ஸ்ரீ பாதாளீஸ்வரர் கோயில் – அரதைப்பெரும்பாழி- அரித்துவாரமங்கலம்

இறைவன் : பாதாளீஸ்வரர் / பாதாள வரதர்
இறைவி : அலங்கார நாயகி
தல விருச்சம் : வன்னி மரம்
தல தீர்த்தம் : பிரமதீர்த்தம்
ஊர் : அரித்துவாரமங்கலம்,அரதைப்பெரும்பாழி
மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர்
பைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே
– சம்பந்தர்
தேவாரம் பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் இத்தலம் 162 வது தேவார தலம். காவிரி தென்கரை தேவார தலங்களில் 99 வது தலமாகும் . பஞ்ச ஆரண்ய தலங்களில் மூன்றாவதும் வன்னிவனமாக உச்சிகால வழிபாட்டுக்கு உரிய தலமாகும் .சிவனின் திருவடிக்கான பெருமாள் வராக உருவம் கொண்டு பூமியை துளைத்த இடம் இங்கு இன்னும் உள்ளது .
கோயில் அமைப்பு :
மிகவும் சிறிய ஊராக உள்ளது , ஆனால் ஊரின் நடுவே மிக பெரிய குளத்தை தீர்த்தமாக கொண்டு மிக அழகாக இக்கோயில் அமைந்துள்ளது . கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஒரு மண்டபம்.ராஜகோபுரத்திலிருந்து நேரே பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்தி உள்ளார்கள் . அவர்களை வணங்கிவிட்டு நாம் நேரே சென்றால் மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி உள்ளது . சற்று பெரிய லிங்க திருமேனியுடன் இறைவன் காட்சிகொடுக்கிறார் .இவரை வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கி மிக மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம் .
சிவபெருமானின் கீழே தரை பகுதியில் இறைவனின் திருவடியை காண பெருமாள் வராக (பன்றி) ரூபம் கொண்டு துவரம் இட்டு சென்ற பள்ளம் இன்றும் இங்கு உள்ளது . அதை சிறு கல்லை வைத்து அடைத்துள்ளார்கள். நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துவாரம் போட்டதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது.பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று பெயர் வந்தது. இறைவனை வணங்கிவிட்டு நாம் வலம் வந்தால் ராஜகோபுரத்தின் இடப்பக்கத்தில் உள்ள மண்டபத்தின் நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர் மற்றும் பைரவரை தரிசிக்கலாம் .பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம்.
இறைவி அலங்கார நாயகி தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அழகும் கருணையும் கொண்டு நம்மை காத்துஅருளுகிறாள் .சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் கிழக்கு பார்த்தபடி சந்நிதி உள்ளதால் இதை கல்யாண கோலம் என்பார்கள் .இங்குள்ள அம்மையே துர்க்கைக்கு நிகரானவன் என்பதால் தனியாக துர்க்கை சன்னதி இல்லை .அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.
கோயில் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். கோயிலின் தல விருச்சமான வன்னி மரத்தை நாம் தரிசிக்கலாம் . அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடைப்பட்ட சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. அதேபோல மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது.
இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது.
தல வரலாறு :
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. சிவபெருமானும் அதற்கு இசைவு தெரிவிக்க, பூமிக்கடியில் இருக்கும் அவரது பாதத்தைக் காண வராக அவதாரம் எடுத்தார். தனது முகத்தால் பூமியில் துவாரம் ஏற்படுத்தி, அவ்வழியே உள்ளே சென்றார். ஆனால் பாதத்தைத் தான் காண முடியவில்லை. சற்றே விரக்தி தோன்றியதால், பூமியின் மேலே வந்தார். அங்கே நாராயணன் சிவனை வேண்டித் தவம் புரிந்தார். அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியை துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான்.இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும் ரகசியமாகும்.
இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்
1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) – காலை வழிபாட்டிற்குரியது.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) – வன்னிவனம் – உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) – பூளை வனம் – மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) – அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
Photos:
https://alayamtrails.blogspot.com/2025/08/sri-padaleswarar-temple-aridwaramangalam.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 8 .00 மணி முதல் 12 .00 மணி வரை , மாலை 4 .30 மணி முதல் 8 .00 மணி வரை
contact Number : 9442175441 ,04374 -264586
செல்லும் வழி :
கும்பகோணம் – நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம்.
அருகில் உள்ள தலங்கள்:
1 . சாட்சிநாதர் கோயில் -அவளிவநல்லூர் ( தேவார தலம் )
Location Map:
