ஸ்ரீ நாகநாதர் கோயில் -கீழப்பெரும்பள்ளம்

இறைவன் : நாகநாதர்
இறைவி : சௌந்தர்யநாயகி
தல விருட்சம் : மூங்கில்
தல தீர்த்தம் : நாகதீர்த்தம்
ஊர் : கீழப்பெரும்பள்ளம்
மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு
கும்பகோணம் சுற்றி உள்ள நவகிரக தலங்களில் இத்தலமானது கேது பகவான் பரிகார தலமாகும் .சோழர்கள் காலத்து கோயிலாகும்
ஆலய அமைப்பு :
இந்த ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லாமல் ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில், ரிஷபாரூடராக சிவபெருமான் சுதை வடிவில் காட்சி தருகிறார்.
முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் ஒரு பெரிய நந்தியைக் காணலாம். இறைவன் நாகநாதஸ்வாமி கிழக்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.
கேது பகவான் தனி சந்நிதியில் மேற்கு நோக்கி, பாம்பு தலையுடனும் மனித உடலுடனும் இரு கைகளையும் கூப்பி சிவன் சந்நிதியை நோக்கி வணங்கியபடி உள்ளார்.
இத்தலத்தில் கேதுவே பிரதானமாதலால், இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. பிராகாரத்தில் சனீஸ்வரரும், இரண்டு சூரியர்களும் காட்சி தருகின்றனர்.
அம்பாள் அருள்மிகு சௌந்தரநாயகி தென்திசை நோக்கி தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.
கோயிலின் மேற்கு பிராகாரத்தில் ஶ்ரீ விநாயகர், வள்ளி, தெய்வசேனா சமேதராக ஶ்ரீ சுப்பிரமணியர், துர்கை, ஶ்ரீ லெட்சுமி, ஶ்ரீ நாராயணர், மகேஸ்வரி, கஜலெட்சுமி ஆகியோர் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றனர். கோயிலின் கிழக்கு பிராகாரத்தில் ஶ்ரீசனீஸ்வரர், பைரவர், சம்பந்தர், நாகர், சூரியன் ஆகியோர் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கின்றனர்.
கோயில் முன் கோயிலின் தீர்த்தமான நாகதீர்த்தக் குளம் அமைந்துள்ளது. நாகதீர்த்தத்தின் மேற்குக் கரையில் நாகர் பிரதிஷ்டையுடன் அரசும் வேம்பும் உள்ளன. கோயிலின் கிழக்குப் புறத்தில் வாசுகி தவமியற்றிய இத்தல விருட்சமான மூங்கில் தோப்பு உள்ளது.
ஞானக்காரகன் கேது
கேது பகவான் ஞானகாரகனாக அறிவு, முக்தி போன்றவற்றுக்கு பிரதான கிரகமாகக் கருதப்படுகிறார். மனிதர்களின் அனிச்சை செயல் ஒவ்வொன்றுக்கும் இவரே காரகனாக விளங்குகிறார்.
கேது பகவான் பிறப்பால் அசுர வம்சத்தைச் சேர்ந்தவராவார். இவரது இளமைப் பெயர் ஸ்வர்பானு. காசிப முனிவரின் மகன் விப்ரசித்து கேது பகவானின் தந்தை. தாய் சிம்கிகை. இதனால், சம்கிகேயன் என்றொரு பெயரும் கேது பகவானுக்குக் குறிப்பிடப்படுகிறது.
நிழல் கிரகமாக விளங்கும் கேது பகவான் நவக்கிரக வரிசையில், வடமேற்கு திசை நோக்கிக் காட்சியளிக்கிறார். கிரக பெயர்ச்சியில் வலமிருந்து இடமாக பெயர்ச்சி ஆகக் கூடியவராக உள்ளார்.
ஜோதிட சாஸ்திரப்படி இவருக்கு சொந்த வீடு இல்லாததால், எந்த கிரகத்தின் வீட்டில் தங்குகிறாரோ அந்தக் கிரக அதிபதியின் பலனை அளிக்கக் கூடியவர் ஆவார்.
செந்நிற ஆடைகளும், பல வண்ண மலர்களும் இவருக்கு உகந்தது. இவருக்கான தானியம் கொள்ளு. சுவை – புளிப்பு. ஆசனம் – கொடி வடிவிலானது. நவரத்தினங்களில் இவருக்கானது வைடூரியம்.
கேதுவை போல கெடுக்கக் கூடியவர் இல்லை என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டாலும், கேது பகவான் இரக்கக் குணம் கொண்டவர் ஆவார். இவரை வழிபடுவோருக்கு சொர்ண லாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் கீழப்பெரும்பள்ளம்ஜாதகத்தின்படி கேது தசை மற்றும் கேது புத்தி நடைபெறும் காலங்களில் இத்தலம் வந்து கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம்.
பிராத்தனை :
இத்தலத்தில் நரம்பு, வாயு தொடர்பான நோய்கள் நீங்கவும், பயம் நீங்கவும், தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்கவும், குடும்பத்தில் எப்போதும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், தலைமுறை சிறக்கவும் இறைவன் நாகநாதரையும், கேது பகவானையும் வழிபடுகின்றனர்.
ஜாகத்தில் கேது திசை நடப்பவர்கள் அவர்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இத்தலம் வந்து பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடனாக பக்தர்கள் கேது பகவானுக்கு கொள்ளு சாதம் படைத்து, பல வர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
ராகு காலத்திலும், எமகண்டத்திலும் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. பூஜையின் போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்து, கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைக்கின்றனர்.
அதோடு கேது பகவானுக்கு பல வண்ணத்தில் வஸ்திரம் சாத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத நைவேத்யத்தை இங்கேயே விநியோகம் செய்து விடுகிறார்கள்.இந்த நைவேத்யத்தை கோயிலியே செய்து தருகிறார்கள் என்பது சிறப்பு. இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
Temple Photos:
https://alayamtrails.blogspot.com/2026/09/sri-naganathaswamy-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Contact Number: + 91- 4364 – 260 582, 275 222, 260 088, 260 424, 94435 64642, 95004 16171 .
செல்லும் வழி :
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள தர்மகுளத்தில் இருந்து சுமார் 1 km தொலைவில் இக்கோயில் உள்ளது . சீர்காழியிலிருந்து வாணகிரி பேருந்தில் சென்றால் கீழப்பெரும்பள்ளம் ஊரை அடையலாம்.
Location Map:
