Sri Ramanatheswarar Temple – Esalam

ஸ்ரீ ராமநாதர் ஈஸ்வரர் கோயில் – எசாலம்

Sri Ramanatheswarar Temple- Esalam

இறைவன் : ராமநாதீஸ்வரர்

இறைவி : திரிபுர சுந்தரி

ஊர் : எசாலம்

மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு

நம் மனம்  இயற்கையுடன் ஒன்றி போகும் அளவுக்கு வழி நெடுகே வயல்கள் ,கிராமத்து சூழல்கள் நிறைந்த பகுதி . 1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி எசாலம் , பிரம்மதேசம் , எண்ணாயிரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ‘ஸ்ரீ ராஜராஜ  சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது . இந்த மூன்று இடங்களிலும் சோழர்களது கோயில்கள்  உள்ளன .

நாம் இப்போது எசாலம் ராமநாத ஈஸ்வரர் கோயிலை பற்றி பாப்போம் . இக்கோயிலானது ஊரின் நடுவிலேயே இருக்கிறது . கோயிலின் முன் பகுதியில் பெரிய ராஜகோபுரம் இல்லை ஆனால் ஒரு சிறு விமானம் போல் அமைத்துள்ளார்கள். அதில் ஈசனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்து உள்ளது போல் சுதை சிற்பமாக அமைத்துள்ளார்கள் .

இப்போது நாம் அவ் நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றால் பலி பீடம் மற்றும் நந்தி மண்டபத்தை காணலாம் . நந்தி மண்டபத்தில் உள்ள நந்தி பிற்காலத்தை சேர்ந்தது பீடத்தின் அருகிலேயே கீழ் பகுதியில் பழைய நந்தியையை நிறுவியுள்ளார்கள் .   முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விமானம் வட்ட வடிவத்தில் அமைந்திருக்கிறது. கருவறையுடன் 16 கல் தூண்களையும் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

உள் மண்டபத்தினுள் சென்றதுமே நாம் தரிசிப்பது திரிபுரசுந்தரி தாயாரை . தாயை போல் கருணை முகத்துடன் நம்மை அவர் வரவேற்கிறார் . வலது புறத்தில் உள்ள கருவரியேல் இறைவன் ராமநாத ஈஸ்வரர் கிழக்கு நோக்கி நமக்கு தரிசனம் தருகிறார் . அவரை வணங்கினாலே நாம் பிறவி பலனை அடைந்த ஒரு திருப்தி நமக்கு ஏற்படுகிறது .

பிரதோஷ நாளில் வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை, நிலத் தகராறுகள், வாழ்க்கையில் அடுக்கடுக்கான துன்பங்கள் நீங்குவதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் நான்கு திசைகளிலும் நான்கு தேவர்களின் சிலைகள் அழகிய கலைநயத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு நோக்கி இந்திரன்; மேற்கு நோக்கி திருமால், வடக்கு நோக்கி பிரம்மன், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சிலைகள் நம்மை கவரும் வண்ணம் உள்ளன . சுல்தானின் படையெடுப்பின் போது இக்கோயில் உள்ள சிலைகள் மிகவும் சேதம் படுத்தப்பட்டுள்ளது .இங்குள்ள தட்சணாமூர்த்தி கையில் வீணையுடன் காணப்படுகிறார் ஆனால் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது . கால்கோபுரத்தின் மீது நடராஜர் ,நரசிம்மர் ஆகியோரின் சிலைகள் உள்ளன .

கோயில் காலம் :
பிற்காலச் சோழர்களில் பெரும்புகழ் பெற்ற ராஜேந்திரசோழ மன்னரால் இந்தக் கோயில் கி.பி.1032-ல் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.ராஜேந்திர சோழனின் ராஜகுருவாக இருந்தவர் சர்வசிவ பண்டிதர். ஒருநாள் ராஜேந்திர சோழன் நீராடிக் கொண்டிருந்த தருணத்தில், சிவபெருமானின் மகிமைகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தவர், ருத்ரனுக்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி அன்று ‘ஶ்ரீராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் சிவபெருமானுக்கு அழகுற ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. என்று கூறப்படுகிறது .

கல்வெட்டு செய்திகள் :

தொல்லியல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் ‘ஶ்ரீராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டதாகவும், ஆலயத்தின் இறைவனுக்கு, ‘திருவிராமீசுவரமுடைய மகாதேவர்’ என்ற திருப்பெயர் வழங்கியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொண்டதாகவும், பல்வேறு நிவந்தங்கள் வழங்கியதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு 1987-ம் வருடம் ஆலயத்துக்குத் திருப்பணிகள் மேற்கொண்டபோது, ஓரிடத்தில் சிறு மணல் திட்டு காணப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டியபோது, நான்கு புறமும் சுவர்களைக் கொண்ட ஓர் அறை போன்ற அமைப்பும், அதற்குள் 23 ஐம்பொன் சிலைகள், பூஜைப் பொருள்கள், செப்பேடுகள் என்று 37 பொருள்கள் சற்றும் சிதைவடையாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் நிபுணர்கள், சிலைகள் அனைத்தும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட முகலாயர்களின் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

ஒரு வளையத்தில் கோக்கப்பட்ட 15 செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அந்த வளையத்தில் சோழமன்னரின் அரச முத்திரை காணப்படுவதுடன், ‘இது ராஜேந்திர சோழனின் சாசனம்’ என்ற வார்த்தைகள் கிரந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பக்கங்கள் வடமொழியிலும், 11 பக்கங்கள் தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

கல்ராயன் சிலை

கோயிலுக்கு வெளியே கல்ராயன் சிலை உள்ளது . கால்நடைகளுக்கு வியாதிகள் வந்தால் இவரின் சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை கால்நடைகளுக்கு கொடுத்தால் நோய்கள் தீர்ந்து விடுவதாக ஊர் மக்கள் கூறுகிறார்கள் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 8 .00 – 10 .00 , மாலை 5 .30 – 7 .00 , Contact Number :Mr. Devanathan Gurukal- 9894882813

செல்லும் வழி :
சென்னை திருச்சி தேசிய சாலையில் திண்டிவனம் தாண்டி பேரணி என்ற ஊருக்கு போகும் வழி வலதுபுறத்தில் வரவும் அங்கிருந்து 8 கிமீ சென்றால் இக்கோயிலை அடையலாம் . அங்கிருந்து பிரம்மதேசம் 3 km தொலைவில் உள்ளது . 

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/04/sri-ramanathaeswarar-temple-esalam.html

Map:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *