Kabilar Rock / Kabilar Kundru – Thirukovilur

கபிலர் குன்று – திருக்கோயிலூர்

Kabilar Kundru

திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள “கபிலர் குன்று” என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த கபிலர் குன்றுக்கு பின் ஒரு நட்புக்கு இலக்கணமான இரு நண்பர்களின் கதையும் , அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான கதையும் சுமந்து இருக்கிறது . இந்த கற்பாறையில் ஒளிந்திருக்கும் அந்த கதை நமக்கு தெரிந்தால் நம் இதயம் சிறிது கனத்து போவது உறுதி .

நாம் பாரி மகளிர் பாடிய இந்த புறநானூறு பாடலை நாம் படிக்கும் போது கேட்டிருப்போம் ,

“அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்,

இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில்

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!”

நூல்: புறநானூறு (#112)

பாடியவர்: பாரி மகளிர்

சூழல்: பொதுவியல் திணை, கையறு நிலை.

ஐந்தே வரிகள்தான். அன்னிக்கு வந்ததும் இதே நிலாதான், ஆனால் அப்போது எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார், எங்கள் குன்றிலும் பிறர் ஆக்கிரமிக்கவில்லை. இன்னிக்கு வந்திருப்பதும் அதே நிலாதான். இப்போது, வெற்றி ஒலி செய்யும் முரசைக் கொண்ட மூவேந்தர்கள் எங்கள் குன்றைக் கைப்பற்றிக்கொண்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்துவிட்டோம்.

மேலோட்டமாகப் படித்தால் சாதாரணமான பாடல்தான். ஆனால் ’அற்றைத் திங்கள்’, ‘இற்றைத் திங்கள்’ என்று இரண்டு ராப்பொழுதுகளுக்கு  நடுவே தங்கள் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுவிட்ட நிலைமையை

ஐந்தே வரிகளில் எத்தனை அழகாக சொல்லி விடுகிறார்கள் பாருங்கள்.

அப்படி என்ன அவர்களுக்கு நடந்துவிட்டது , யார் இந்த பாரி ? யார் இந்த கபிலர் ? யார் பாரி மகளீர் ? நமக்குள் எழும் இந்த வினாக்களுக்கு வரும் வரலாற்று நிகழ்வு தெளிவுபடுத்தும் .

  கடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பாரி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என்றும் அழைக்கப்பட்டான். சேரர்களையும் சோழர்களையும் நடுநடுங்க வைத்த மன்னன் இந்த வேள்பாரி.

பறம்பு மலை, இன்றைய நாளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்து சிங்கம்புணரியில் உள்ளது. வெறும் 300 ஊர்களை உள்ளடக்கிய பறம்பு நாட்டின் மன்னன் மூவேந்தர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்ட காரணம், போர்த் திறம் மட்டுமன்று கொடைத்திறமும்தான். `முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி’ என்று கடையெழு வள்ளல்களில் ஒருவன். தன்னலமற்ற கொடைக்கு மட்டுமல்ல; ஒப்புயர்வற்ற நட்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவன் பாரி.

சங்கப் புலவர் கபிலர் பாரியின் மிக நெருங்கிய நண்பர். இவர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். சங்கத்தமிழ் பாடல்களில் கபிலரின் பங்கு அளப்பரியது. குறிப்பாகக் குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்குப் பாரியின் புகழைப் பாடி வந்தார் கபிலர்.

இவ்வளவு நற்பெயரை கொண்ட பாரியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் நாம் போற்றும் மூவேந்தர்கள் அவரை அழிக்க நினைத்தனர் .பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அவனை அழிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பாரிக்கு இரண்டு மகள்கள். அங்கவை, சங்கவை. அழகும், அறிவும் நிரம்பப் பெற்றவர்கள். பாரியைப் போன்றே ஈகை குணம் கொண்டவர்கள். மூவேந்தர்கள் மூவரும் பாரியிடம் சென்று பெண் கேட்டனர். அவர்கள் மூவர், பட்டத்து ராணிகளும் உண்டு. இருந்தாலும் அந்த இரண்டு பெண்களைக் கேட்டனர். பாரி மறுத்தான். இதற்காகவே காத்து இருந்த மூவேந்தர்கள் பறம்பு நாட்டின் மீது போர் தொடுத்தனர். கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டனர். நாட்கள்தான் போனதே தவிர கோட்டையை பிடிக்க முடியவில்லை. ஆனால் நாட்டு மக்கள் அவதிப்பட ஆரம்பித்தினர்.

பாரியின் நண்பரான கபிலர்  பாரியின் சார்பாக மூவேந்தர்களை சந்தித்து போரை நிறுத்தும்மாறு கேட்டு கொண்டார். பாரியின் பெருமையை எடுத்துக் கூறினார். அப்பிடிக் கூறும் போது பாரி புலவர்கள் கேட்டால் நாட்டையே கொடுத்து விடுவான் என்று ஒரு வார்த்தை சொல்லுகிறார். பொறி தட்டியது மூவேந்தர்களுக்கு , புலவர்கள் போல வேடம் இட்டுக் கொண்டு பாரியின் கோட்டைக்குள் சென்று பாரியைச் சூழ்ந்து கொன்று விடுகின்றனர். நாட்டை எடுத்துக் கொண்டு பாரி மகளிரை அரசவையில் வைத்து அவமானப்படுத்தி வெளியே துரத்தி விட்டனர். கபிலர் மனமுடைந்து போகிறார்.பாரி மகளிரை மனதில் கொண்டு அவர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

அடுத்து நடந்ததுதான் இன்னும் கொடுமை. மூவேந்தர்களுக்கு பயந்து எந்த குறு நில மன்னர்களும் பாரி மகளிரை மணம் புரிய முன் வரவில்லை , பாரியின் நண்பர்களே எந்த உதவியும் செய்யவில்லை. அந்த அளவிற்கு மூவேந்தர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு சங்கத் தமிழ்க் கவிஞன், நாடு நாடாகப் போய், பாரி மகளிருக்காக, கையேந்தினார்.

கடைசியில் திருக்கோயிலூர் மலையமான் காரி துணிஞ்சி முன் வந்து அங்கவையை மணம் புரிந்தான்.மீண்டும் வந்த மூவேந்தர்கள் அவனைச் சூழ்ந்து கொன்னாங்க! அங்கவை தீக்குளித்து இறந்து போகிறாள். சங்கவையைச் சொந்தக்காரர்களிடம் ஒப்படைச்சிட்டு, அதே திருக்கோயிலூரில், கபிலர் வடக்கிருந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த குன்றை தான் இபோது நாம் காணும் கபிலர் குன்று .

நாம் போற்றும் மூவேந்தர்களின் சரித்திரத்தில் மறைந்து இருக்கும் கருப்பு பக்கங்கள் இது . இப்பொது பாரி மகளிர் எழுதிய அந்த பாடலை மறுமுறை படித்து பாருங்கள் , அவர்களின் வேதனையும் , துயரங்களும் நமக்கு புரியும் .

குன்றின் அமைப்பு :

கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது. கட்டட அமைப்பை கருத்தில் கொண்டு, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் அல்லது அந்த ஆண் உருவம் பாரி மற்றும் கபிலர் ஆகியோர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது . இவ் கபிலர் குன்று  தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,”செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது”  எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

சங்கப்பாடல் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தார் எனக் கூறும்போது, கல்வெட்டானது தீயில் இறங்கி உயிர் நீத்தார் என்கிறது.

இக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/10/kabilar-kundru-thirukoilur.html

அமைவிடம் :

விழுப்புரத்தில் இருந்து சுமார் 40 km தொலைவில் திருக்கோயிலூர் உள்ளது . பேருந்து நிலையத்தில் இருந்து 2 km தொலைவில் உள்ளது . வீரட்டானேஸ்வரர் கோயிலின் அருகில் இக்குன்று தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *