Aippasi Annabishekam For Lord Shiva

ஐப்பசி மாதம் அன்னா அபிஷேகம்

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!

தாயின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு , உணவும் , மன உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை . நம் தாய் சமைத்து வழங்கும் உணவில் ஒருவித புரிதல் , அன்பு கலந்த உணர்வு ஏற்படும் , ஆதலால் தான் யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அதை நாம் சாப்பிட்டுவிட்டு இது என் அம்மா செய்தது போல் உள்ளது என்போம் .

இதையே பட்டினத்தார் தன் பாட்டில் “ அன்னையோடு அறுசுவை உண்டிபோம்  ” என்று அம்மாவை பற்றி கூறியுள்ளார் .

இதன் அடிப்படையிலேயே நமக்கெல்லாம் தாயுமாகவும் , தந்தையாகவும் உள்ள ஈசனை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம் .

“அன்னம் பரப்பிரம்மம் சொரூபம் “ என்று சொல்வர் . உணவை கடவுளாக நாம் கருதுவதால் அந்த உணவு நாம் கடவுளாக மதித்து வீணாக்காமல் இருக்க வேண்டும் .

இந்த உலகத்தில் எல்லா உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன் எல்லாமும் ஆகி நிற்கும் ஈசன் , அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது .

ஐப்பசி மாதம் சிறப்பு :

இதை ஐப்பசி மாதம் நடத்த காரணம் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு . அன்றுதான் சந்திரன் தனது சாபம் நீங்கி 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றுகிறான் . அறிவியல் ரீதியாக பார்த்தால் அக்டோபர் மாதத்தில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது ஒளியையும்  பூமியை நோக்கி வீசுகிறதாம் . வானவியலில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி அதனால் நம் ரிஷிகள் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கூறினார்கள் . ஒவ்வொரு அன்னமும் சிவரூபம் உள்ளதால் இந்த அன்னத்தை வீணாக்க கூடாது என்னும் நோக்கில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது .

அதுமட்டும் அல்லாமல் அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டானது .நிலத்தில் விதைத்து ,நீரால் வளர்ந்து ,காற்றினால் விரித்து சூரியனின் வெப்பத்தால் உருகி விளைச்சலை தருகிறது .

அன்னாபிஷேகம் நடைபெறும் முறை :

அன்னாபிஷேகம் ஐப்பசி மாத முழு நிலவில் நாளில் முதலில் 5 வகை பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் சாய்த்து பின்பு நன்கு வடித்து ஆறவைத்து அன்னத்தை கொண்டு தேவையான நீர் கலந்து சிவலிங்க திருமேனியின் மேல் இருந்து அன்னத்தை வைத்து கொண்டே வருவார்கள் . சிவலிங்கத்தை 3 பகுதியாக பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி அதுதான் பிரம்மபாகம் ,

 நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.

“ஊனுடம்பில் குடிகொண்டவனே ,ஊழ்வினை பாராது படியளந்திடு”மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது. 

பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

ஓம் நமசிவாயா!

Leave a Reply