச்சி தேசிய சாலையில் திண்டிவனம் தாண்டி பேரணி என்ற ஊருக்கு போகும் வழி வலதுபுறத்தில் வரவும் அங்கிருந்து 8 கிமீ சென்றால் எசாலம் அடையலாம் . அங்கிருந்து பிரம்மதேசம் 3 km தொலைவில் உள்ளது . விழுப்புரம் செஞ்சி சாலையில் சுமார் 16 km தொலைவில் நேமூர் என்ற ஊர் வரும் அங்கிருந்து சுமார் 5 km உள்ளே சென்றால் பிரம்மதேசத்தை அடையலாம் .
Location :