Sri Thiruvatteeswarar Temple – Triplicane , Chennai

ஸ்ரீ  திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் -திருவட்டீஸ்வரன் பேட்டை -சென்னை

Sri Thiruvatteeswarar temple - Triplicane

மூலவர் – திருவேட்டீஸ்வரர்

அம்பாள் – செண்பகவல்லி தாயார்

தல விருச்சம் – செண்பக மரம்

பழமை          – 1000 வருடங்கள்

தீர்த்தம் –  செண்பக தீர்த்தம்

ஊர் – திருவல்லிக்கேணி , சென்னை

தொண்டை நாட்டில்  திருவேட்டுநகர், திரு வேட்டீசுரம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை `சிவ லோகத் தலம்’ என்று கூறுவர் பெரியோர். தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாய் `தெண்ணீர் புனற்கெடில வீரட்டமுந் சீர்காழி வல்லம் திருவேட்டியும்’ என்று திருநாவுக்கரசரால் காப்புத் திருத் தாண்டகத்தில் பாடப்பட்டுள்ளது. இத்தொடரே இக்கோயில் ஒரு வைப்பு தலம் என்பதற்கு சான்றாகும் .

இலக்குமி அம்மையார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயை கைபிடித்ததால் பார்த்தசாரதிக்கு இது வேட்டகம் -மாமியார் வீடு ஆனதால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது.

செண்பக வனத்தில் தவம் செய்த செண்பகவல்லியை தாயாரை மணந்த திருவேடீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . இவர் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார் .

இவர் தலையில் வெட்டு தழும்புடன் காட்சி தருகிறார் . இந்த தழும்பு அர்ச்சுனனால் உண்டாக்கப்பட்டது . அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற வழிபட்டபோது வேடுவனாக வந்த சிவனை உணராமல் , அவரின் தலையில் அடிக்க , தலையில் வெட்டுண்டு தழும்பு உருவானது . வேடுவனாக இறைவன் காட்சி தந்ததால் வேட்டீஸ்வரன் என பெயர் பெற்றார் .

திருவேட்டீஸ்வரர் என்னும் கருவறையில் உள்ள லிங்கம் பதினேழு நித்திய  லிங்கங்களில் ஒன்று என சூத முனிவர் தன திருவேட்டீஸ்வரர் தல புராணத்தில் கூறியுள்ளார் .

இக்கோயிலானது 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் . மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோயில் நிலங்களுக்கு வரி செலுத்து வதிலிருந்து விலக்கு அளித்து கவுல் ஏற்பட்டது. எனவே 16,17ம் நூற்றாண்டில் இக்கோயில் இருந்துள்ளது. நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு பால், புஷ்பம் நவாப் பரம்பரையினர் மூலமாக இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோவில் அமைப்பு

திருக்கோவில் நெடிது உயர்ந்த ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், சிவதத்துவங்களை உணர்த்தும் அழகிய சுதை சிற்பங்களுடன் காட்சி அளிக்கிறது. கருவரியானது கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது , தாயார் சன்னதி தென் புறம் நோக்கி அமைந்துள்ளது . உள்புற கோஷ்டத்தில் விநாயகர் ,தட்சணாமூர்த்தி ,விஷ்ணு ,துர்கை ஆகியோரும் , நடராஜர் ,சோமஸ்கந்தர்,அறுபது மூவர் ,விநாயகர் ,வீரபத்திரர் ,அருணாச்சலேஸ்வரர் ,பாலமுருகன் ,நால்வர் ,சேக்கிழார் ,சுந்தரமூர்த்தி நாயனார் ,பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் ,மெய்கண்ட சிவம் ,உமாபதி சிவம் ஆகிய சந்தான குறவர்கள்  ஆகியோர்கள் உள்ளார்கள் . வெளிப்பிரகாரத்தில் விஸ்வநாதர் ,ராமலிங்கர் ,ஆறுமுகர் மற்றும் நவகிரகம் சன்னதிகள் உள்ளன .

ராகு கேது பரிகார தலமாகவும் கருதப்படுகிறது .

இக்கோவிலின் தூணில் மகாலக்ஷ்மி கலசத்துடன் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பம் உள்ளது . விநாயகருக்கு தனி சன்னதி எதிரே அமைந்து உள்ளது. இங்கு உள்ள சரஸ்வதிக்கு வீணை கிடையாது .

 திறக்கும் நேரம் :

காலை 6.00 மணி முதல் 11.00 வரையும்

மாலை 5.00 முதல் 9.00 மணி வரை

செல்லும் வழி :

திருவல்லிகேணி ஜாம் பஜார் உள் பக்கத்திலிருந்தும் ஸ்டார் தியேட்டர் எதிர் சந்திலிருந்தும்  இக்கோவிலுக்கு செல்லலாம் . இங்கிருந்து பார்த்த சாரதி கோவில் மிக மிக அருகிலேயே உள்ளது .

Location:

Leave a Reply