ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோயில் – ஆண்டான்கோயில்

இறைவன் : சொர்ணபுரீஸ்வரர்
இறைவி : சொர்ணாம்பிகை , சிவாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தல தீர்த்தம் : திரிசூலகங்கை
ஊர் : ஆண்டான்கோயில்
மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர்
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னைஅடி யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக் கடு வாய் ப்புனல் ஆடிய
திருத்த னைப் புத்தூர்ச் சென்றுகண்டு உய்ந்தேனே
– திருநாவுக்கரசர்
தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் இத்தலமானது 160 வது தலமாகும் . தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென் கரை சிவ தலங்களில் 97 வது தலமாகும் .
கோயில் அமைப்பு :
இக்கோயில் ராஜகோபுரமானது ஐந்து நிலையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது . கோயிலுக்கு முன் இவ் தலத்தின் தீர்த்தமான திரிசூலகங்கை குளம் உள்ளது .
ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிக்கம்பம் ,பலிபீடம் மற்றும் நந்தியப்பெருமானை தரிசிக்கலாம் . நந்தி மண்டபம் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது .
கோபுரத்தின் இடது புறத்தில் சித்தி விநாயகர் சன்னதி உள்ளது . முக மண்டபம் மிக பெரியதாக உயரமாக உள்ளது . மண்டபத்தில் உள்ள தூண்களில் நிறைய சிற்பங்கள் உள்ளன .
முக மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் அர்த்தமண்டபத்தை அடையலாம்.மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர்கள் உள்ளார்கள் .
கோயிலை வலம் வந்தால் ஸ்வர்ண விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், முசுகுந்த சக்கரவர்த்தி, சண்ட தேவர், ரோம மகரிஷி , நால்வர், மாணிக்கவாசகர் , சேக்கிழார், நவகிரகங்கள், பைரவர் மற்றும் சூரியன் ஆகியோரை தரிசனம் செய்யலாம் .
அம்பாள் பூர்ணாம்பிகை சன்னதி தனி கோவிலில் துவாரபாலகிகளுடன் இருக்கிறாள். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கிய கோஷ்டம் இல்லாமல் உயர்ந்த நிலையில் உள்ளது. அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
தல வரலாறு :
முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக, மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வரச் சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்.
சிவன் இவரது கனவில் தோன்றி, “நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து” என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு இலிங்கம் இருந்தது.
உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார். ஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார்.
மன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு,”மந்திரியாரே! இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு” என்றார். அதற்கு மந்திரி, “மன்னா! என் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்” என்றார். இதனால் கோபமடைந்த ராஜா,”என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோயில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்” என உத்தரவிட்டார்.
மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது. வெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் “ஆண்டவனே” என்றது. இதையறிந்த இராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் வெட்ட நினைக்கிறார். அப்போது இறைவன் தோன்றி “ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்” என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார்.
அன்று முதல் இத்தலம் “ஆண்டவன் கோயில்” எனப்பட்டது. காசிப முனிவர் வழிபாடு செய்துள்ளார்.
அமைச்சர் கண்டதேவருக்காக ஒளிமயமாக ஐயன் தேவியுடன் எழுந்தருளியபோது, அந்நகரமே தங்கமயமாகக் காட்சியளித்ததால், அன்றிலிருந்து அவ்வூர் சொர்ணபுரி என்றும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் எனவும், அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்பட்டு வருகின்றனர்.
திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை “கடுவாய்க்கரைத் தென்புத்தூர்” என்று குறிப்பிடுகிறார். “கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன்” என்று திருநாவுக்கரசர் இறைவன் தரிசனம் கிடைக்கப்பெற்றதை தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.
வேண்டுதல் :
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ‘ருது’ ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
Temple Photos:
https://alayamtrails.blogspot.com/2026/09/sri-swarnapureeswarar-temple-andankoil.html
திறந்திருக்கும் நேரம் :
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Contact Number : 96773 50150 , 4374-265 130
செல்லும் வழி :
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன். ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.
Location Map:
திருச்சிற்றம்பலம்
