Sri Anantha Padmanabha Swamy Temple- Thiruvananthapuram

ஸ்ரீ அனந்த பத்மநாபா சுவாமி கோயில் – திருவனந்தபுரம்

Sri Anantha Padmanabha Swamy Temple- Thiruvananthapuram

இறைவன் : அனந்த பத்மநாபன்

தாயார் : ஸ்ரீ ஹரிலக்ஷ்மி

தீர்த்தம் : மத்ஸ்ய ,பத்மா, வராஹ தீர்த்தம்

கோலம் : சயன கோலம்

விமானம் : ஹேமகூட விமானம்

ஊர் : திருவனந்தபுரம்

மாவட்டம் : திருவனந்தபுரம் , கேரளா

மங்களாசனம்: நம்மாழ்வார்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில் இத்தலம் 76 வது தலமாகும். மலைநாட்டு திவ்யதேசமாகும் .

 நம்பெருமாள் இத்தலத்தில் 12,000 சாளக்ராமங்களால் உருவான 18 அடி  நீள அற்புத மகா அதிசயம்.

இந்தக் கோவில் 100 அடி உயரத்துடன் ஏழு-வரிசைகள் கொண்ட கோபுரம் கொண்டதாகும். இந்தக் கோவில் பத்ம தீர்த்தத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும். கோயில் உள்ளே செல்லும் போது கோயிலின் தாழ்வாரங்கள் மிக பெரியதாக இரண்டு புறங்களிலும் உள்ள தூண்கள் அதில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஆகியவை பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டும் .

கொடிமரத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது . மற்றும் கோயில் உள் பிரகாரத்தில் தாழ்வாரத்தில் ஒருபுறத்தில் கடல் மணலால் ஆன பகுதி நாம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது .

கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக ந்ருஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.

சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பத்மநாபர் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை எட்டுவீட்டில் பிள்ளமார் என்ற சக்தி வாய்ந்த ஜமீன்தார்கள் ஆண்டுவந்தனர், மேலும் எட்டர யோகம் என்ற அமைப்பு அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. பிறகு மார்த்தாண்ட வர்மன், பிள்ளமார்கள் மற்றும் அவர்களுடைய வம்சத்து “குஞ்சு தம்பிகளை” போரில் தோற்கடித்து, கோவிலைக் கைப்பற்றினார். முந்தைய திருவாங்கூர் சமஸ்தான த்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை கடைசியாக புதுப்பித்தார்.ஒரு முறை 1686-ல், கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அந்த இலுப்பை மரத்தால் ஆன விக்ரக மூர்த்தியின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது, அப்பொழுது, இறைவன் அந்நாளில் இராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்த அரசரிடம் சிறிது கோபமாக இருந்ததை அந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12008 சாளக்கிராமத்தினாலும் “கடுசர்க்கரா” என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது “அனந்தசயன மூர்த்தி” பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Sri Anantha Padmanabha Swamy Temple- Thiruvananthapuram

தல வரலாறு :

வில்வமங்கலத்து சுவாமிகள் என்பவர் , நாராயணனை தினமும் மனம் உருக வழிபாடு செய்து வந்தார். ஆயினும் அவரிடம் தவறு இருப்பதை உணர்ந்த நாராயணன் அதை அவருக்கு உணர்த்த வேண்டும் என்று கருதி  ஒரு நாள் சிறுவன் போல் வடிவம் கொண்டு அவருடைய பூஜைக்கு இடையூறு செய்யும் விதமாக  அவரின் மீது ஏறி விளையாடுவது ,பூக்களை நாசம் செய்வது என பல குறும்புகளை செய்தார் . பொறுமையை இழந்த சுவாமிகள் தொந்தரவு செய்யாமால் இரு என்று சிறுவனை தள்ளி விட்டார் .அப்போது சிறுவனாக வந்த இறைவன் ‘பக்திக்கும் ,துறவுக்கு மிகவும் பொறுமை தேவை அது உங்களிடம் உள்ளதா என்று ஆராய்ந்து பாருங்கள்.நீங்கள் பக்குவம் அடைத்தவுடம் அனந்தன் காடு சென்று இறைவனை பாருங்கள் ‘ திகைத்து போன சுவாமிகள் வந்தவர் சிறுவன் அல்ல ,அவர் அந்த பரந்தாமனே என்பதை உணர்ந்தார் .

தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை.பல சிரமங்களுக்கு இடையே  அந்த காட்டை கண்டறிந்தார் .அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் “உண்ணிக் கண்ணனாக’ இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் .

அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. “பத்மநாப சுவாமி’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.அந்த சிரட்டையில் மேலும் தடித்த தங்கத்தின் ஏடுகளால் வெளிபாகத்தில் பொதிந்து, இன்று வரை பாதுகாத்து வருகிறது.

இறைவனின் தோற்றம் மற்றும் கற்பகிரஹம் :

கோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை “ஒற்றைக்கல் மண்டபம்” என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் “ஒற்றைக்கல் மண்டபத்தின்” மீது ஏறவேண்டும். இந்த “ஒற்றைக்கல் மண்டபத்தில்” வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகா ராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த “ஒற்றைக்கல் மண்டபத்தில்” இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த மகா ராஜா என்பவர் கூட “பத்மநாப தாசராக”, அல்லது இறைவன் மகா விஷ்ணுவின் சேவகனாக, போற்றப்படுகிறான். இன்றும் திருவாங்கூர் ராஜ்யத்தை ஆள்வது மகா விஷ்ணுவே என்று நம்புகிறார்கள் .

கோவிலின் கற்பக்கிரகத்தில், அய்யன் மகா விஷ்ணு அனந்தன் அல்லது ஆதி செஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் பள்ளி கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் விளங்கும் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஈசரின் வலது கரம் பரமசிவரின் மீது தொங்குவது போல காணப்படுகிறது. மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம்.

ராஜாவின் தானப் பட்டயம் :-

1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா இக்கோயிலின் இறைவனான பத்மநாபஸ்வாமிக்கு தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் “பத்மநாபதாசர்” என்று அழைக்கப்பட்டனர்.இதனால் பத்மநாபஸ்வாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது.

கோயிலின் ரகசிய அறைகள் :

இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.

திறந்திருக்கும் நேரம் :

 காலை : 3 .30 -4 .30 , 6 .30 -7 .00 ,8 .30 -10 .30 -12 .00 pm

 மாலை : 5 .00 -6 .30 , 6 .45 – 7 .30

செல்லும் வழி:

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 km தொலைவில் இக்கோயில் உள்ளது . இப்பகுதி கோட்டை என்று அழைக்கப்படுகிறது .

கோயில் கட்டுப்பாடுகள் :

Sri Anantha Padmanabha Swamy Temple- Thiruvananthapuram

   பக்தர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட ஆடை அணிகலன்களையே அணிய வேண்டும்.ஆண்கள் இடுப்பிற்கு மேல் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி கோவில் பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும்.

இரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது.இதன் பொருளானது ஆண்கள்  கால்சட்டைகள் அணியக்கூடாது மற்றும் பெண்கள் சுடிதார்  அணியக்கூடாது.கோயிலின் வெளியே கோயில் நிர்வாகத்தின் பொருள்கள் காக்கும் இடம் உள்ளது .அங்கு நம்முடைய உடைகள் ,காலணிகள் ,செல்போன், பைகள் ஆகியவற்றை அங்கு பாதுகாப்பாக வைக்கலாம் .அங்கேயே வேஷ்டி ,துண்டு ஆகியவைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன .

History in English

Padmanabhaswamy Temple is located in Thiruvananthapuram, Kerala, India. The temple is built in an intricate fusion of the indigenous Kerala style and the Tamil style  of architecture associated with the temples located in the neighbouring state of Tamil Nadu, featuring high walls, and a 16th-century Gopuram. The temple is one of the 108 principal Divya Desams  in Vaishnavism, and is glorified in the Divya Prabandha. The Divya Prabandha glorifies this shrine as being among the 13 Divya Desam in Malai Nadu. The 8th century Alvar Nammalvar sang the glories of Padmanabha.

Map Location:

1 Comment

Leave a Reply