Sri Vilvaranyeswarar Temple - Thirukollampudur
Sri Vilvaranyeswarar Temple - Thirukollampudur

Sri Vilvaranyeswarar Temple – Thirukollampudur

ஸ்ரீ வில்வனேஸ்வரர் கோயில் – திருக்கொள்ளம்புதூர்

Sri Vilvaranyeswarar Temple - Thirukollampudur

இறைவன் : வில்வனேஸ்வரர்

இறைவி : சௌந்திரநாயகி

தல விருச்சம் : வில்வம்

தல தீர்த்தம் : பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம்,                                         

                        முள்ளியாறு.

ஊர் : திருக்கொள்ளம்புதூர்

மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

 தேவர்பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர்

        எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் செய்து

மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி

        ஒழிந்திடவும் மிக்கஓர் விரைவால் சண்பைக்

காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக்

        கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி

நாவலமே கோலாக அதன்மேல்நின்று

        நம்பர் தமைக்கொட்டம் எனநவின்று பாட.

– திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இத்தலமானது 177 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 113 வது தலமாகும் . பஞ்ச ஆரண்ய தலங்களில் வில்வவன தலமாகும் . இத்தலம் பஞ்ச ஆரண்ய தலங்களில் அர்த்தஜாம பூஜைக்குரிய தலமாகும் . பஞ்ச ஆரண்ய தலங்களில் மற்ற நான்கு தலங்களை பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் .

கோயில் அமைப்பு :

ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் சுதை சிற்பமாக உள்ளன . துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான முற்றவெளியைக் காணலாம்.இரண்டாவது வாயிலிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன.  தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து இரண்டாம்  பிரகாரத்துள் நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது.

உள்ளே நுழைந்தால் செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன.

துவராக விநாயகர் மற்றும் முருகரை வணங்கிவிட்டு நாம் மூலவர் உள்ள மண்டபத்தை அடையலாம் . இறைவன் வில்வனேஸ்வரர் சுயம்பு லிங்கமாக வேண்டுவர்களுக்கு வேண்டுவதை தந்து அருள்பாலிக்கிறார் .

 கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் உள்பிரகாரத்தை வலம் வரும்போது   நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன. பஞ்ச ஆரண்ய தலங்களின் மூலவர்கள் பெயரில் இங்கு லிங்கங்கள் உள்ளன .

தல வரலாறு :

சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும்போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட ‘மேகமழுங் கொள்ளம் பூதூர்’ என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.இவ்வாற்றின் எதிர்க்கரையில் ஞானசம்பந்தர் கோயில் உள்ளது. இக்கோயிலை ‘நம்பர் கோயில்’ என்றழைக்கின்றனர். நம்பர் என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும். இந்த ஆற்றை ஓடம் போக்கி ஆறு என்றும் மக்கள் வழங்குகின்றனர்.

பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது.   எனவே,இத்தலம், பிரம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது.

அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது.

விநாயகர், கங்கை, காவேரி, சாண்டில்யர், ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியர், கோச்செங்கட்சோழர்,பிருகு முனிவர், காச்யபர், மார்கண்டேயர், கண்வர்,வசிஷ்டர், வாமதேவர் ஆகியோரும் பூஜித்துள்ளனர். 

கல்வெட்டுகள் :

மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுள் உள்ளன.கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி ‘கொள்ளம்பூதூர் உடையார் ‘ என்றும்; தேவி ‘அழகிய நாச்சியார் ‘ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள் வழிபாட்டுக்கும் நிவந்தங்கள் விட்ட செய்திகளை இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.கல்வெட்டில் இத்தலம் ‘அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்பூதூர் ‘ என்று குறிக்கப்பட்டுள்ளது.

Temple Photos :

https://alayamtrails.blogspot.com/2025/10/sri-vilvaranyeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00  மணி முதல் 12 .30  மணி வரை , மாலை 4 .00  மணி முதல் 8 .30  மணி வரை

Contact Number: 4366 262 239

செல்லும் வழி :

கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக கொரடாச்சேரி செல்லும் சாலை வழியில் தெற்கே சுமார் 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கொரடாச்சேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

பஞ்ச ஆரண்ய தலங்கள்:

1 .கர்ப்பரக்ஷாம்பிகை சமேத முல்லைவன நாதர் கோயில் (விடியற்காலை  )- திருக்கருகாவூர்

2 . சௌந்தரநாயகி சமேத சாட்சிநாதர்  கோயில் ( காலை ) – அவளிவநல்லூர்

3 . அலங்காரநாயகி சமேத பாதாளேஸ்வரர்  கோயில் ( உச்சிக்காலம்)- ஹரிதுவாரமங்கலம்

4 . ஏலவார் குழலியம்மை சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் ( மாலை )- ஆலங்குடி

5 . சௌந்தரநாயகி சமேத வில்வனேஸ்வரர் கோயில் (அர்த்தஜாமம் ) – திருக்கொள்ளம்புதூர்

திருச்சிற்றம்பலம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply