Sri Shanmuganathar Temple – Kunnakudi

ஸ்ரீ சண்முகநாதர் கோயில் – குன்னக்குடி / குன்றக்குடி

இறைவன் : சண்முகநாதர்

 தாயார் : வள்ளி , தெய்வானை

 தலவிருச்சம் : அரசமரம்

 தலதீர்த்தம் : தேனாறு

 ஊர் : குன்றக்குடி

 மாவட்டம் : சிவகங்கை , தமிழ்நாடு

குன்று இருக்கும் இடமெல்லாம் அழகன் முருகன் இருக்கும் இடம் என்ற சொல்லுக்கேற்ப இந்த குன்றக்குடியில் முருக பெருமான் அழகிய திருவுருவத்தோடு அருள்பாலிக்கிறார் . அருணகிரிநாதர் இக்கோயில் முருகனை பற்றி பாடியுள்ளார் .

நகரத்தார் அதிகம் வசிக்கும் பகுதியை சார்ந்தது இந்த குன்றக்குடி . பிள்ளயார்ப்பட்டியில் முதல்வன் விநாயகர் கற்பக விநாயகராக அமர்ந்திருக்க அதன் அருகிலேயே இந்த குன்றக்குடியில் தம்பியும் அமர்ந்துள்ளார் .

தல வரலாறு :

அன்னமும் கருடனும் நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்க கூடியவர்கள் என்று சொன்னதால் கோபமடைந்த மயில் ஒன்று இருவரையும் விழுங்கியது. இதனால் இந்திரன் முருகனிடம் முறையிட மயிலை மலையாக போக முருகன் சாபமிட்டாராம். இதனால் மயில் முருகனை நினைத்து அரச வனம் என்ற இந்த இடத்தில் தவம் இருந்ததாம். மயிலின் தவத்தை போற்றி முருகன் இங்குள்ள மலையிலேயே எழுந்தருளி மயிலுக்கு சாப விமோசனம் தந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இங்குள்ள சண்முகநாதர் என அழைக்கப்படும் முருகன் எழுந்தருளி வீற்றிருக்கிறார்.

கருவறையில் முருகன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, அழகிய மயில்மீது கம்பீரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருளாசி தருகிறார் . சண்முகர்  அமர்ந்திருக்கும் மயில் வடக்குப் பார்த்திருக்கிறது. ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும் தெய்வானையும் வீற்றிருக்கிறார்கள். இதுபோன்ற மூன்று மயில் வாகன தரிசனம் காண்பதற்கரியது என்கிறார்கள். முருகனின் மயில் வாகனமும், முருகப்பெருமானை சூழ்ந்திருக்கும் திருவாசியும், மூலமூர்த்தமும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது.

 பிராத்தனை :

இக்கோயிலானது காவடி எடுப்பதிற்கு மிகவும் பெயர்போனது . ‘குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது ‘ என்ற பழமொழியே இக்கோயிலின் காவடியின் பெருமையை நமக்கு சொல்கிறது .பல வேண்டுதல்களை வைத்திருப்போர் குன்றக்குடிக்கு காவடி எடுத்து வருகிறேன் என வேண்டிக்கொண்டு நேர்த்தி செலுத்துவர். அந்த வகையில் தமிழ்நாட்டிலேயே காவடிக்கு பெயர் பெற்ற ஊர் இந்த குன்னக்குடி.

இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய  பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.

குடவரை கோயில் :

இந்த குன்னக்குடி குன்றின் அடிவாரத்தில் குடவரை கோயிலும் உள்ளது .முருகன் மலைக்கோவிலின் தென்மேற்கு அடிவாரத்தில்  மசிலீச்சுரம் என்று பாண்டிய மன்னனின் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள பெயரினை  தாங்கி நிற்கும் இந்த குடைவரை கோவில், மசிலீச்சுரம் – மயில் + மலை + ஈச்சுரம் என பொருளுடன் விளங்குகிறது . ஏழாம் நூற்றாண்டை சார்ந்த இந்த குடைவரைக்கோயிலில் பாண்டியமன்னர்கள்  மற்றும் சோழமன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன . மூன்று குடவரை கோயில்கள் உள்ளன அதில் இரண்டு குடவரை கோயில்களில் ஈசன் லிங்க வடிவில் அருள் செய்கிறார் , சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் உள்ளார் .இவரை அகத்திய மாமுனிவர் பூஜித்ததாக கூறுகிறார்கள் .மூன்றாவது குடவரை கோயிலில்  புடைப்புச் சிற்பங்களான முருகன், இரண்டு துவாரபாலகர்கள், திருமால், கருடாழ்வார், நான்முகன், மூன்று சிவலிங்கங்கள், ஆடல் வல்லான்,வலம்புரி விநாயகர் ஆகியோர்கள் உள்ளார்கள் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 4 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை

செல்லும் வழி :

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காரைக்குடியில் இருந்து சுமார் 10 km தொலைவில் இக்கோயில் உள்ளது .

Location:

Leave a Reply