Satchinathar temple-Avalivanallur

Sri Satchinathar Temple – Avalivanallur

ஸ்ரீ சவுந்திரநாயகி  சமேத சாட்சிநாதர் கோயில் – அவளிவநல்லூர்

Sri Satchinathar temple-Avalivanallur

இறைவன் : சாட்சிநாதர்

இறைவி :  சவுந்திரநாயகி

தல விருச்சம் : பாதிரி மரம்

தல தீர்த்தம் : சந்திர  புஷ்கரிணி

ஊர் : அவளிவநல்லூர்

மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர் , சம்பந்தர்

கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித்

தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடபம் ஏறிக்

கம்பரிய செம்பொனொடு மாடமதில் கல்வரைவி லாக

அம்புஎரிய வெய்தபெரு மான்உறைவது அவளிவள் நல் லூரே

– சம்பந்தர்

தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் தன்னைத்

தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று

வீற்றினை யுடையவனாகி வெடுவெடுத்து எழுந்த வன்றன்

ஆற்றலை அழிக்க வல்லார் அவள் இவள் நல்லூரே

– அப்பர்

தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 163 வது தலமாகும் , தேவார பாடல் பெற்ற தென் காவிரி சிவத்தலங்களில் 100 வது தலமாகும் . பஞ்ச ஆரண்ய சிவ தலங்களில் இரண்டாவது தலமான பாதிரி வன தலமாகும் .

மிகவும் சிற்றூரான இந்த அவளிவநல்லூர் சாலை ஓரத்திலேயே இந்த கோயில் அமைந்துள்ளது . கோயிலின் முன் கோயிலின் தல தீர்த்தமான சந்திர தீர்த்தம் உள்ளது . அப்படியே நாம் காலை நனைத்துவிட்டு எதிரே உள்ள கோயிலுக்கு செல்வோம் .

கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை , அதர்க்கு பதில் கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது . அதை கடந்து நாம் உள்ளே சென்றால்  வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில்  அழகும் கருணையும் கொண்டு நமக்கு காட்சி தருகிறாள். தாயாரை தரிசித்துவிட்டு நாம் இறைவன் சன்னதியை நோக்கி செல்வோம் . முகப்பில் இருபுறங்களிலும் முறையே  விநாயகர் மற்றும் முருகன் சிறிய சன்னதிகளில் காணப்படுகிறார்கள் . அவர்களை வணங்கி விட்டு உள்ளே சென்றால் இறைவன் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

திருக்கோவிலைச் சுற்றி நான்கு புறமும் ஓங்கி உயர்ந்த மதில் சுவற்களும், அருகே தல விருட்சமான பாதிரி மரங்களும் உள்ளன.பஞ்ச ஆரண்யத் தலங்களில் இரண்டவதாகவும், காலை நேரத்தில் வழிபடுவதற்கு ஏற்ற தாகவும் சனகாதி முனிவர்களால் சொல்லப்பட்ட சிறப்புமிக்க திருத்தலம் இந்த ஆலயம் .

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும்.

அந்த வரிசையில் உள்ள கோயில்களான …

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.

2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) – காலை வழிபாட்டிற்குரியது.

3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) – வன்னிவனம் – உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.

4. ஆலங்குடி (திரு இரும்பூளை) – பூளை வனம் – மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.

5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) – அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.

கோயில் வரலாறு :

பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். அக்காலம் இளைய பெண்ணும் கணவன் வீட்டிலிருந்து வந்திருந்தாள். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, “இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி” என்றும் வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் இடபவாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் “அவள் இவள்” என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

 ஹரித்வாரமங்கலத்தில் சிவபெருமானின் பாதங்களுக்கு அருகில் பூமியை தோண்டியதற்காக சிவபெருமானின் மன்னிப்பைப் பெற விஷ்ணு இங்கு பிரார்த்தனை செய்தார்.

பிராத்தனை :

கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்களும், மேனி அழகு, தோற்றப்பொலிவு இல்லாமல் இருப்பவர்களும் இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் நலம் பெறலாம் என்பது ஐதீகம்.

Photos:

https://draft.blogger.com/blog/post/edit/2086351580175005259/8642415909833437165

திறக்கும் நேரம் :

காலை 6 .30 மணி முதல் 12  மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 .00  மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

Phone number :  4374 275 441, 264586

செல்லும் வழி :

கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.

Location:

திருச்சிற்றம்பலம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply