Sri Othandeeswarar Temple – Thirumazhisai

ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் – திருமழிசை

இறைவன் : ஒத்தாண்டேஸ்வரர்

இறைவி : குளிர்வித்த நாயகி

தலவிருச்சம் : வில்வம்

ஊர் : திருமழிசை

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு ஊருதான் இந்த திருமழிசை .உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது ” உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது ” என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது . 12 ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் அவதார தலமாகும் .

இந்த ஊரில் ஜெகந்நாத பெருமாள் கோயில் , வீற்றிருந்த பெருமாள் கோயில் மற்றும் இந்த ஒத்தாண்டேஸ்வரர் கோயில் ஆகியவை அருகருகே அமைந்திருக்கிறது .

சாலையின் ஓரத்திலேயே மிக கம்பீரமாக ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது . கோயிலின் அருகிலேயே மிக பெரிய தெப்ப குளம் உள்ளது . தெற்கு நோக்கி உள்ள  ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் வலது புறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவன் உள்ள சன்னதி உள்ளது . நந்தி மண்டபம் , பலிபீடம் மற்றும் துவாஜஸ்தம்பம் ஆகியவைகள் இறைவனை பார்த்து உள்ளன .

உள்ளே நாம் சென்றால் மூன்று அடுக்குடன் கூடிய கஜபிருஷ்ட வடிவிலான விமானத்தின் கீழ் இறைவன் லிங்க வடிவமாக காட்சிதருகிறார் . அவர் தலையில் ஒரு வெட்டு காயம் உள்ளது .லிங்கத்திற்குப் பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கியிருக்கும் இவ்விருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தெற்கு நோக்கிய தனி சன்னதியில் தாயார் குளிர்வித்த நாயகி தனி சன்னதியில் காட்சி தருகிறார் .உள் பிரகாரத்தில் பிரசன்ன விநாயகர் ,தேவராஜா கணபதி , வள்ளி , தெய்வயானை சமேதராக சுப்ரமணியர், வீரபாகு தேவர் , புலஸ்தியர் வழிபட்ட கங்காதர ஈஸ்வரர் , பர்வவர்தினி ஆகியோரை தரிசிக்கலாம் .

இங்குள்ள நடராஜர் அம்பாளைப் பார்த்த படியும், அம்பாள் அவரைப் பார்த்தபடியும் உள்ளனர். நடுவில் நந்தி புறப்படும் நிலையில் உள்ளார் . மன்னன் தனது கையை வெட்டியபோது அவனைக்காத்து, தர்மத்தை நிலைநாட்டச் சிவன் வேகமாக வந்து மன்னனுக்குக் காட்சி தந்தார். அப்போது, சிவனின் வாகனமான நந்தி அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாம். எனவே, இங்குச் சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடுவில் நந்தி இருக்கிறது. சுவாமிக்கு முன்புறம் அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இருப்பதுடன் அவருக்குப் பின்புறத்தில் கோஷ்டத்தையடுத்து கிழக்கு நோக்கியபடி தர்ம நந்தியும் உள்ளது.

வரலாறு :

இரண்டாம் குலதுங்க சோழன் , இத்தலத்திற்கு அருகிலுள்ள திருமுல்லை வயல்  சிவனை வழிபடுவதற்காகத் தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனைக் களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான். அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கிப் பார்த்தபோது உள்ளே ஒரு லிங்கம் இருந்தது.

பதறிப் போன மன்னன், லிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை கைதந்தபிரான் என்று அழைக்கிறார்கள். மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் குளிர்வித்த நாயகி என்றழைக்கப்படுகிறாள்.

இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும் . கல்வெட்டுகள் கஜபிருஷ்ட கருவரையிலும், தூண்களிலும் காணப்படுகிறது .

பரிகாரம்:

ஒத்தாண்டேஸ்வரரை வணங்கினால், மனோபலம் ஏற்படும் என்பதால் இவருக்கு மன அனுகூலேஸ்வரர் என்றொரு பெயரும் உள்ளது. திருமணத்தடை நீங்க வழிபடுகிறார்கள்

Location:

https://alayamtrails.blogspot.com/2022/05/sri-othandeeswarar-temple-thirumazhisai.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .30 -11 .30 வரை , மாலை 4 .30 -9 .00 வரை

செல்லும் வழி :

சென்னையில் இருந்து பூந்தமல்லி வழியாக திருவள்ளூர் செல்லும் சாலையில் பூந்தமல்லியில் இருந்து சுமார் 5 km தொலைவில் உள்ளது . சாலையின் ஓரத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது , இக்கோயிலின் எதிர்புறம் சென்றால் பெருமாள் கோயிலுக்கு செல்லலாம் .

Location:

                                            -ஓம் நமசிவாய –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *