Sri Pasupatheeswarar Temple – Thirukondeeswaram

ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயில் – திருக்கொண்டீஸ்வரம்

Pasupatheeswarar temple - Thirukondeeswararm

இறைவன் :பசுபதீஸ்வரர்

இறைவி :சாந்த நாயகி

தல விருட்சம்:வில்வம்

தல தீர்த்தம்:க்ஷீரபுஷ்கரிணி

புராண பெயர்:திருக்கொண்டீச்சரம்

ஊர்:திருக்கொண்டீஸ்வரம்

மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு

பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.

திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 72 வது தலமாகும்.
தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில் 135 வது தலமாகும் .

இக்கோயிலில் சிறப்பானவையாக கருதப்படுவது இறைவன் பிளந்த திருமேனியுடன் சுயம்புவாக காட்சிதருகிறார் . மற்றும் இக்கோயிலில் மிக பழமையான மூதேவி (ஜேஷ்டா தேவி ) சன்னதி உள்ளது .

கோயில் அமைப்பு :
இக்கோயிலுக்கு ஒரே முகப்பு மட்டுமே உள்ளது . ராஜகோபுரம் கிடையாது . மூன்று புறமும் நீரால் சூழப்பட்டுள்ளது இந்த அகழி போன்ற நீரே இக்கோயிலின் தல தீர்த்தமாகும் . முகப்பை கடந்து உள்ளே சென்றால்  கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. அடுத்து இரண்டாம்  வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம்.

கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபடவந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜுரதேவராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. மற்றொரு தூணில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் உள்ளன.

இறைவன் சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறார் .ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். பகவானால் காமதேனுவாக சாபம் பெற்ற உமாதேவி இத்தலத்தில் பூமியை கொம்பினால் கிளறிக்கொண்டே வந்தபோது இறைவனின் தலையில் கொம்பு பட்டு இரத்தம் வடிந்தது. பின் உமாதேவி ஈசனின் சிவலிங்கத் திருமேனியைப் பாலால் அபிஷேகம் செய்து காயத்தை ஆறச்செய்து சாப விமோசனம் பெற்றாள். இதன் காரணமாக இன்றும் லிங்கத்திருமேனியில் கோட்டின் வடு காணப்படுகிறது. ஆலய குருக்களிடம் சொன்னால் அவர் அந்த வடுவை காட்டுவார் .

வௌவால் நெத்தி மண்டபத்தின் வலது புறத்தில் அம்பாள் சாந்தநாயகி தனி சன்னதியில் உள்ளார். வௌவால் நெத்தி மண்டபத்தில் ஆப்தசகாய மகரிஷி உருவமும் உள்ளது .

அப்படியே கோயிலை வளம் வந்தால்  விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகள் உள்ளன.

அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான “ஜேஷ்டாதேவி’ அருள்பாலிக்கிறாள். ஜேஷ்டா என்றால் மூதேவி என்று அர்த்தம். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள். இவளே மூத்த தெய்வமாவாள் ஆனால் இப்போது யாரும் இவளை வணங்குவதில்லை . இவள் வழிபாட்டுக்கு உரியவள். சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும்.

குரு பகவான் வழிபட்டு பேரு பெற்ற நான்கு சிவலிங்கங்களில் இத்தலம் இரண்டாவது  திருத்தலமாகும் . எனவே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் இறைவன் தீர்த்த வாரி வழங்குவார். இதில் பங்குகொள்பவர்களின் பாவம் நீங்கி சுக வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/12/sri-pasupatheeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :
 காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Contact Details: 04366 – 228 033 , Venkatesaha Gurukal – 94430 38854

செல்லும் வழி :
நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில்  இத்தலம் அமைந்துள்ளது.திருவாரூர் – நன்னிலம், மயிலாடுதுறை – திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), திருவாரூர்  – கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் “தூத்துகுடி நிறுத்தம்”” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள இந்த கோயிலையடையலாம்.

Location :

Thiruchitrambalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *