Sri Abathsahayeswarar temple -Alangudi

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில் – ஆலங்குடி

இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர் ,காசி ஆரண்யேஸ்வரர்

இறைவி : ஏலவார் குழலி

உற்சவர் : தட்சிணாமூர்த்தி

தல விருச்சம் : பூளை எனும் செடி

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி

புராண பெயர் : திருவிரும்பூளை, இரும்பூளை

ஊர்  : ஆலங்குடி

மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , வள்ளலார்

சீரார்கழ லேதொழு வீர்இது செப்பீர்

வாரார்முலை மங்கையொ டும்உடன் ஆகி

ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்

காரார்கடல் நஞ்சமுது உண்ட கருத்தே

– திருஞானசம்பந்தர்

நடுநடுங்கா நின்றதுள்ள முனைநம்பினேன்

        நம்பினேன் வட கயிலையாய்

உல்லாச பரமகுரு நாதனே ஆலடியில்

        உறைகின்ற பரதெய்வமே

ஒன்றாகி ஆனந்த உருவாகி என்னுயிர்க்(கு)

        உயிரான பரமசிவமே

– வள்ளலார் ( திருவருட்பா )

தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இந்த தலம் 161 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்களில் 98 வது தலமாகும் . தட்சணாமூர்த்தி இங்கு குருவாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்ததால் இத்தலம் குரு தலமாக விளங்குகிறது . பஞ்ச ஆரணிய  தலங்களில் இத்தலமானது 4  வது தலமாகும் . பூளை வனம் , மாலை  நேரத்து வழிபாட்டுக்கு உகந்தது .

கோயில் அமைப்பு :

ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் ஊரின் நடுவே கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தை ஒட்டி ” கலங்காமல் காத்த விநாயகர் ” சன்னதி முதல் பிரகாரத்தில் இருக்கிறார் . அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்வோம் . இத்திருக்கோயிலின் அமைப்பு சற்று வித்தியாசமானது. ஆம், உள்ளே நுழைந்ததும் நம் கண்ணில் படுவது தெற்கு நோக்கிய தாயார் எழில்குழலி சன்னதி.   அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம். இதன் பிறகு குரு சன்னதி வருகிறது. மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கோயிலின் உள்பிரகாரத்தில் முருகன், லட்சுமி, நால்வர், சூரியேசர், சோமேசர், குரு சோமேசேசுரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணு நாதர், பிர்மேசர் ஆகிய சப்த லிங்கங்களோடு, காசி விசுவநாதர், விசலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர்.

இறைவன் சன்னதி முன் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் செப்பு திருமேனியோடு நந்தி உள்ளார் .ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கிய சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

குரு தட்சணாமூர்த்தி :

இங்குள்ள தட்சணாமூர்த்தி இங்கு குருவாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்துள்ளார் .

இக்கோவிலில் குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலர் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலை, சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன் நாம அர்ச்சனை, பாலாபிஷேகம் மற்றும் குரு ஹோமம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கி குரு பகவான் அருள்புரிவார் என்பது ஐதீகம்.

அம்மன் இங்கு தவமிருந்து இறைவனை திருமணம் செய்துகொண்டார் . தட்சணாமூர்த்தி உற்சவ மூர்த்தியாக உள்ள ஒரே தலம் .

தல வரலாறு  :

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் இத்தலத்திற்கு வரும் போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றி காட்சி தந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறி பாறையில் மோதிய போது காத்த விநாயகர், கலங்காமல் காத்த விநாயகர் என்று இத்தலத்தில் போற்றப்படுகிறார். தேவர்களை காக்க வேண்டி ஆலகால விஷத்தை இறைவன் அருந்தி, காத்தருளியதால் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

தட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் சுந்தரர் சிலை இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

விழாக்கள் :

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மகா குரு வாரத்தன்று புனித நீர் கொண்டு வருதலும் பஞ்சமுக தீபாராதனையும், மாசி மாத கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும், விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது. தைப்பூசத்திலும் பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியைக் கொண்டு 10 நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.

இக்கோயிலானது சோழர்கள் காலத்தில் புனரமைக்கப்பட்டு பின்பு விஜயநகர மற்றும் மராத்தியர் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது .

சிவபெருமான் சுயம்பு வடிவத்தில் ஸ்தலச் செடியான பூலையின் கீழ் வந்ததால், இந்த இடம் இரும்பூலை என்று அழைக்கப்பட்டது. மற்றொரு பதிப்பில், இந்த இடம் “பூலைவாலா நதி” நதிக்கரையில் உள்ளது. எனவே இந்த இடம் இரும்பூலை என்று பெயர் பெற்றது. இந்த நதியானது கோயிலுக்கு வெளியே ஓடுகிறது .

இக்கோயில் திருவிடைமருதூரில் பரிவார கோவிலாக கருதப்படுகிறது. மற்றவை. 1 திருவலஞ்சுழி (விநாயகர்), 2. திருவேரகம் (முருகன்), 3. திருவாவடுதுறை (நந்தி – ரிஷபம்), 4. சூரியனார் கோயில் (நவக்கிரகங்கள்), 5. செங்கனூர் (சண்டிகேஸ்வரர்), 6. தில்லை என்ற சிதம்பரம் (நடராஜர்) மற்றும் 7. (சோமாஸ்கந்தர்).

திறந்திருக்கும் நேரம் :

காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

contact Number : 4374 269 407

செல்லும் வழி :

திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆலங்குடிக்கு செல்லும் பேருந்து வசதிகள் உண்டு.கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

திருச்சிற்றம்பலம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply